
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் - தனுஷ் இருவரும் நானே வருவேன் படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. கர்ணன் படத்தின் போதே இந்த படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தான் கர்ணன் முடிந்த பிறகு தொடங்கலாம் என்று கூறியதாகவும் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்துக்கு நானே வருவேன் என்ற பெயருக்கு பதிலாக ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...