பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது அளிக்கப்பட்ட விருதை தனது குருநாதர் பாலசந்தர், தனது சகோதரர் சத்யநாராயணா, நண்பரும் பேருந்து ஓட்டுநருமான ராஜ் பகதூர் மற்றும் தமிழக மக்களுக்கு அவ்விருதினை சமர்பித்தார்.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மதிப்பிற்குரிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படத்தின் டிரெய்லர் இன்று (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் சந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.