'முரட்டுக்காளை' காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும் சிவா: எப்படி இருக்கிறது 'அண்ணாத்த' டிரெய்லர்?

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டிரெய்லர் குறித்து ஒரு விரிவான அலசல் 
'முரட்டுக்காளை' காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும் சிவா: எப்படி இருக்கிறது 'அண்ணாத்த' டிரெய்லர்?

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் வசிக்கும் காளையன் என்ற ஊராட்சி மன்றத் தலைவராக வருகிறார்.

முரட்டுக்காளை படத்தை யாருக்கும் தெரியாமல் சிவா எடுத்த படம் தான் வீரம். முரட்டுக்காளை படத்தை நியாபகப்படுத்தும் விதமாக இந்தப் படத்திலும் ரஜினியின் பெயர் காளையன். 

கிராமத்துப் படங்களுக்கே உண்டான டெம்ப்ளேட்டில் மக்கள் பெருந்திரளாக கூடியிருக்க திருவிழா மோடில் டிரெய்லர் துவங்குகிறது. எங்கும் பார்த்தாலும் வண்ணமயம். விவசாய நிலம், கிராமத்து வீடு, மஞ்சள் தண்ணீர் ஊற்றும் வைபவம் என கிராமத்து படங்களுக்கே உண்டான காட்சிகள் அடுத்தடுத்து வந்து போகின்றன. 

80களில் வெளியாகும் படங்களில் தவறாமல் முதல் காட்சியில் கதாநாயகிகள் நகரத்தில் படித்துவிட்டு கிராமத்துக்கு வருவர். அந்தக் காட்சியும் இருக்கிறது. ரயிலில் இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் கிராமத்து அளவில் ஒரு வில்லன் இருப்பார். அவரை கதாநாயகன் மிக அசால்ட்டாக கையாள்வர். அந்த வில்லன் வேடத்துக்கு இந்த முறை பிரகாஷ் ராஜ். சமீப கால படங்களில் தவறாமல் இடம்பெறும் கார்பரேட் வில்லன் வேடத்தில் வருகிறார் அபிமன்யூ சிங். அவரை வலதுகையில் கையாள்வார்.

அவர்களுக்கெல்லாம் உச்சமாக கொடூர வில்லனாக ஒருவர் வருவார். அவரை சமாளிக்க கதாநாயகன் சற்று சிரமப்படுவார். ஆனால் இறுதியில் வென்றுவிடுவார். அந்தக் கொடூர வில்லன் வேடத்தில் ஜெகபதி பாபு. வில்லன் வேடம் தான் பழையது. குறைந்தபட்சம் வில்லனையாவது புதிதாக யோசித்திருக்கலாம். ஜெகபதி பாபுவை தொடர்ச்சியாக பார்த்து ஒருவித சலிப்பு வந்துவிட்டது.

கதாநாயகன்களை சுற்றி வரும் அவருக்கு விருப்பமே இல்லாத முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் வருகிறார்கள். அவர் நேசிக்கும் ஒரு காதலியாக நயன்தாரா. அதே டெய்லர், அதே வாடகை என அப்படியே 80, 90களின் கிராமத்துப் படங்களையும், தற்போதைய மசாலா படங்களையும் கலந்துகட்டி சொல்லியிருக்கிறார் என டிரெய்லரை பார்த்தாலே புரிந்துகொள்ள முடிகிறது.

இதில் 80 முதல் 90 சதவிகிதம் வரை அப்படியே தான் இருக்கும். படம் இப்படித்தான் இருக்கும். அதனால் தான் திரையரங்குக்கு சென்று நாம் புதிதாக எதையோ எதிர்பார்த்து வெறுப்பாகக் கூடாது என டிரெய்லரை உருவாக்கியிருப்பதற்கு சிவாவை பாராட்டலாம்.

ரஜினிகாந்த் படங்கள் வழக்கம்போல எல்லா அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆனால் ஏதாவது ஒரு வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்கக் கூடிய படங்களாக இருக்கும். ஆனால் அதே வகையில் அமைந்த லிங்கா படம் தோல்வியடைந்தது.

சற்று புதுமையாக இருக்கட்டும் என இளம் இயக்குநரான ரஞ்சித்துடன் கைகோர்த்தார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா, கபாலி படங்கள் அவருக்கு விமர்சன ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தனவே தவிர, ரஜினிகாந்த்தின் முந்தைய படங்கள் அளவுக்கு அவரது ரசிகர்களைக் கவரவில்லை. 

அடுத்து வந்த ரஜினிகாந்த்தின் பேட்ட திரைப்படம் அவருக்கு ஒரு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கதைக்களம் புதிதாக இருந்தாலும், நாம் பார்த்த ரசித்த ரஜினியை மீண்டும் திரையில் காண்பித்தார் கார்த்திக் சுப்புராஜ்.

இதற்காகத் தானே காத்திருந்தோம் என ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் அந்தப் படத்துடன் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமத்து பகுதிகளில் பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றி தான் பேட்ட தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸையும், கதாநாயகன் ரஜினிகாந்த்தையும் சிவாவுடன் இணைய முடிவெடுக்க வைத்தது.

அடுத்ததாக ரஜினியின் நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் விஸ்வாசம், வேதாளம் என கலந்துகட்டி உருவாகியிருப்பதாக தெரிகிறது. மேலும் டிரெய்லரில் பேட்ட போல தனது வழக்கமான பாணியில் ரஜினி இருப்பதாக தோன்றுகிறது. . விஸ்வாசம் போல கிராமத்து பின்னணியில் சென்டிமென்ட் மிகுதியாக அமைந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் இந்த அண்ணாத்த ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்பதை இந்த டிரெய்லர், ஜெகபதி பாபு போல் நம் காதில் அலருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com