பிற்போக்குத்தனமான விஜய் டிவி தொடரின் முன்னோட்டம் - தண்டனை விவரங்களைப் பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவி தொடரின் முன்னோட்டத்தைக் கண்டித்து  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வருண் குமார்  தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
பிற்போக்குத்தனமான விஜய் டிவி தொடரின் முன்னோட்டம் - தண்டனை விவரங்களைப் பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி
Published on
Updated on
2 min read

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவி தொடரின் முன்னோட்டத்தைக் கண்டித்து  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வருண் குமார்  தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கடந்த சில வருடங்களாக திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரைத் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகின்றன. கரோனா தொற்று பரவல் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாக முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு கைகொடுத்திருப்பது சின்னத்திரைத் தொடர்கள் தான். 

இருப்பினும் பெரும்பாலான சின்னத்திரைத் தொடர்கள் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவையாக இருக்கின்றன. திரைப்படங்களிலேயே பிற்போக்குத்தனமாக பேசி வந்த கதாநாயகர்கள் தற்போது தான் மெல்ல மாறி வருகின்றனர். குறிப்பாக நடிகர் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஆகியவை அவற்றிற்கு உதாரணம்.

ஆனால் அதனையும், 'பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று முன்னர் திரைப்படங்களில் பிற்போக்குத்தனமாக பேசிய கதாநாயகர்கள்,  தற்போது பெண் சுதந்திரம் குறித்து பேசி வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் விமரிசித்து வருகின்றனர். 

அந்த வகையில் சின்னத்திரைத் தொடர்களில் பிற்போக்குத்தனமான காட்சிகள் இடம்பெற்றுவருவது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சின்னத்திரைத் தொடரின் முன்னோட்டக் காட்சிகள் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. 

அந்த முன்னோட்டத்தில். ஒரு காதல் திருமணத்தை தனது தலைமையில் செய்து வைக்கிறார் கதாநாயகி. அங்கு வரும் கதாநாயகன் மணப்பெண்ணின் தாலியை அறுக்க முயற்சிக்கிறான். அதனை தடுத்து தாலியின் பெருமைகளை பேசுகிறார் கதாநாயகி. மறுகணமே நாயகியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டு இப்பொழுது நமக்கு கல்யாணம் ஆனது என்றால் ஒப்புக்கொள்வாயா? என மறுகேள்வி எழுப்பிவிட்டு நாயகன் அங்கிருந்து செல்கிறான். இந்தக் காட்சி தான் சர்ச்சைக்கு காரணம்.

ஒரு பெண்ணை அவர் அனுமதியில்லாமல் தாலிக்கட்டுவது, அதனை அவர் கோபமா, மறுப்போ தெரிவிக்காமல் அதிர்ச்சியாக பார்ப்பது என அந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவன் ஒரு பெண்ணுக்கு, அவளது அனுமதியில்லாமல் தாலி கட்டினாலும், அந்தப் பெண் அவனுக்கு மனைவியாகிவிடுவாள் என்ற பிற்போக்குத்தனத்தை முன்வைக்கிறது இந்தக் காட்சி. 

இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட கண்காணப்பாளர் வருண் குமார் அந்த முன்னோட்டத்தை, தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, ''கோவில் போன்ற பொது இடங்களில் பெண்களை துன்புறுத்துபவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்து ரூ10,000 இழப்பீடும் வசூலிக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com