'இளையராஜாவால் ஒன்னும் பண்ண முடியாது': இயக்குநர் மிஷ்கின் அதிரடி

கடைசி விவசாயி படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் தனது விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார். 
'இளையராஜாவால் ஒன்னும் பண்ண முடியாது': இயக்குநர் மிஷ்கின் அதிரடி

மணிகண்டன் தயாரித்து இயக்கியுள்ள 'கடைசி விவசாயி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பாராட்டி விடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''இந்தப் படத்தைப் பற்றி பேச வேண்டும். எப்படி பேசுவது என்று யோசித்தேன். என் மகளுக்கு ஒரு கடிதம் எழுதி அதனை பத்திரிகைகளுக்கு கொடுக்கலாமா என்று கூட யோசித்தேன். எனக்கு வாழ்க்கையை சொல்லித்தந்த படமாக இதனைப் பார்க்கிறேன். மிஷ்கின் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவார் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டுபோகட்டும். 

நான் என் மனதில் இருந்து பேசுகிறேன். என் மகளுக்கு இந்தப் படத்தைப் பார்க்க சொல்வேன். படம் மெதுவாக நகர்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் மெதுவாக நாம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொல்கிற படம். 

நான் இப்பொழுது காரில் பயணிக்கிறேன். ஆனால் 20 செண்ட் கூட நிலமில்லாத குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் தந்தையார் விவசாயம் செய்தவர் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். 

என் மகள் தற்போது கனடாவில் படிக்கிறாள். எனக்கு மிகப் பெரிய வருத்தம். அவள் கனடாவிலேயே இருக்கப்போகிறாளா என்று தெரியவில்லை. ஆனால் என் மகளிடம் எங்கே உன் வாழ்நாளை செலவிடப்போகிறாய் என்பதை மறுபரிசீலனை செய் என்று சொல்வேன். மிகவும் வலிமையான படம். 

தன் ஆன்மாவை சுத்தப்படுத்த வேண்டும் என மணிகண்டன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படம். தயவு செய்து இந்தப் படத்தை பாருங்கள். 20 வருடத்தில் எவ்வளவு பொறுக்கி படங்கள் பார்த்திருப்போம். எவ்வளவு மோசமான படங்களை நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம்.  இந்தப் படத்தை ஒரு முஸ்லிம் கொண்டாட வேண்டும். ஒரு கிறிஸ்தவன் கொண்டாட வேண்டும். 

இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்த என் தம்பி விஜய் சேதுபதிக்கு நான் கட்டித் தழுவி முத்தம் கொடுக்க வேண்டும். அவன் சாமியாக வந்துட்டு போய்விட்டான். காற்றோடு காற்றாக கலந்துவிட்ட அந்த காட்சி இந்தியாவில் எடுக்கப்படவேயில்லை. இசையைக் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. 

இளையராஜா இல்லையே என்ற ஒரு சந்தேகத்துடன் சென்றேன். இளையராஜாவால் கூட இந்தப் படத்துக்கு உதவி செய்ய முடியாது. எவ்வளவு பெரிய இசையமைப்பாளராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் எல்லா தொழில்நுட்ப அம்சங்களையும் தாண்டி இந்தப் படம் உயர்வுக்கு சென்று விட்டது. இந்தப் படம் மகா உன்னதமான படம். ஒரு தவறு கூட இந்தப் படத்தில் இல்லை என்று சொல்வேன். இந்தப் படத்தில் பணிபுரிந்தவர்களின் கால்களுக்கு நான் முத்தமிடுவேன்'' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com