விஜய் என்ன சாதி?: பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த எஸ்.ஏ. சந்திரசேகர்

விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில்...
விஜய் என்ன சாதி?: பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த எஸ்.ஏ. சந்திரசேகர்
Published on
Updated on
2 min read

விஜய் என்று சொன்னாலே ஓர் அதிர்வு ஏற்படும்.  விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார். 

ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சாயம். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், எலிசெபத், பெஞ்சமின் போன்றோர் நடித்துள்ளார்கள். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். 

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது: 

மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன் தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்? 

என் மகன் விஜய்யைப் பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். மகன் தமிழ்நாட்டில் தான் பிறந்தான். மொழி தமிழ். அதனால் தமிழன் என வைத்துள்ளேன் என்றேன். இல்லை முடியாது என்றார்கள். பள்ளியையே மூடும் அளவுக்குப் போராட்டம் நடத்துவேன் எனக் கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியைக் குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

எனது படத்தில் நடித்த அபி சரவணன் தற்போது விஜய் விஷ்வா எனப் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். விஜய் என்று சொன்னாலே ஓர் அதிர்வு ஏற்படும். பாலிவுட் கதாசிரியர் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்குக் குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்குப் பெயர் வைப்பார். அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால் தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன். விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம். அந்த  வெற்றி இவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com