
ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியான இந்தப் படம் தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து ஓடி, வசூலில் சாதனை படைத்தது. பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. கே. பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இசை - இளையராஜா.
தற்போது முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்படுகிறது.
சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஊர்வசி ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி வேடத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வைச்ச சிங்கமடா ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார்.