'என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ்...' - தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிகாந்த் உருக்கம்
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியின் நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருதை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''மதிப்பிற்குரிய இந்த விருதைப் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மத்திய அரசுக்கு என் இதயப்பூர்வ நன்றி. இந்த விருதை என் குரு கே.பாலசந்தருக்கு சமர்க்கிறேன். இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூர்கிறேன்.
என் அண்ணன் சத்யநாராயணா எனக்கு ஒரு தந்தையாக இருந்து நல்லதை போதித்தார். என் நண்பர் பேருந்து ஓட்டுநர் ராஜ் பகதூருக்கு நன்றி. நான் பேருந்து நடத்துநராக இருந்தபோது அவர் தான் என்னில் இருக்கும் நடிப்புத் திறனை கண்டுகொண்டார். அவர் தான் எனக்கு நம்பிக்கை அளித்து என்னை சினிமாவில் நடிக்க தூண்டுகோலாக இருந்தார்.
மேலும் என்னுடன் பணிபுரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உடன் நடித்த நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி. தமிழ் மக்களுக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை. என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றி'' இவ்வாறு பேசினார்.