அதிசயங்களை நிகழ்த்திய ஹாரிஸுக்குப் பிறந்த நாள்

ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்த நாள் சிறப்பு பதிவு 
அதிசயங்களை நிகழ்த்திய ஹாரிஸுக்குப் பிறந்த நாள்

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு பாடல் நன்றாக இருக்கிறதே ஏ.ஆர். ரஹ்மான் இசையா என்று கேட்டால், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பதில் வரும். இப்படி நிறைய பாடல்களைத் தந்து தமிழ்த் திரையிசையில் பல அதிசயங்களை நிகழ்த்தியவர் ஹாரிஸ் ஜெயராஜ். 

ஹாரிஸ் இசையில் வெளியான முதல் திரைப்படம் மின்னலே. ஆனால், அதற்கு முன்பே அவர் மஜ்னு திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மஜ்னு படத்துக்கு இசையமைக்கப்பட்ட 'மெர்குரி மேல மேடையிடு' பாடல் கௌதம் வாசுதேவ் மேனனிடம் போட்டுக்காட்டப்பட்டது. 

ஹாரிஸின் திறமைக்கு அந்தப் பாடல் போதாதா? மின்னலே படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க கௌதம் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

மின்னலே, மஜ்னு படப் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால், இயக்குநர்கள் ஹாரிஸ் ஸ்டூடியோ கதவைத் தட்டத் தொடங்கினார்கள். குறிப்பாக பிரபல மலையாள இயக்குநரான பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய லேசா லேசா படத்துக்கு ஹாரிஸை ஒப்பந்தம் செய்ய வைத்தது மேற்சொன்ன இரண்டு படங்களின் வெற்றி. 

இயக்குநர்கள் ஒன்றிரண்டு படங்கள் மட்டும் இணைந்துப் பணிபுரியாமல், தொடர்ச்சியாக இணைந்துப் பயணித்ததுதான் ஹாரிஸுக்குப் பலமாக அமைந்தது.

இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ஜீவா, முருகதாஸ், கே.வி. ஆனந்த் உள்ளிட்டோருடன் தொடர்ச்சியாகப் பயணித்து பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையின் சிறப்பம்சமே, படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் அன்றி, அனைத்துப் பாடல்களுமே பெரிய ஹிட் அடித்துவிடும்.

ஹாரிஸ் இசையின் ஒலி சப்தம் ஏறத்தாழ ரஹ்மான் இசையின் ஒலி சப்தத்துடன் ஒத்துப்போகும். ரஹ்மான் இசையை போல ஹாரிஸின் இசையிலும் ஒரு பிரம்மாண்டத்தை உணர முடியும். இதன் காரணமாகவே, ஹாரிஸின் சில பாடல்களுக்கு, இசையமைத்தது ரஹ்மானா என்கிற சந்தேகத்தைத் தூண்டச் செய்யும்.

ஒரு கட்டத்தில் தமிழில் ரஹ்மான் இடத்தை ஹாரிஸ் பிடித்துவிடுவார் எனும் அளவுக்கு அவரது இசையின் தாக்கம் இருந்தது. ஹாரிஸ் அறிமுகமானபோது ரஹ்மானும் தமிழில் இசையமைப்பதைக் குறைத்துக்கொண்டார். ரஹ்மான் இல்லையென்றால் இயக்குநர்களின் அடுத்த தேர்வு ஹாரிஸாகத் தான் இருக்கும். 

தொடக்கத்தில் காதல் சார்ந்த படங்களைச் செய்துகொண்டிருந்த ஹாரிஸுக்கு காக்க காக்க, சாமி போன்ற படங்கள் திருப்புமுனையாக அமைந்தன. விறுவிறுப்பான திரைக்கதையென்றால், பின்னணி இசைக்கு ஹாரிஸே சரியானத் தேர்வாக இருக்கும் என இயக்குநர்கள் நம்பும் அளவுக்கு தனது முத்திரையைப் பதித்தவர். 

இதன் விளைவுகள்தான் அருள், அந்நியன், வேட்டையாடு விளையாடு, கஜினி, பீமா, சத்யம் என துப்பாக்கி வெற்றி வரை பட்டியல் நீள்கின்றன.

உதாரணத்துக்கு தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் மட்டுமே இயக்குநர் ஷங்கர் பணியாற்றி வந்தார். ரஹ்மானால் வேலைப்பளு காரணமாக அந்நியன் படத்துக்கு இசையமைக்க முடியாத நிலை. இதனையடுத்து ஷங்கரின் அடுத்த தேர்வு ஹாரிஸ் தான். அந்நியன், நண்பன் என இரண்டு ஷங்கர் படங்களில் ஹாரிஸ் பணிபுரிந்துள்ளார். 

படம் வெளியாவதற்கு முன்பு, பாடல்கள் மட்டுமே கொடுத்த வெற்றி பல படங்களுக்குப் பெரும் விளம்பரமாக அமைந்துள்ளன. 

ஹாரிஸ் ரசிகர்களின் மனதில் இயக்குநர் ஜீவாவின் பட பாடல்களுக்கு சிறப்பான இடம் இருக்கும். ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்குநராக அறிமுகமான படம் 12 பி. இந்தப் படத்தின் கதாநாயகன் புதுமுகம் ஷாம். இந்தப் படத்துக்கு ரசிகர்களை திரையரங்கை நோக்கி அழைத்து வந்ததது ஹாரிஸின் இசை. 12 பி படம் மட்டும் அல்ல, ஜீவாவின் உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் என அனைத்து படங்களுக்கும் ஹாரிஸ் தான் ஹீரோ. 

இதில் உள்ளம் கேட்குமே மிகத் தாமதமாக 2 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்த படம். படத்தில் நடித்த அசின், ஆர்யா உட்பட அந்தப் படம் தான் பலருக்கும் முதல் படம். அப்படியிருக்க ஹாரிஸின் இசை தான் படம் தாமதமாக வந்தாலும், படம் எப்பொழுது வரும் என ரசிகர்களை எதிர்பார்க்க செய்ததற்கு காரணம்.

பாடல்களுக்கு நிகராக அவரது பின்னணி இசையும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் பின்னணி இசை மூலம் கூடுதல் அழகு சேர்ப்பதில் தனித்துவமானவர் ஹாரிஸ். 

விஜய் ஆண்டனிக்கு முன்பே புரியாத மொழிகளை பாடல் வரிகளாகப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்றைக்கும் அர்த்தம் தெரியாத 'ஒமகசியா' ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது.

படத்துக்கு கௌதமுடனான கூட்டணி வெற்றிக் கூட்டணியென்றால், பாடலுக்கு பாடகி பாம்பே ஜெயஸ்ரீயுடனான கூட்டணி வெற்றிக் கூட்டணி. 

வசீகராவில் தொடங்கி முதற்கனவே, ஒன்றா ரெண்டா ஆசைகள், பார்த்த முதல் நாளே, உனக்குள் நானே, யாரோ மனதிலே, செல்லமே செல்லமே போன்ற பாடல்கள் லூப்பிலேயே இருக்கும்.

இதுமட்டுமல்லாது மென்மையான காதல் பாடல்கள் ஒரு பக்கம் என்றால், ஹாரிஸ் இசையில் தூது வருமா, நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே, தொட்டா பவருடா, எக்ஸ் மச்சி, மணி மணி போன்ற துள்ளலிசைப் பாடல்களால் திரையரங்குகள் அனல் பறக்கும். 

நடிகர்களுள் சூர்யாவின் திரையுலக வாழ்வில் அவருக்கு அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் ஹாரிஸ் ஆகத் தான் இருக்கும். இருவரும் இணைந்த காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் 3, காப்பான் என இன்றளவும் நாம் அதிகம் கேட்கும் சூர்யா பட பாடல்களுக்கு ஹாரிஸ் தான் இசை. 

2000-க்குப் பிந்தைய தமிழ்த் திரையிசையை ஆட்சி செய்த இசையமைப்பாளர்களுள் ஹாரிஸ் ஜெயராஜ் மிகமிக முக்கியமானவர். அவரது கம்பேக்குக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொது அவரது கையில் இருக்கும் ஒரே படம் லெஜண்ட் சரவணா நடிக்கும் படம். ஒரு காலத்தில் ரஜினிகாந்த் தவிர அனைத்து முன்னணி படங்களுக்கும் அவர் இசையமைத்து இருக்கிறார். ஹாரிஸ் இசையமைக்கும் படங்களுக்கென வியாபார சந்தை விரிவடையும்.

கடந்த சில ஆண்டுகளாக அவரது இசையமைத்த படங்களின் பாடல்களுக்கு போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு அவரது இசையில் மாற்றமில்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது ரசிகர்களின் ரசனை மாறியிருக்கலாம். இது எல்லா கலைஞர்களுக்கும் நிகழும். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதே பிரச்னை.

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என இசையமைப்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும்போதெல்லாம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர். அது அவர்களை புதுப்பித்துக்கொள்ள உதவியது.

உதாரணமாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்ததற்கு பிறகு அவரது பாடல்கள் தொய்வை சந்தித்தன. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் மூலம் தன்னை நிரூபித்தார். நல்ல கதைகள் அமைந்தால் ஹாரிஸும் தன்னை நிரூபிப்பார் என்பது நிச்சயம். 

இப்பொழுது முகநூலில் உள்ள இசைக் குழுக்களில் தினம் ஒரு பதிவாவது ஹாரிஸின் திறமையை பேசுபவையாக இருக்கும். இந்த நிலையில் தான் அவரது பிறந்த நாள் சிறப்பாக அவர் இசையமைக்கும் ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தப் பாடல் ஹாரிஸின் இரண்டாவது ஆட்டத்துக்கு ஆரம்பமாக இருக்கும் என நம்புவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com