இந்த ஆண்டின் இறுதியான இந்த வாரத்தில் தமிழ்த் திரைப்படங்கள் பலவும் போட்டியில் குதித்துள்ளன.
ராங்கி
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. நடிகை த்ரிஷா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள இந்தப் படத்தை
லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படத்திற்கான விளம்பரப் பணிகளில் த்ரிஷா ஈடுபட்டு வரும் நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் வரிசையில் இணைகிறது.
டிரைவர் ஜமுனா
‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி.கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓ மை கோஸ்ட்
தமிழில் ஓரிரு பாடல்களில் தோன்றியுள்ள நடிகை சன்னி லியோன் முழுநீளக் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார். காமெடி த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியாகிறது.
செம்பி
மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த திரைப்படம் செம்பி. அஸ்வின் குமார் இதில் நாயகனாக நடிக்க, கோவை சரளா, தம்பி ராமையா, நிலா என்ற சிறுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபு சாலமன் படங்களுக்கு டி.இமான் வழக்கமாக இசையமைத்து வந்த நிலையில், செம்பி படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சென்பி படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு பாடல்களையும் பிரபு சாலமன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
உடன்பால்
குடும்பத்தில் நடக்கும் சொத்து பணப் போட்டி தொடர்பான கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பால். இதில் நடிகர்கள் சார்லி, லிங்கா, விவேக் பிரசன்னா, காயத்ரி, அபர்ணதி மற்றும் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கியுள்ளார். டி கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். டிசம்பர் 30ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகிறது.
இவை தவிர நடிகர் லிங்கேஷ் நாயகனாக அறிமுகமாகும் காலேஜ் ரோடு, சாதிய வன்கொடுமைகள் குறித்து பேசும் அருவா சண்ட, பி.வி.பிரசாத் மற்றும் நடிகை பானு நடித்துள்ள சகுந்தலாவின் காதலன், கடைசி காதல் ஆகியப் படங்கள் வெளியாகின்றன.
இந்த வாரம் வெளியாவதாக இருந்த தமிழரசன் திரைப்படம் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.