சூர்யா தான் என் முதல் தேர்வு: கிடார் கம்பி மேலே நின்று பற்றி கெளதம் மேனன்

வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
சூர்யா தான் என் முதல் தேர்வு: கிடார் கம்பி மேலே நின்று பற்றி கெளதம் மேனன்

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை பிரியதர்ஷன், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன், பிஜாய் நம்பியார். வசந்த் சாய், சர்ஜுன் கே.எம்., அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். 

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், யோகி பாபு, அரவிந்த் சாமி, பிரசன்னா, ரேவதி, பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ரூ. 10 கோடிக்கும் அதிகமான தொகையை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணி ரத்னம் வழங்குகிறார். பெப்சி திரைப்பட உறுப்பினர்கள் 12,000 பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ. 1500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவரசாவில் கிடார் கம்பி மேலே நின்று என்கிற படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். சூர்யா, பிரயகா மார்டின் நடித்துள்ளார்கள்.

கிடார் கம்பி மேலே நின்று படம் பற்றி கெளதம் மேனன் கூறியதாவது:

கமல் கதாபாத்திரத்துக்கு சூர்யா தான் என் முதல் தேர்வு. வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நீண்ட நாளாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற காத்திருந்தேன். இது நல்ல வாய்ப்பு. மிக நன்றாக வந்துள்ளது. கமல் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைத் தருகிறார் நேத்ரா என்கிற கதாபாத்திரம். பிரயகா அந்த வேடத்தில் நன்றாக நடித்துள்ளார். அவர் பேசும் விதம், பார்க்கும் விதம் என எல்லாமே உடல் அசைவுகள் மட்டுமல்ல, அவருடைய மனத்தில் இருந்து இயல்பாக வருகின்றன. இசை பற்றி அவர் பேசுவது கதாபாத்திரத்துடன் பொருந்திப் போகிறது. அவருடைய கதாபாத்திரம் எப்படி வரவேற்பைப் பெறப்போகிறது எனப் பார்க்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com