காட்சி மொழி தான் சினிமா என அழுத்தமாக பதிவு செய்கிறது கமலின் 'பேசும் படம்'

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பேசும் படம் குறித்து ஒரு பார்வை
காட்சி மொழி தான் சினிமா  என அழுத்தமாக பதிவு செய்கிறது  கமலின் 'பேசும் படம்'

தமிழ் சினிமா பேசத் துவங்கியதற்கு பிறகு வெளியான மௌன படம் தான் இந்த பேசும் படம். தமிழ் சினிமாவின் பேசும் படங்கள் வரத் துவங்கியவுடன் எல்லாவற்றையும் உரையாடல்களாகவே கதை சொல்லிக்கொண்டிருந்தன. பின்னர் காட்சிக்கு மொழிக்கு திரைப்படங்கள் மாறத் துவங்கின. ஸ்டுடியோக்களுக்கு வெளியே படங்கள் படமாக்கப்பட்டன. 

மக்கள் விதவிதமான காட்சிகள் உரையாடல்களை மக்கள் ரசித்துக்கொண்டிருந்த நேரம் மீண்டும் மௌனப் படமாக வந்து ஆச்சரியம் அளித்தது பேசும் படம். படத்தில் உரையாடல்களே இல்லை. படத்தின் துவக்கத்தில் கதை, திரைக்கதை இயக்கம் சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவ் என்ற பெயர் திரையில் வந்தது. வசனம் என்ற ஒரு பெயர் அந்த இடத்தில் இல்லை. வசனமே இல்லாமல் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு முடியுமா? எப்படி? 

சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல் படத்துக்கு இடையில் காட்சி விளக்கம் அளிக்கப்படுமோ ? இப்படி பல எண்ணங்கள் படத்தை பார்க்கும் முன் பார்வையாளர்களுக்கு இருந்திருக்கும். இப்படி பல யூகங்களுடன் படம் பார்க்க சென்ற பார்வையாளர்களுக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. 

படம் வழக்கமான படமாகவே இருந்தது. காட்சிகள் புரிந்தது. ஆனால் வசனம் இல்லை. புதிய முயற்சிகள் என்றால் கமல், நடிப்பு என்றால் கமல் என பெயர் பெற்றிருந்த கமல்ஹாசன் என்ற நடிகரால் மட்டுமே இயக்குநர் சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவிற்கு சாத்தியமாகியிருக்கிறது. 

கொஞ்சம் தவறினாலும் அது மேடை நாடகம் போல் மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவ் மற்றும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு திரையில் ஒரு காவியம் படைத்திருந்தார்கள். 

கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான கலைஞன். ஒரு மொழியில் அவர் படம் வந்தால் மற்ற மொழிகளுக்கும் மொழி மாற்றம் செய்யப்படும். ஆனால் இந்த படத்துக்கு வசனம் இல்லாததால் மொழி மாற்றம் செய்ய வேண்டிய பிரச்னை இல்லை. 

மேன்சன் ஒன்றில் வசிக்கிறார் கமல்ஹாசன். வேலை தேடும் இளைஞன். கையில் காசில்லை. சாலையோரம் பிச்சையெடுபவரின் முன் பந்தாவாக தன்னிடம் இருக்கும் ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு விளையாட்டு காட்டுகிறார் கமல். பதிலுக்கு அந்த பிச்சைக்காரனும் தன்னிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை நக்கலாக அவர் முன் எடுத்துக்காட்டுகிறார். கமலுக்கு ஏமாற்றமாகிவிடுகிறது. ஒருவேளை அவர்களுக்குள் இந்த விளையாட்டு தொடர்கதையாக இருக்கலாம்.  

கடை ஒன்றில் அமலாவை சந்திக்கிறார். அமலா கம்மல் ஒன்று தேர்வு செய்ய திணறுகையில் அவருக்கு தூரத்தில் சைகயாலேயே தேர்வு செய்ய உதவுகிறார். அமலாவும் தனது கண்களாலேயே சரியாக இருக்கிறதா என கேட்கிறார். இப்படி காட்சிகள் வசனமே இல்லாமல் மிக சுவாரசியமாக நகர்கிறது. யோசித்துப் பார்த்தால் இந்தக் காட்சிகளுக்கெல்லாம் வசனமே தேவையில்லை.

இந்த நிலையில் போதையினால் தன்னை மறந்த குடிகாரரை சந்திக்கிறார். அவர் ஏன் அப்படியிருக்கிறார் என்பதற்கும் அடுத்த காட்சியிலே விளக்கி விடுகிறார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். அவரது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருக்கிறார். தனது மனைவிக்கு போன் செய்து வெறுப்பாகி மீண்டும் நிறைய குடிக்கிறார். அல்லது இவர் இப்படி குடிப்பதனால் அவர் மனைவி அந்த முடிவை எடுத்திருக்கக் கூடும். 

 பின்னர் சாலையில் விழுந்து கிடக்கும் அவரை கமல் தனது அறைக்கு தூக்கி வருகிறார். அவரிடம் இருக்கும் பெரிய விடுதி அறை ஒன்றின் சாவி அவருக்கு கிடைக்கிறது. அங்கே சென்று அவரது விடுதி அறையின் சௌகரியங்களை அனுபவிக்கிறார். அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத, தேநீருக்கு கூட பணமில்லாத கமலுக்கு அந்த பெரிய விடுதியில் சொகுசு வாழ்க்கை சொர்க்கமாக தெரிகிறது.

எதிர் அறையில் அமலா இருக்கிறார். ஏற்கனவே இருவருக்குள்ளும் பரீட்யைமானதால் இருவரும் சகஜமாக பேசிக்கொள்கிறார்கள். அமலா, கமலை மிகவும் பணக்காரர் என்றே நினைக்கிறார். இருவரது அறைக்கும் சில அடி தூரம் இருப்பதால் அவர்கள் சைகை மொழியில் பேசிக்கொள்வது நமக்கு குறையாக தோன்றவில்லை. பின்னர் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது இரு காதலர்கள் சந்தித்துக்கொள்ளக் கூடிய நிகழ்வு என்பதால் அந்தக் காட்சியிலும் நமக்கு உரையாடல்கள் இல்லாதது பெரிதாக தோன்றியிருக்காது. 

கமல் கடத்தி வைத்திருக்கும் பணக்காரருடைய மனைவியின் காதலராக பிரதாப் போத்தன் வருவார். அவர் அந்த பணக்காரரை கொல்ல ஒருவரை அனுப்பவார். பிரதாப் போத்தன் அனுப்பும் ஆள் பணக்காரரின் இடத்தில் இருக்கும் கமல்ஹாசனை கொலை செய்ய முயற்சியிருப்பார். அவர் முயற்சிக்கும் காட்சிகளும் நகைச்சுவையாகவே படமாக்கப்பட்டிருக்கும். 

இப்படி படம் நெடுக உரையாடல்கள் எதுவும் இல்லாமல், ஆனால் படத்தில் நமக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக புரியும் படியே படமாக்கப்பட்டிருக்கும். இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனும் தன் பங்குக்கு உரையாடல்கள் செய்ய வேண்டிய வேலையை கையிலெடுத்துக்கொள்வார். நிறைய இடங்களில் மேடை நாடகங்களில் வரும் இசையை நியாபகப்படுத்தினாலும் அது பெரிதாக உருத்தவில்லை. 

விடுதியை முதலில் காட்டும்போதே அதன் நிறுவனர் ஒவ்வொருபடியாக முன்னேறி எப்படி இவ்வளவு பெரிய விடுதிக்கு உரிமையாளரானார் என்பது அந்த விடுதியில் இருக்கும் புகைப்படங்கள் சொல்லும். இறுதியாக அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் கமலுக்கு அது உழைத்து முன்னுக்கு வரவேண்டும், பிறரை ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது என்ற கதை சொல்வதாக காட்டப்படும். பணக்காரரும் தனது குடியை விட்டு மனைவியுடன் மீண்டும் இணைவார்.

ஆங்கிலப் படங்களுக்கு எல்லாம் வசனம் என யார் பெயரையும் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் தமிழில் கதையை வசனத்தின் வழியாகவே கடத்த முயல்வார்கள். அதனால் தான் வசனகர்த்தா தேவையாக இருக்கிறார். ஆனால் சினிமா என்பது காட்சிமொழி என்பதை அழுத்தமாக சொல்கிறது இந்த பேசும் படம். அதனால் தான் இன்றளவும் அந்தப் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com