'அண்ணாத்த' படத்தை பார்த்த ரஜினியின் பேரன் என்ன சொன்னார் தெரியுமா?: ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

'அண்ணாத்த' படத்தை பார்த்த ரஜினியின் பேரன் என்ன சொன்னார் தெரியுமா?: ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

தனது பேரன் அண்ணாத்த படம் பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நேற்று (அக்டோபர் 28) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லரை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக அண்ணாத்த அமைந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. 

சிவா இயக்கிய முந்தைய படங்களான விஸ்வாசம் மற்றும் வேதாளம் படங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்களை திருப்திபடுத்தக்கூடிய வகையிலேயே இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் ஹூட் என்ற செயலில் பேசினார். அப்போது அண்ணாத்த படத்தை குடும்பத்துடன் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதில், அண்ணாத்த பட டீசர் வெளியானதில் இருந்து என்னுடைய மூன்றாவது பேரன் வேத், படத்தை எப்பொழுது காட்டுவீர்கள்? என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். 

இதனையடுத்து நேற்று (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு சன் நெட்வொர்க்கில் படத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய மற்ற இரண்டு பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் தனது அப்பாவுடன் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருந்தனர். அவர்களை விட்டுவிட்டு நான் படம் பார்ப்பது தெரிந்தால் ரகளையாகிவிடும். அவங்களுக்கு சொல்லவேண்டாம் என்றேன்.

அதனால் நான், ஐஸ்வர்யா, சௌந்தர்யா, என் மனைவி, என் மாப்பிள்ளை விசாகன், சம்பந்தி குடும்பத்தினருடன் படம் பார்த்தேன். என் பேரன் வேத் என் அருகில் உட்கார்ந்து படம் பார்த்தான். திரையரங்கில் அவன் பார்க்கும் முதல் படம் அண்ணாத்த. வாழ்க்கையிலேயே மறக்கமாட்டான். முழு படத்தையும் மிக ரசித்து பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் 3 முதல் 4 நிமிடங்கள் என்னை விடாமல் கட்டிப்பிடித்துக்கொண்டான். அவன் மகிழ்ச்சியாக இருந்தான் என்றால் தாத்து தாத்து என்பான். 

தாத்து தாத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கொண்டாடினான். நானும் மகிழ்ந்தேன். வெளியே வந்து பார்த்தால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நின்றுகொண்டிருந்தார். என்னவென்று கேட்டதற்கு என்னை பார்ப்பதற்காக வந்திருப்பதாக சொன்னார். அவ்வளவு பெரிய மனிதர். அவர் அங்கு வரவேண்டிய அவசியமேயில்லை. எப்பொழுதும் மேன் மக்கள் மேன் மக்களே  இவ்வாறு பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com