சினிமா சந்தித்த சவாலும், சறுக்கலும்: என்ன மறந்துபோச்சா..?

2020 மற்றும் 2021-இல் முடங்கிப்போன திரைத் துறை, 2022-இல் 'இது பேட்ட பாயுற நேரம்' என பஞ்ச் டயலாக் பேசி பெரும் பாய்ச்சலாக பாய்ந்திருக்கிறது.
சினிமா சந்தித்த சவாலும், சறுக்கலும்: என்ன மறந்துபோச்சா..?


2020 மற்றும் 2021-இல் முடங்கிப்போன திரைத் துறை, 2022-இல் 'இது பேட்ட பாயுற நேரம்' என பஞ்ச் டயலாக் பேசி பெரும் பாய்ச்சலாக பாய்ந்திருக்கிறது. பஞ்ச் டயலாக் பேசும் அளவுக்கு திரைத் துறையில் என்ன நடந்திருக்கிறது என்ற கேள்வி எழலாம்.. எழுந்தால், அதற்கான விடைதான் இந்த மீள்பார்வை.

2021-இல் பாதி நாள்களை கரோனா மூழ்கடித்ததால், பல்வேறு காரணங்களுக்காக திரைத் துறைக்கு இந்த ஆண்டு மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக திரையரங்குகளுக்கு. கடந்தாண்டு இரண்டாம் பாதியிலேயே பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாலும், இடையூறு இல்லாமல் முழுமையாக இயங்கும் ஆண்டாக 2022 இருந்தது. இதனால், கரோனாவுக்குப் பிறகு 2022 தான் சரியான ஆடுகளமாக அமைந்தது. 

கரோனாவும், ஓடிடி வளர்ச்சியும் ஒருசேர வந்ததால், கரோனாவுக்குப் பிறகு மக்களை மீண்டும் திரையரங்குகளில் பார்க்க முடியுமா, திரையரங்குகளின் எதிர்காலம் என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகள் திரைத் துறை முன்பு இருந்தது. இன்னொருபுறம் கரோனா காரணமாக வெளியாகாமல் இருந்த படங்கள் அனைத்தும் வெளியாவதற்காக வரிசைகட்டி காத்திருந்தன.

இத்தனைப் படங்களை வெளியிட வேண்டுமே, திரையரங்குகளில் வரவேற்பு இருக்குமா என பதற்றம் இருந்தது. இந்தக் கேள்விகளுக்கும் பதற்றங்களுக்குமான பதில்தான் 2022.

மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா?

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் அவருக்கே உரித்தான வழக்கத்தைப்போல், தெலுங்கு வியாபாரத்தைத் தாண்டி, இந்தியா முழுக்க பெரும் வசூலைக் குவித்தது. மக்களை மீண்டும் திரையரங்குக்கு வரவைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக ஆர்ஆர்ஆர் அமைந்தது. ஓடிடி மனப்பான்மை வந்தபிறகு, இதுபோன்ற படங்கள் அவசியம். இது திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் என்கிற விமர்சனம் ரசிகர்களிடமிருந்து வந்தது. ஓடிடியில் தொலைக்காட்சியில் பார்த்தால், இந்த உணர்வு கிடைக்காது என விமர்சனங்கள்பரவ திரையரங்குகளில் மக்கள் குவிந்தனர். இது கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சம். 

பான் இந்தியா படமாக வந்ததால், இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளுக்கு இந்தப் படம் பெரும் உதவியாக இருந்தது. 

இது தற்போது வசூல் சாதனையையும் தாண்டி, ஆஸ்கர் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, ஆர்ஆர்ஆர் வெறும் டிரெய்லர்தான் என மெயின் பிக்சராக வந்தது கேஜிஎஃப் 2.

இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் இது ஏற்படுத்திய தாக்கத்தைக் கவனிக்க வேண்டும். தமிழ் சினிமா வியாபாரத்தின் உச்சத்தில் இருக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்துடன் மோதியது. பீஸ்ட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், கேஜிஎஃப் 2 பக்கமே கூட்டம் திரண்டது.

பெரும்பாலான திரைகள் பீஸ்ட் திரைப்படத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், கேஜிஎஃப் 2-க்கே அதிக வரவேற்பு இருந்ததால், திரையரங்கு உரிமையாளர்கள் திக்குமுக்காடினர். இதனால், சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேஜிஎஃப் 2 படத்துக்காக நள்ளிரவுகளிலெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. அதாவது இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரமும் திரையரங்குகள் செயல்பட்டன. அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்.

இதேநிலைதான் இந்தியா முழுவதும். திரைத் துறையினருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் இதைவிட வேறென்ன வேண்டும்.

வசூலில் புதிய சாம்ராஜ்ஜியத்தைப் படைத்து ஒட்டுமொத்த இந்திய பாக்ஸ் ஆஃபிஸையே ஆட்சி புரிந்த ராக்கி பாய், இதுவரை 1,200 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளார்.

அதேசமயம், பீஸ்ட் திரைப்படத்துக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லாதபோதிலும், அதுவும் வசூலில் பெரும் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

சரி, கூட்டம் வந்துவிட்டது.. ஆனால், தமிழ்ப் படங்களுக்கு வரவில்லையே.. இது தமிழிப் படங்களின் வீழ்ச்சியா..?

இந்தக் கேள்வி/விமர்சனம் வரக் காரணம், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2வின் வெற்றி மட்டுமல்ல. தமிழ் நட்சத்திரங்களின் சரிவும்தான். கடந்தாண்டு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த எதிர்பார்த்த அளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் திரைப்படங்களுக்கும் இதே நிலைதான். இவை அவரவர் நட்சத்திர அந்தஸ்துக்காக, அதன் அளவிலான லாபங்களை ஈட்டின. ஆனால், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் அளவுக்கு வசூலை வாரி குவிக்கவில்லை.

இதுவே விமர்சனங்களுக்கு விதைபோட்டன.

நம்பிக்கை விதைத்த டான்:

இந்த நேரத்தில்தான், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குநரை நம்பி களமிறங்கிய சிவகார்த்திகேயன் 100 கோடி வசூலைக் குவித்து, தமிழ்ப் படங்கள் மீதான நம்பிக்கையை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் மீண்டும் விதைத்தார்.

பெரிய நட்சத்திரங்கள் சரிவைச் சந்தித்த நேரத்தில் அனைவருக்கும் லாபம் ஈட்டி தந்த சிவகார்த்திகேயன், விநியோகஸ்தர்கள் பார்வையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக தெரிந்தார். முந்தையப் படமான டாக்டரும் 100 கோடி வசூல், டானும் 100 கோடி வசூல் என்பதால், இந்தப் பெயரை சம்பாதித்தார் சிவகார்த்திகேயன்.

டானுக்கு முன்பே திரையரங்குகளுக்குக் கூட்டம் திரும்பியிருந்தாலும், பெரிதளவில் குடும்பங்களைத் திரட்டியதில் சிவகார்த்திகேயன் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஓயாத விமர்சனம்..

இருந்தாலும், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் அளவுக்கு வசூல் வேட்டையைக் குவிக்கும் ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வரவில்லையே..

வந்தார் நாயகன்..:

ஒரு இடைவெளிக்குப் பிறகு, தனது ரசிகரான லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்த கமல்ஹாசன், விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டையைத் தொடங்கினார். இது பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கியது. வெறும் வசூலோடு நில்லாமல், ஹாலிவுட்டைபோல இந்தியப் படங்களிலும், வெவ்வேறு திரைப்படங்களை ஒரு கதை உலகத்தில் கொண்டு வந்து அடக்கி புதிய உலகை உருவாக்கலாம் என்கிற பார்வையை உருவாக்கியது விக்ரம். இந்த முயற்சிக்கு சூப்பர் பவர் கதைக் களங்கள்தான் அவசியம் என்பதையும் விக்ரம் தகர்த்தெறிந்தது.

படத்தில் வரும் 'நாயகன் மீண்டும் வரான்' என்பதற்கு ஏற்றார்போல, தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதற்குமுன் இருந்த அனைத்து சாதனைகளையும் விக்ரமின் ஊடாக வந்து உடைத்தெறிந்தார் கமல்.

இதைத் தொடர்ந்து தமிழிலிருந்து வெளிவந்த மற்றொரு பான் இந்தியா படம்தான் பொன்னியின் செல்வன் முதல் பாகம். அதுவும் தமிழ் சினிமாவைத் தாண்டி எல்லா பாக்ஸ் ஆபீஸிலும் ஆதிக்கம் செலுத்தியது. 100 கோடி வசூல், 200 கோடி வசூல், 400 கோடி வசூல் என வசூல் அறிவிப்புகள் கூடிக்கொண்டே இருந்தன.

தமிழிலிருந்தும் பான் இந்தியா படங்கள் வரும் என்று செயல் வடிவில் பதிலளித்தது தமிழ் சினிமா.

மார்கெடிங் மேடம்.. மார்கெடிங்..: 

விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வெற்றி வேறொரு செய்தியையும் உணர்த்தியது. அதுதான் விளம்பரம். ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கமல் முன்னுதாரணமாகத் திகழ்ந்து உணர்த்தினார். ஒருநாளில் காலை ஒரு ஊரிலும், மதியம் ஒரு ஊரிலும், மாலை ஒரு ஊரிலும் எனப் பறந்துபறந்து விளம்பரப்படுத்தினார் கமல். இதையேதான் பொன்னியின் செல்வன் திரைப்படமும் பின்பற்றியது. பொன்னியின் செல்வனில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருந்ததால், அவர்கள் குழுவாகப் பிரிந்து மாநிலங்களுக்கு மாநிலம் பயணம் செய்து படத்தைக் கொண்டு சேர்த்தனர்.

திரையரங்குகளுக்குக் கூட்டம் வந்துவிட்டது. தமிழிலிருந்தும் பான் இந்தியா படங்கள் வந்துவிட்டன. எழுந்தது அடுத்த விமர்சனம்.

பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் படங்களால் மட்டும்தான் பெரும் வசூலைக் குவிக்க முடியுமா? சின்னப் படங்களுக்கு இனி ஓடிடிதான் ஒரேவழி என்பது போல பேசப்பட்டு வந்தது. இதற்கும் பின்னாள்களில் விடை தந்தது 2022.

தனுஷின் திருச்சிற்றம்பலம், கன்னடப் படமான காந்தாரா, பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே சரியான உதாரணங்கள். இந்த மூன்று படங்களும் குறைவான பட்ஜெட்டில் உருவானவை. ஆனால், வசூலில் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டி தந்தன இந்தப் படங்கள்.

காந்தாரா கன்னட சினிமாவிலிருந்து வந்து ஆட்சி புரிந்த மற்றொரு மாபெரும் வெற்றிப் படம். ரூ. 20 கோடிக்கும் குறைவான செலவில் உருவான இந்தப் படம் முதலில் கன்னட மொழிகளில் மட்டுமே வெளியானது. படத்தின் வரவேற்பைப் பார்த்த பிறகே, மற்ற மொழிகளுக்கு டப் செய்யப்பட்டது. இந்தப் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட். ரூ. 500 கோடிக்கு வசூலை அள்ளியது. படத்தின் பட்ஜெட் ரூ. 20 கோடிக்கும் குறைவு என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

பெரிய பட்ஜெட், பெரிய நட்சத்திரப் பட்டாளம், பெரிய விளம்பரங்கள் எதுவும் மிகவும் எளிமையானப் படமாக திருச்சிற்றம்பலம் வெளியானது. தனுஷ் எனும் நட்சத்திரத்தைத் தாண்டி படத்தில் பெரிய வணிக ஈர்ப்பு கிடையாது. இருந்தாலும், அது இந்த ஆண்டின் நல்ல படங்களுள் ஒன்றாக வந்துள்ளது.

அடுத்து லவ் டுடே. இந்தப் படமும் குறைவான செலவில் உருவாகி இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்தது. படத்தின் கதைக்களம் மற்றும் அதை விவரித்த விதமும்தான் வெற்றிக்குக் காரணம். விளம்பரம் முக்கியம் என்பதை இந்தப் படமும் உணர்த்தியது. ஆனால் பெரும் பொருட்செலவில் அல்ல. சரியான முறையில் டிரெய்லர் கட் செய்யப்பட்டதே இதற்குப் பெரிய ஓப்பனிங்கை பெற்றுத் தந்தது. நட்சத்திரங்களால் மட்டுமே ஓப்பனிங் கிடைக்கும் என்ற விதியும் உடைபட்டது.

இதற்கிடையில், நடிகர் கார்த்தி, விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சார்தார் என ஹாட்ரிக் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தொடக்கத்தில் படம் பார்க்க மக்கள் வருவார்களா என்ற அச்சம் இருந்தது மாறி, ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு தடைகளைக் கடந்து, புதியபுதிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றையும் உடைத்து ஆண்டு இறுதியில் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது திரைத் துறை. ஓடிடியில் வெளியான படங்களுக்குக்கூட இது திரையரங்குகளில் வந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் எழத் தொடங்கியுள்ளது. இது தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் பெரும் ஊக்கம். 

கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்திருந்தால் இது பேசுபொருள் அல்ல. வரும் காலங்களில் நிகழ்ந்தாலும் பேசுபொருள் அல்ல. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, எதுவும் இயங்காமல் மீண்டும் சுழலத் தொடங்கிய பிறகு, இது எப்படி இயங்கப்போகிறது என்கிற ஐயம் இருந்த நேரத்தில் புத்துயிர் பெற்றிருப்பதால் 2022 சினிமாவுக்கு ஒரு முழுமையான ஆண்டு.

இறுதியாக, விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரேநாளில் வெளியாவதற்கான தைரியத்தை 2022 கொடுத்துள்ளது. இதைக் கொண்டு 2023 என்னவெல்லாம் சாதிக்கக் காத்திருக்கிறது, எந்த உச்சத்தையெல்லாம் அடையவிருக்கிறது, எதையெல்லாம் தகர்த்தெறியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

(இது ஓடிடி-க்கு எதிரானது அல்ல. ஓடிடியும் வரவேற்கக்கூடியதுதான். கார்கி, விட்னஸ் போன்ற படங்களும் விலங்கு, சுழல் போன்ற வெப் தொடர்களும் பெரும் கூட்டத்தை சென்றடைவதற்கு இருக்கும் பெரும் கருவி ஓடிடிதான். ஆனால், பெருந்தொற்று நேரத்தில் ஓடிடி மட்டுமே ஒரே கதவாக இருந்ததுதான் இதற்கான உந்துதல். திரைத் துறைக்கு ஓடிடி மட்டும்தான் அல்லது திரையரங்கு மட்டும்தான் என்ற நிலை கூடாது என்பதுதான் நோக்கம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com