செம்பருத்தியில் மாறும் கதாபாத்திரங்கள்: பார்வதியை முந்துவாரா ஐஸ்வர்யா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் பார்வதி - ஐஸ்வர்யா இடையேயான அதிகாரப்போட்டியால் ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.
செம்பருத்தியில் மாறும் கதாபாத்திரங்கள்: பார்வதியை முந்துவாரா ஐஸ்வர்யா?
செம்பருத்தியில் மாறும் கதாபாத்திரங்கள்: பார்வதியை முந்துவாரா ஐஸ்வர்யா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் ஆயிரம் நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

எனினும் அத்தொடரில் அடுத்தடுத்து கதாபாத்திரங்கள் மாற்றப்படுவது செம்பருத்தி தொடருக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கதை கிடைக்கவில்லை என்று கதாபாத்திரங்களை மாற்றுகிறீர்களா என்று ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

மக்களின் ஏக வரவேற்பைப் பெற்ற ஒரு தொடரில் முக்கிய கதாபாத்திரங்கள் அடிக்கடி மாற்றப்படுவது 'செம்பருத்தி' தொடராக மட்டும் தான் இருக்கும். 

செம்பருத்தி தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி தற்போது சிறையில் உள்ளதால், அந்த வீட்டின் இரு மருமகள்களுக்கு இடையே அதிகாரப்போட்டி ஏற்பட்டுள்ளதே கடந்த வார காட்சிகளாக இருந்தன.

இதில், கதையின் நாயகி பார்வதி பெரிய மருமகளாக இருந்தும் சிறிய மருமகள் ஐஸ்வர்யாவுக்காக விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவராக இருந்தாலும், ஐஸ்வர்யாவின் அவசர நடவடிக்கைகளில் ஏற்படும் சிக்கலான முடிவுகளால் ரசிகர்களின் பரிதாபத்தை அவர் சம்பாதித்துவிடுகிறார்.

நான் தான் அடுத்த அகிலாண்டேஸ்வரி என நினைப்பில் இருக்கும் ஐஸ்வர்யா, பார்வதிக்கு எதிராக செயல்பட்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கவும் தவறவில்லை.

ஆதித்யா குரூப்ஸ் ஆஃப் கம்பெனி நிறுவனத்தில் ஊழியர்களுடனான மோதல் தொடங்கி, முறைகேடாக டெண்டர் எடுப்பது, மூத்த தொழிலாளர்களை அடித்து அவமானப்படுத்துவது என அதகளம் காட்டும் ஐஸ்வர்யா, 'வீட்டின் முக்கிய முடிவுகளை நான் தான் எடுப்பேன். வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அகிலாண்டேஸ்வரி எனக்கு மட்டுமே கொடுத்துள்ளார்' என்று அனைத்திற்கும் முந்திக்கொண்டு நிற்பதாக கடந்த வாரம் எபிசோடுகள் முடிந்தன.

எப்படியாவது பார்வதியை முந்த வேண்டும் என்று ஐஸ்வர்யா எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன. அந்தவகையில் கடந்த வாரத்தின் எதிரொலியாகவே இந்த வார எபிசோடுகள் அமையவுள்ளன.
 
முன்பு இருந்ததைப் போன்ற அகிலாண்டேஸ்வரியின் பரபரப்புகளும், ஆதி - பார்வதி காதல் காட்சிகளும், வனஜாவின் வில்லத்தன நகைச்சுவைகளும் கடந்த இருவாரங்களாகவே இல்லை என்பது செம்பருத்தி தொடருக்கு ஏற்பட்டிருக்கும் தற்கால பின்னடைவு.

அதுமட்டுமில்லாமல் ஆதிக்கடவூர் பரம்பரையின் அதிகாரத்தை கைப்பற்றிய மருமகளாக மாறுவதற்கு ஐஸ்வர்யாவிற்கு யோசனைகளை வழங்கி வந்த அவரது அம்மா கதாபாத்திரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பருத்தி தொடரில் நாள்தோறும் மக்கள் பார்வையில் விழும் கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவது சில ரசிகர்ளை குழப்பமடையவும் வைத்துள்ளது.

ஏற்கெனவே இத்தொடரின் நாயகனாக ஆதி என்ற பெயரில் நடித்து வந்த கார்த்திக் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக சின்னத்திரை தொகுப்பாளர் அக்னி தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆயிரம் எபிசோடுகளாக பார்வதியுடன் காதல் புரியும் காட்சிகள் இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், புதிய ஆதியை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

தற்போது பார்வதிக்கு எதிராக தர்மயுத்தம் புரிந்து வரும் ஐஸ்வர்யாவும் முன்பு இந்த பாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி அசோக்குமாருக்கு பதிலாக மாற்றப்பட்டவர் தான்.

தொடரின் வில்லி வனஜாவின் ஜால்ராவாக இருக்கும் உமா என்ற கதாபாத்திரமும் மாற்றப்பட்டு தற்போது நடிகை துர்கா நடித்து வருகிறார். 

இந்நிலையில், ஏற்கெனவே ஐஸ்வர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைக்கு பதிலாக நடிகை ராணி மாற்றப்பட்டார். தற்போது அவரும் மாற்றப்படவுள்ளதால், ஐஸ்வர்யாவுக்கு வாரம் ஒரு அம்மா வந்துகொண்டிருப்பதாக ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளனர். 

கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி தொடரை ஜவ்வாக இழுப்பதற்கு பதிலாக சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க என்று முனகத்தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். 

அகிலாண்டேஸ்வரி சிறையில் இருந்து வெளியே வந்தால்தான் மீண்டும் பழைய பரபரப்பு கூடும் என்றும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com