
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், முதல் சுற்றிலேயே இந்தப் படம் வெளியேற்றப்பட்டுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் நடிப்பில் உருவான ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் 2019 செப்டம்பர் மாதம் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இன்று வெளியிடப்பட்டுள்ள 15 படங்களின் பரிந்துரைப் பட்டியலில் ஜல்லிக்கட்டு இடம்பெறவில்லை. இந்த 15 படங்களில் இருந்து 5 படங்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி, அதிலிருந்து ஒரு படம், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைக் கைப்பற்றும். மார்ச் 15 அன்று இறுதிக்கட்டப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா 2021 ஏப்ரல் 25 அன்று நடைபெறவுள்ளது.
மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை தேர்வுக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மூன்று படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் பெறவில்லை என்கிற நிலைமை மேலும் தொடர்கிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...