தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும்
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வறுமையில் வாடுவதாக மனு கொடுத்த தியாகராஜ பாகவதரின் பேரன் குடும்பத்துக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித்தரவும், ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என பல பட்டப் பெயர்களுடன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 1944-ம் ஆண்டு வெளியாகி, 1946-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று தீபாவளிப் பண்டிகைகளைக் கண்டு இரண்டரை ஆண்டுகள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. 1935-ல் வெளியான பவளக்கொடி படத்தில் கதாநாயகனாக நடித்தார் பாகவதர். சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், ஹரிதாஸ் உள்ளிட்ட 14 படங்களில் நடித்தார்.

இந்நிலையில் வறுமையில் வாடுவதாக தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய் ராம் இரு நாள்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல் அமைச்சரின் தனிப் பிரிவில் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். தங்களுடைய குடும்பம் வறுமையில் சிக்கித் தவிப்பதாகவும் வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர்  உத்தரவிட்டார். 

எம்.கே. தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராமுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித்தரவும், ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com