உண்மையாக மாறிய ருத்ர தாண்டவம் படக் காட்சி?: செய்தியைப் பகிர்ந்து மக்களை எச்சரித்த இயக்குநர்
ருத்ர தாண்டவம் படக் காட்சியைப் போல நிஜத்திலும் நடைபெற்றுள்ளதாக, அந்தப் பட இயக்குநர் மக்களை எச்சரித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் சத்யசீலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், வருகிற 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது வீட்டு முகவரியை பயன்படுத்தி, ஊருக்கு சம்பந்தமே இல்லாத, சோளிங்கரில் இனிப்பு கடை நடத்தும் சென்னையை சேர்ந்த பிரேம்நாத் என்பவர் போட்டியிடுகிறார். கிறிஸ்தவரான பிரேம்நாத் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பதவிக்கு, இந்து ஆதிதிராவிடர் என சட்டத்திற்கு புறம்பாக சாதி சான்றிதழ் பெற்று போட்டியிடுவதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைமுறை துவங்கிய பின் அதில் தலையிட முடியாது. எனவே தேர்தல் முடிந்த பிறகு மனு தாரர் உரிய அமைப்பபை நாடலாம் என்று வழக்கை முடித்து வைத்தனர். இந்த செய்தியை பகிர்ந்த இயக்குநர் மோகன்.ஜி, ருத்ர தாண்டவம் திரைப்படம் இதைத் தான் சொன்னது. விழிப்புடன் இருங்கள் மக்களே என்று கேட்டுக்கொண்டார்.
ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இந்துக்கள் தங்கள் சாதியைப் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் சாதி, மத ரீதியிலான பிரச்னைகள் ஒரு தலைபட்சமாக அனுகப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.