ரஜினியின் ஊட்டி சென்டிமென்ட்

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கும் ஊட்டிக்கும் இருந்த தொடர்பு குறித்து சிறப்பு பார்வை..
ரஜினியின் ஊட்டி சென்டிமென்ட்

ரஜினி என்ற அந்க மூன்றெழுத்து மந்திரச் சொல்லை உதகை என்ற மூன்றெழுத்து ஊரில் உச்சரிக்காத உதடுகளே இல்லை எனலாம். இன்றைக்கும் உதகை மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் ரஜினியுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதே இதற்கு சாட்சியாகும்.

ரஜினிக்கும், உதகைக்குமிடையேயான உறவு கடந்த 1978 - 79ம் ஆண்டுகளில் முள்ளும் மலரும் படத்திலிருந்து தொடங்கியது. அண்ணாமலை வரை தொடர்ந்து  நீடித்த இந்த உறவின்போது ரஜினி என்பவர் ஒரு நடிகராக மட்டுமின்றி,  நீலகிரி மக்களில் ஒருவராக ஏற்றுக் கொண்ட சிறந்த மனிதர் என்கிறார், ரஜினி  மக்கள் மன்றத்தின் நீலகிரி மாவட்ட  பொறுப்பாளரான எஸ்.குமார்.  ரஜினிக்கும், உதகைக்குமிடையேயான அந்த உறவும், நட்பும்  குறித்து அவர் நம்மிடம் தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

அவர் தெரிவித்ததாவது, உதகைக்கும் ரஜினிக்குமிடையேயான தொடர்பு முள்ளும் மலரும் படத்திலிருந்து தொடங்கியது. அப்போது எப்படியிருந்தாரோ இப்போதும் அதே ரஜினியாகத்தான் இருக்கிறார். அப்போது அவரை ஒரு நடிகராக நாங்கள் பார்த்தோம். பின்னர்  சூப்பர் ஸ்டாராக கண்டு வியந்தோம். இப்போது ஒரு தலைவராக வணங்குகிறோம்.  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ரஜினியின் திரைப்படம் வெளியாவதுதான் சந்தோஷமான நிகழ்ச்சியாக இருக்கும். ஆனால், உதகையில் அவரது படப்பிடிப்பு நடைபெறும் நாட்களெல்லாம் எங்களுக்கு சந்தோஷமான நாட்களேயாகும். அப்போது உதகைக்கு படப்பிடிப்புக்கு வரும்போது உதகையிலுள்ள ராகவேந்திரா கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.  

படப்பிடிப்புக்கு  கோவை விமான நிலையத்திலிருந்து உதகைக்கு   வரும்போது தனக்கு கார் ஓட்டுபவர்களிடம் அவ்வளவு சகஜமாக நடந்து கொள்வார். தன்னிடமிருப்பதை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களிடமிருப்பதை   வாங்கிக் கொள்ளுமளவிற்கு அந்நியோன்யமாக இருப்பார்.

அதேபோல, தன்னை பார்க்க ரசிகர்கள் காத்திருப்பதாக தகவல் சொன்னவுடன் ஒவ்வொரு காட்சி இடைவெளியின் போதும் வெளியே வந்து சலிக்காமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தோள் மீது கை வைத்து புகைப்படம்  எடுப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்தார். அதேபோல, பாடல் காட்சிகளுக்காக வனப்பகுதிகளுக்கு செல்லும்போது அங்கிருக்கும் தோடரின பழங்குடியினருடன் சகஜமாக பேசுவார்.

அதனால்தான்,  ரஜினி மக்கள் மன்றம் தொடங்கிய பின்னர்  தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்த பின்னர் உதகை தொகுதியில் ரஜினி போட்டியிட வேண்டுமென  நீலகிரியில்தான் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவர் நடித்துள்ள படங்களில் உதகையில் சுமார்  20க்கும் மேற்பட்ட  படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவை அனைத்துமே வெற்றிப் படங்களாகும். அதனால் உதகையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதையும் ரஜினி சென்ட்டிமென்ட்டாகவே கருதினார்.

அவர் எந்த அளவிற்கு ரசிகர்கள் மேல் பாசம் வைத்திருந்தார் என்பதற்கு பல்வேறு சம்பவங்களை சொல்லலாம். அதில் ஒரு சம்பவம் ராஜாதி ராஜா படத்தின் படப்பிடிப்பு  உதகையில் நடந்து கொண்டிருந்தபோது அவர் உதகையில் சதர்ன் ஸ்டார் ஹோட்டலில் தங்கியருந்தார். டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்த படிப்பிடிப்பின்போது அவரைக் காண்பதற்காக 500க்கும் மேற்பட்டோர் அந்த விடுதியின் வெளிப்புற  வாயிலருகிலேயே  காத்திருந்தனர்.

இரவு 10 மணிக்கும் மேலாகிவிட்டதால் ரஜினியும் ஓய்வெடுக்க சென்று விட்டார். ஆனால், ரசிகர்கள் கூட்டம் நகராமல்  தொடர்ந்து  அதிகரிப்பதைக் கண்ட ஹோட்டல் நிர்வாகிகள் ரசிகர்கள்  கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டால் விபரீதமாகி விடுமென ரஜினிக்கு தகவல் கொடுத்தனர்.  அவர் உடனே என்னை அழைத்து  கூட்டத்தை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள சொல்லிவிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உடனிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு நள்ளிரவில்தான் அறைக்கு திரும்பினார். இந்த பாசம் வேறு 'எவரிடமும் காண முடியாத ஒன்று  எனவும் குமார் குறிப்பிட்டார்.

அதேபோல, ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் மற்றும் பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் கூறுகையில், உதகையில் ரஜினியின் படப்பிடிப்பு  நடைபெறும் நாட்கள் விழாக்காலம் என்றால்,  அவரது திரைப்படம் வெளியாகும் நாட்கள் திருவிழாக்காலம் என்றனர். ரங்கராஜ் உதகையிலுள்ள ஒரு திரையரங்கின்  நிர்வாகி என்பதால்  ரஜினியுடன் அவருக்கு கூடுதல் நெருக்கமிருந்தது.  இவர்கள் மேலும் கூறுகையில்,  தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் அனைவரிடத்திலும் முதலில் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்,  வேலையை விட்டு விட்டு தன்னை சந்திக்க  வந்துள்ளார்களா என்பதையெல்லாம் விசாரிப்பதோடு, அவர்களது பெற்றோரை கவனித்துக்கொள்ள  வேண்டுமெனவும், எந்த தொழிலாக இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் உழைத்து  வாழ வேண்டுமென அறிவுரையும் கூறுவார். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாங்கள் ரஜினியின் ரசிகர்கள்தான் என்பதோடு,  எங்களது தலைவரும் ரஜினிதான் எனவும் அழுத்தம் திருத்தமாக கூறினர்.

மொத்தத்தில் ரஜினிகாந்த் என்ற காந்த சொல் நீலகிரி மாவட்ட மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பதோடு, தலைமுறைகள் மாறினாலும் இன்னமும்  ரஜினியின் சொந்தங்களாகவே தங்களை நினைத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com