‘அதே டெய்லர்; அதே வாடகை’: டிஎஸ்பி திரைவிமர்சனம்

விக்ரம், கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல் என வெற்றியாக பார்த்த நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் டிஎஸ்பி.
‘அதே டெய்லர்; அதே வாடகை’: டிஎஸ்பி திரைவிமர்சனம்
Published on
Updated on
2 min read

விக்ரம், கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல் என வெற்றியாக பார்த்த நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் டிஎஸ்பி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

அரசுப்பணிக்காக காத்திருக்கும் நாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அவரது தங்கை திருமணத்திற்காக திண்டுக்கல் வரும் விஜய் சேதுபதியின் நண்பர்களை வில்லன் தாக்கியதை அறிந்து வில்லனுடன் மோதுகிறார் வாஸ்கோடகாமா எனும் விஜய்சேதுபதி. இதனால் அவமானப்பட்ட வில்லன் முட்ட ரவி விஜய் சேதுபதியை பழிவாங்கத் துடிக்க, 2 வருடம் தலைமறைவாக வாழ்ந்து காவல்துறை அதிகாரியாக மாறி திண்டுக்கல்லுக்கு மாற்றலாகி வருகிறார் விஜய் சேதுபதி. அதற்குள் எம்எல்ஏ-ஆக மாறிய வில்லனை நாயகன் எப்படி காலி செய்தார் என்பதே டிஎஸ்பி கதை.

தமிழ் திரைப்பட உலகிற்கு ஏற்பட்ட கதைப்பஞ்சம் போல மீண்டும் மீண்டும் அதே கதை. அதே வசனங்கள், அதே ஆக்‌ஷன். விஜய் சேதுபதி தனது முந்தைய திரைப்படங்களில் நடிக்கும் அதே பாணியிலான நடிப்பை வெளிப்படுத்தாமல் திரைக்கதைக்கேற்ற நபராக வந்திருப்பது படத்திற்கு ஆறுதல். அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அனுகீர்த்தி வாஸ்.

திரைப்படம் என்றால் நாயகி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் இருப்பதாக நினைத்து வழக்கம்போல் நாயகன் காதலிப்பதற்காக மட்டுமே அமைக்கப்பட்டதாக இருக்கிறது நாயகி கதாபாத்திரம். அவருக்கு படத்தில் என்ன வேலையை இயக்குநர் கொடுத்திருக்கிறார் என்பதை அவராலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் துறுதுறுவென நடிக்க முயன்றுள்ளார் நாயகி. இவர்களுடன் நடிகர் இளவரசு, புகழ், சிவானி, சிங்கம்புலி, ஞானசம்பந்தம், தீபா  என பெரிய பட்டாளமே இணைந்துள்ளது. காவல்துறை அதிகாரியாக பொருத்தமாக இருக்கிறார் சிவானி.

நடிகர் புகழ் திரைப்படத்தின் முதல் பாதியில் எப்படியாவது நகைச்சுவையை காட்டிவிட வேண்டும் என முயன்றிருக்கிறார். தொலைக்காட்சியில் வெளிப்படுத்தும் அதே உருவக்கேலி வசனங்கள். உருவக்கேலி நகைச்சுவை இல்லை என்பதை யாராவது இவர்களுக்கு சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் நடிகர் சிங்கம்புலியின் நகைச்சுவைக் காட்சிகள் படத்திற்கு சற்று சத்து டானிக் கொடுத்த மாதிரி அமைந்திருக்கிறது.

ரெளடியாக இருக்கும் பாகுபலி புகழ் பிரபாகரின் நடிப்பு திரையில் சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதியில் உள்ளூர் ரெளடியாக அவர் நடந்து கொள்வது தொடங்கி இரண்டாம் பாதியில் அரசியல்வாதியாக அமைதி காப்பது வரை நன்றாக நடித்துள்ளார். அவரது உடல்வாகு, குரல் என சரியான தேர்வாக காட்டப்பட்டிருக்கிறது வில்லன் கதாபாத்திரம்.

கமர்ஷியல் படம்தான். அதனாலேயே பல லாஜிக்குகள் இயக்குநருக்கு தேவைப்படவில்லை போல. இதற்கு மத்தியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விமல் வேறு. பாவம் அவரையாவது படக்குழு விட்டு வைத்திருக்கலாம். திடீரென வருகிறார். தீடீரென தியாகியாகிறார். ரசிகர்கள் பாவம் இல்லையா? கதைக்குள் வராமலேயே முதல் பாதி வட்டமடித்துக் கொண்டிருக்க இரண்டாம் பாதியோ நீண்ட....... ரப்பராக அமைந்திருக்கிறது.

படத்திற்கு ஆங்காங்கே சண்டைக் காட்சிகள் கைகொடுத்துள்ளன. ஆனால் அதிலும் கூடுதலாக சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சண்டையில் திடீரென டீ கொண்டு வருகிறார் ஒருவர். வில்லனும் டீ சாப்பிடலாமா எனக் கேட்க நாயகனும் சாப்பிடலாம் எனக் கூற இருவரும்  சண்டையை பாதியில் நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்று விடுகின்றனர். நமக்கும் கூட இவர்கள் சண்டை போடட்டும் நாம் டீ சாப்பிட்டு விட்டு வரலாமா எனத் தோன்றுகிறது.

சண்டைக்காட்சிகளுக்கான பின்னணி இசை பொருத்தம். நல்லா இரும்மா பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவு செய்த வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் திண்டுக்கல் வட்டாரத்தை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

பழைய கதையில் ஆட்களை மாற்றி அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கிறது டிஎஸ்பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com