ஒரே கதையில் இரண்டு படம்: ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு மகேந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த கை கொடுக்கும் கை படம் குறித்து சிறப்பு பதிவு
ஒரே கதையில் இரண்டு படம்: ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த ரஜினிகாந்த்

திரைப்பட இயக்குநர்கள் சங்க 40வது ஆண்டு விழாவில், ரஜினிகாந்த்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவரிடம் சில கேள்விகள் கேட்பார். அதில் ஒரு கேள்வி மிக முக்கியமானது. அந்தக் கேள்வி, ''உனக்கு பிடித்த இயக்குநர் யார்?'' என்பது. எல்லோரும் யோசித்தார்கள் ரஜினிகாந்த் யார் பெயரை சொல்லப்போகிறார் என்று. ஆனால் ரஜினிகாந்த் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில் 'மகேந்திரன்' 

அந்த அளவுக்கு ரஜினிகாந்த்தில் உள்ள ஆகச் சிறந்த நடிகரை வெளிக்கொண்டு வந்தவர் இயக்குநர் மகேந்திரன். மகேந்திரன் படங்களில் அந்த கதாப்பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதனை மிகச் சரியாக செய்திருப்பார். இயக்குநர் மகேந்திரன் படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அதாவது அவை இயக்குநர் மகேந்திரன் படங்கள். 

ஆனால் ஒரே ஒரு ரஜினிகாந்த் படத்தை இயக்குநர் மகேந்திரன் இயக்கியிருந்தார். அந்தப் படம் 'தான் கை கொடுக்கும் கை'. நடிகர் விஜயகுமார் தனது தயாரிப்பில் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க முடிவெடுத்து அவரை அனுகியிருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் சொன்ன பெயர் 'மகேந்திரன்'. 

கன்னடத்தில் புட்டண்ணா கனகல் இயக்கிய 'கதா சங்கமா' படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள் இடம்பெற்றிருந்தன. அதில் 'முனிதாயி' என்ற படத்தின் கதையை ரஜினிக்கு ஏற்றவாறு மாற்றி 'கை கொடுக்கும் கை' படத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 

வசதிபடைத்த ஒருவர் கண் தெரியாத பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அவர் இல்லாத நேரம் பார்த்து ஒரு இளைஞர், பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியன் வன்கொடுமை செய்து விடுவார். இந்தக் கதையை தமிழில் ஒரு முழு நீள படத்துக்கான கதையாக மாற்றினார் இயக்குநர் மகேந்திரன். முழுக்க முழுக்க ரஜினிகாந்த படமாக திரைக்கதை அமைத்திருந்தார். 

இதில் சுவாரசியம் என்னவென்றால் 'முனிதாயி' படத்தில் ரஜினிகாந்த் தான் கண் தெரியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்பவராக நடித்திருந்தார். ஆனால் கை கொடுக்கும் கை படத்தில் அவர் நாயகன். அந்த வகையில் ஒரே கதையில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்தவர் ரஜினிகாந்த் என சொல்லலாம்.

படத்தில் காட்சிகள் எல்லாம் பெரும்பாலும் அன்றைய கால ரஜினிகாந்த் படங்களைப் போல மிகை யதார்த்தமாக இருக்கும். கை கொடுக்கும் கை படத்தின் போது ரஜினிகாந்த் ஒரு மாஸ் ஹீரோ. அதனால் கமர்ஷியல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இயக்குநர் மகேந்திரனும் முடிந்தவரை அதில் தன் முத்திரையை அதில் பதித்திருப்பார். 

உதாரணமாக ஒரு காட்சியில் திருமணத்துக்கு பிறகு வீட்டு வாசலில் ரேவதியுடன் ரஜினி கோலம்போட்டுக்கொண்டிருப்பார். அப்போது அங்கு வரும் பண்ணயாரின் ஆட்கள் ரஜினிகாந்த்தை வம்பிழுப்பார்கள். உடனே கோலம்போடும் பொறுப்பை ரேவதியிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னை வம்பிழுப்பவர்களுடன் சண்டையிடுவார். ஆனால் அது நமக்கு காட்டப்படாது. அந்தக் காட்சியில் பார்வை மாற்றுத்திறனாளியான ரேவதி முகம் மட்டும் நமக்கு காட்டப்படும். ரஜினிகாந்த் சண்டையிடும் சத்தம் மட்டும் கேட்கும். அந்த சத்தம் சத்தம் நமக்கு உணர்த்திவிடும் ரஜினிகாந்த் என்ன செய்கிறார் என்று. ஏனெனில் அவர் ரஜினிகாந்த்.

பதின் வயது இளைஞராக சின்னி ஜெயந்த்துக்கு முக்கியமான வேடம். மனநலன் பாதிக்கப்பட்டவர் அவர் நடந்துகொள்ளும் விதம் காண்போருக்கு அவர் மேல் பரிதாபம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஆனால் அவரும் ஒரு ஆண். அவர் முன்னிலையில் பாலியல் ரீதியிலான உரையாடல்கள் அவரை கிளர்ச்சியடைய செய்யும். அது தவறான பாதைக்கு அவரை இட்டு செல்லும். இது பாலியல் ரீதியிலான தவறான வழிகாட்டுதல் எத்தகைய பிரச்னைகளை உருவாக்கும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம். 

வழக்கம்போல இளையராஜாவின் இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. குறிப்பாக தாழம்பூவே என்ற ஒரு பாடல் மூலம் ரஜினிகாந்த், ரேவதியின் நெருக்கத்தை ஒரே பாடலில் நமக்கு சொல்லியிருப்பார்.

ஒரு முக்கியமான சமூக பிரச்னையை, கமர்ஷியலாக சொன்ன விதத்தில் கை கொடுக்கும் கை, ரஜினிகாந்த்தின் திரையுலக வாழ்வில் முக்கியமான படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com