Enable Javscript for better performance
ஜெய் பீம் நிஜ நாயகன் நீதிபதி சந்துரு!- Dinamani

சுடச்சுட

  ஜெய் பீம் நிஜ நாயகன் நீதிபதி சந்துரு!

  By 'அம்ரா' பாண்டியன்  |   Published on : 03rd November 2021 05:31 PM  |   அ+அ அ-   |    |  

  Chandru_OG_123

  பெரும் வரவேற்பைப் பெற்று வருகிற தமிழ்ப் படம் ஜெய் பீம்’.

  உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின் நிஜமான நாயகன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு.

  1993-இல் வழக்கறிஞராக இருந்த போது, குறவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில் படத்தின் கதையை இயக்குநர் த.செ. ஞானவேல் அமைத்துள்ளார். (படத்தில் இருளர் இனத்துக்கு நடந்ததாக கதை சொல்லப்பட்டிருக்கும்)

  அவரது கதாபாத்திரத்தையே சூர்யா ஏற்று நடித்துள்ளார். படத்தில் சூர்யாவின் பெயரும் சந்துருதான்.

  1993-ஆம் ஆண்டில் கடலூர் அருகே உள்ள முதனை கிராமத்தில் நிகழ்ந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்குதான் இந்தக் கதை. நீதிபதி சந்துரு இந்த வழக்கை வழக்கறிஞராக இருந்த காலத்தில் ஏற்று நடத்தினார்.

  கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 இல் பாதிக்கப்பட்ட குறவர் மக்களுக்கு தீர்ப்பு வாங்கித் தந்தார்.

  நீதிபதியாக ஓய்வுபெற்ற சந்துரு பற்றி...

  "நான் கடவுள் இல்லை; அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்? எனக்குக் குளிரவில்லை; அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்? எனக்குப் பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டு வருகிறீர்கள்?" இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் தைரியமாகப் பேச முடிகிறது என்றால் அது முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு ஒருவரால்தான் முடியும்!

  பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும்; ஆனால் வீடே நூலகத்திற்குள்தான் இருக்கிறது என்றால் அது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இருக்கிற இடமாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தப்பட்ட புத்தகங்களே!

  இதையும் படிக்க | யாருடைய அதிகாரத்தை உடைக்கிறது ‘ஜெய் பீம்’?

  எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.

  ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார்..வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர் இவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

  எளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும். இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காதத் தன்மை கொண்டவர்.

  இவர் வழங்கிய தீர்ப்புகள்தான் இப்போதும் இனி வருங்காலத்திலும் சட்ட மேற்கோள்களாக காட்டப்பட இருக்கின்றது. அந்த அளவு ஆழமான சட்ட அறிவுடனும், சமூக சிந்தனையுடனும், அற்புதமான மேற்கோள்களுடனும் கூறப்பட்டவை அவருடைய தீர்ப்புகள்.

  பெண் கடவுளாக இருக்கும்போது ஒரு பெண் பூசாரியாக இருக்கக்கூடாதா? எந்த ஆகம விதிகளிலும், புத்தகத்திலும் அப்படி பெண் பூசாரி ஆகக் கூடாது என்று கூறப்படவில்லை என்பதை ஆதாரப் பூர்வமாகச் சொல்லி பெண் பூசாரிகள் நியமனத்திற்கு வழிகண்டவர்.

  தலித் பெண் சமைத்துச் சாப்பிடுவதா என்று அவரை வேலையைவிட்டு ஒரு பள்ளி நிர்வாகம் தூக்கியது. சம்பந்தபட்ட பெண்ணின் வழக்கு இவரிடம் வந்தது. பல்வேறு உதாரணங்களுடன் இவருக்கு வேலை வழங்கவேண்டும் என்று இவர் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவசர அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, இவரால் தமிழகத்தில் இன்று 22 ஆயிரம் தலித் பெண்கள் சமையல் வேலை பார்த்து வருகின்றனர்.

  கதர் உடை அணிந்து வந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானநிலைய பெண் அதிகாரியின் வழக்கில் இவர் சொன்ன தீர்ப்புக் காரணமாக இழந்த வேலை கிடைத்ததுடன், கதர் குறித்த பார்வையையே அது மாற்றி அமைத்தது.

  தனி சுடுகாடு வேண்டும் என்று கேட்டு வந்த வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கும்போது சொன்ன மேற்கோள்களால் தமிழக சுடுகாடுகளில் இப்போது சமரசம் உலாவுகிறது.

  மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்கான வழக்கில் தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் இருந்தபோது அவர் மனநலம் சரியாக இருக்கிறது என்பதை அழகாக நிரூபித்தது மட்டுமின்றி, அரசாங்க வேலை பார்ப்போருக்கு உரிய பணிப் பாதுகாப்பு குறித்தும் ஒரு வரையறை செய்தவர்.

  எதைப்பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை எடுத்துக்காட்டுகிறார். அவருக்கு என்று எந்த உதவியாளரும் இல்லை;அவரே ஒவ்வொரு அறையாகப் போய் அதற்கான புத்தகங்கள், கோப்புகளை எடுத்துவந்து புள்ளிவிவரங்களைத் தருகிறார். .

  "சட்டத்தின்படியான ஆட்சி நடக்கும் நம்நாட்டில் சட்ட அறிவு என்பது மக்களிடம் குறைவாக இருப்பது வருத்தத்தைத் தருகிறது. ஒன்று தெரியுமா? எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி எந்தக் குற்றத்தில் இருந்தும் தப்பமுடியாது, சட்டத்தில் இருந்து விலக்கும் பெறமுடியாது" என்கிறார் சந்துரு.

  திருச்சியை அடுத்த திருவரங்கத்தில் 1951 ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி சரஸ்வதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் சந்துரு.சந்துருவுக்கு ஐந்தரை வயதாகும்போது தூக்கம் சம்பந்தமான பிரச்சனையால் அம்மா காலமாகிப் போனார். அப்போது இவரது அப்பா இவருக்கும் இவரோடு கூடப் பிறந்த இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தம்பிக்கு சொன்னவை: "உங்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க முடியாது. எவ்வளவு முயற்சி செய்தாவது உங்கள் எல்லோரையும் படிக்க வைக்கிறேன்"

  சந்துருவின் அம்மா இறந்த நிலையில் ரயில்வேயில் வேலை பார்த்த அப்பா எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சென்னைக்கு மாற்றலாகி வந்ததோடு மறுமணமும் செய்ய மறுத்துவிட்டார்.

  அது இந்திய சீனப் போர் நேரம். உணவு முதல் எரிபொருள் வரை எல்லாமே கிடைப்பதில் தட்டுப்பாடு.ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று தான் எது ஒன்றையும் வாங்க முடியும்.

  அக்கா மணமாகிச் சென்றுவிட, இரு அண்ணன்களும் மேற்படிப்பில் மும்முரமாக இருக்க, வீட்டில் அப்பா, சந்துரு, தம்பி மூன்றே பேர்கள்தான் இருந்தார்கள். காலையில் சந்துரு சமைப்பார்; மாலையில் தம்பி சமைப்பார். இப்படியாக சிறுவயதிலேயே சந்துரு சமைக்கக் கற்றுக் கொண்டார். பெண்கள்தான் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்ற இவரது மன நிலையை மாற்றியது இந்தச் சூழ்நிலை.

  ரேஷன் கடையில் வாங்க வேண்டியவற்றைக் காலையிலேயே வரிசையில் நின்று வாங்கி வைத்துவிட்டு, பள்ளிக்குச் செல்வார் சந்துரு.மாலை அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள் உட்பட மளிகைப் பொருட்களை வாங்குவார். இதனால் சிறுவயதிலேயே பொறுப்போடு வளர ஆரம்பித்து விட்டார்.

  அப்போதெல்லாம் பொழுதுபோக்கு என்றால் அது புத்தகங்கள் படிப்பது ஒன்று மட்டும்தான். வீட்டுக்கு செய்தித்தாள் வரும். அதில் ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம், நூலகங்களுக்கு சந்துருவை இழுத்துச் சென்றது. நூலகங்களில் அரசியல் புத்தகங்களை தேடிப் படிக்க ஆரம்பித்தார் சந்துரு.இதன் விளைவு, ஊரில் எங்கே அரசியல் கூட்டங்கள் நடந்தாலும் செல்லத் தொடங்கினார். வீட்டில் அப்பா திட்டினாலும் கூட, சோறு கிடையாது என்று கதவைத் திறக்க மறுத்தாலும் கூட, மேடைகளுக்கு முன்னால் அமர்ந்து பேச்சாளர்களின் பேச்சுக்களை உற்றுக் கவனிப்பார் சந்துரு.

  சில அரசியல் கூட்டங்களில் உணவு கிடைக்கும்: பல கூட்டங்களில் அதுவும் கிடைக்காது. இருந்தும் கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்தவில்லை சந்துரு.

  இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற அந்தக் காலகட்டத்தில் ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்றிருக்கிறார் சந்துரு. அப்போது நடந்த அனைத்து மாணவர் போராட்டங்களிலும் முழு ஈடுபாட்டோடு பங்கேற்றார். இந்தக் காலங்களில் இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் அறிமுகமாகின சந்துருவுக்கு.

  இவை ஒருபுறம் இருந்தாலும் படிப்பையும் தொடர்ந்தார் சந்துரு.லயோலா கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பில் தாவரவியல் பிரிவில் சேர்ந்தார்.இவரது அரசியல் நடவடிக்கைகளை அறிந்த கல்லூரி நிர்வாகம், இரண்டாம் வருடத்திலேயே இவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டது.வேறொரு கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார்.இந்த வேளையில் இவரது அப்பாவும் இறந்து போனார். இரு அண்ணன்களும் வெளியூரில் வேலை பார்த்தார்கள். தம்பி சிறுவன் என்பதால் சொந்தக்காரர்கள் வீட்டில் தங்க வைத்தார் சந்துரு.

  தனியாளாக விடப்பட்ட சந்துரு, முழுமையாக அரசியலில் ஈடுபடலானார். ஒருமுறை சிறைப்படுத்தவும் பட்டார். நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போது, அவர் சந்துருவைப் பார்த்து "நீ சட்டம் படித்து வழக்கறிஞராகு. உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். அதற்காகப் படி" என்றார்.

  சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்துத் தேர்வானார்.முறையாகப் பயிற்சி எடுத்து 1976-இல் வழக்கறிஞர் ஆனார்.நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட மிசா காலமது. சிறையில் கைதிகளைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைப் பதிவு செய்து வழக்கு தொடுக்கச் சென்றார். மார்க்சிஸ்ட் கட்சியினர்களுக்காகவும் அவர் ஆஜரானார். இளநிலை வக்கீலாக பொதுநல வழக்குகள் பல தொடுத்தார்.

  1968 முதல் 1988 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். திடீரென்று ஒருநாள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு வழக்கறிஞர் தொழிலில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார்;எல்லாமே சமூகப்பிரச்சனைகள் சார்ந்தது.

  பார்கவுன்சில் நபராக அறிவிக்கப்பட, அனைவரும் அறிந்த வழக்குரைஞராக மாறினார் சந்துரு. பாதிக்கப்பட்ட எல்லாக் கட்சிக்காரர்களுக்காகவும் தொடர்ந்து வாதாடினார். இலங்கை அகதிகளுக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்.இதன் பின் சீனியர் வழக்குரைஞராக வளர்ந்திருந்தார்.

  1996-இல் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டார். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பாரதியை மணந்த பிறகு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக மாறினார். கீர்த்தி என்று ஒரு மகள் பிறந்தார். பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும் பணத்துக்காக எந்த வழக்கையும் எடுத்து நடத்தியதில்லை‌‌.ஏழைகளுக்காகவே அதிகம் வாதாடி இருக்கிறார்.

  அப்போது நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் சந்துருவைப் பார்த்து, நீதிபதியாகச் சொன்னார்‌. அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக விண்ணப்பித்தார்‌. 'இவர் தீவிரவாதிகளுக்கான வழக்குரைஞர்' என்று சொல்லி அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா இவருக்கு நீதிபதி நியமனம் தர மறுத்தார்.

  'வழக்கறிஞர் என்பது தொழில். எவருக்காகவும் எவரும் வாதாடலாம். இதைக் காரணமாகச் சொல்லி நீதிபதி பொறுப்பைக் கொடுக்காமல் இருக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் 2006-இல் சொல்ல, பின் இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

  நீதிபதியாக சந்துரு பணியில் இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்புச் சொல்லி இருக்கிறார். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு யாரும் அதுவரை தீர்ப்புச் சொன்னதில்லை.இவர் அமர்ந்தால் எந்த தாமதமும் கிடையாது. உடன் விசாரித்துத் தீர்ப்புதான். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடப் பணியாற்றி, உத்தரவுகளைப் பதிவு செய்வார். "வாரத்துக்கு ஏழு நாள்.. சந்துருவுக்கு மட்டும் வாரத்துக்கு எட்டு நாள்" என நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் கிண்டலாகச் சொல்வார்.

  நீதிபதிகளுக்கு பாதுகாப்புக் காவலர் நியமனம் செய்வது உண்டு. அப்படி யாரும் எனக்குத் தேவையில்லை என்று எழுதிக் கொடுத்தார் சந்துரு. பதவிக்கு வந்ததுமே தன் சொத்து விவரங்களை சமர்ப்பித்தார். பலர் முதலில் இதனால் இவர் மேல் மிகுந்த கோபம் அடைந்தார்கள். கடைசியில் எல்லோரும் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.

  ஓய்வுக்குப் பின்னர் இன்றும் தினமும் படித்துக் கொண்டே இருக்கிறார். படித்து முடித்த நூல்களை லாரியில் ஏற்றி, மதுரைக்கு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்.

  மனித உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் முன்பும், இப்போதும், எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் சந்துரு. அலைகள் ஓய்வதில்லை!

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp