ஜீ தமிழ் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!

''வாடி வீராயி, நீதான் மகமாயி, வாசல்படி தாண்டி, வந்தாளே தீ மாறி'' எனத் தொடங்கும் பாடலில் சலிப்பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு புத்துயிர்ப்பூட்டும் பாடலாக கேட்கிறது. 
ஜீ தமிழ் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கனா என்ற பெயரில், கடந்த திங்கள் கிழமை முதல் புதிய தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

'சரவணன் மீனாட்சி' சீசன் 3 தொடரில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு உன்னிகிருஷ்ணனும், 'நீதானே என் பொன்வசந்தம்' தொடரில் நாயகியாக நடித்த தர்ஷனாவும் இந்த தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இருவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன. அதோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சீரியல்களில் நடிப்பதால், இந்த தொடருக்கு புரோமோ முதலே மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

ஜீ தமிழில் இதற்கு முன்பு ஒளிபரப்பான ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ தொடரில் நடித்ததன் மூலம் பல பெண் ரசிகர்களைக் கவர்ந்தவர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன். மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், பல குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சீரியல்களில் மும்முரமாக களமிறங்கியுள்ளார். 

இதேபோல தர்ஷனாவும் இதற்கு முன்பு ஒளிபரப்பான ஜீ தமிழ் சீரியலிலேலே மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். 'நீதானே என் பொன்வசந்தம்' தொடர் மூலம் நடுத்தரக் குடும்பத்து இளம்பெண்ணாக நடித்து விருதுகளையும் பெற்றுள்ளார்.  

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து 'கனா' தொடரில் நடிக்கின்றனர். கடந்த திங்கள் கிழமை (நவ.21) முதல் பிற்பகல் 1.30 மணிக்கு 'கனா' தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றோடு இரண்டு எபிஸோடுகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு எபிஸோடுகளிலும் சிறப்பான திரைக்கதையினைக் கொண்டதாக அமைந்துள்ளது கனா தொடர்.

இந்த இரண்டு எபிஸோடுகளும் கனா தொடரை மற்ற தொடர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. 

1. எந்தவொரு கதைக்கும் தொடக்கம் மிக முக்கியம். அந்தவகையில், ஒரு தொடருக்கும் ஆரம்பம் மிக முக்கியம். மக்கள் அதனை அடுத்தடுத்த எபிஸோடுகள் தொடர்ந்து பார்ப்பதற்கு அவைதான் வித்திடுகின்றன. அந்தவகையில் இந்த தொடரின் ஆரம்ப காட்சிகள் வழக்கமான வழிபாட்டுமுறை காட்சிகளிலிருந்து வேறுபடுகின்றன. இதுவரை பல தொடர்களின் ஆரம்ப எபிஸோடுகள், மூலக்கதை மாந்தர்களுடைய வீட்டின் பூஜையறையாகவே இருந்துள்ளது. 

2. தொடக்கம் சிறப்பாக அமைவதைப்போல, ஒரு தொடருக்கு புரோமோவும் மிக முக்கியம். அந்தவகையில் கனா தொடருக்கு திருமணக் கோலத்தில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடும் கதாநாயகியின் சில காட்சிகளே தரமான புரோமோவாக அமைந்துள்ளது. மணவறையில் காத்திருக்கும் மணமகன் ''மாமா பொண்ணு வந்துடுவாளா?'' என சோகத்துடன் கேட்க, விசிறி வீசியபடி இருக்கும் புரோகிதர், ''அட பிரம்மகர்த்தி... பொண்ணு ஓடிப்போய் அரை மணிநேரம் ஆகறதுடா'' என பதிலளிப்பார். அங்கிருந்து தொடங்குகிறது 'கனா' புரோமோ.

3. ''வாடி வீராயி, நீதான் மகமாயி, வாசல்படி தாண்டி, வந்தாளே தீ மாறி'' எனத் தொடங்கும் பாடலில் சலிப்பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு புத்துயிர்ப்பூட்டும் பாடலாக கேட்கிறது. 

4. இதுவரை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் முதல் தொடராகவும் உள்ளது 'கனா'. தமிழ் சினிமாவில் முதல்முறை மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமான 'கனா'வைப் போன்று இந்த 'கனா'வும்.

5. அப்பா இல்லாத வீட்டில், அம்மா கஷ்டப்பட்டு வளர்க்கும் பிள்ளைகளுக்கு உறவினர்களே பெரும்பாலும் வில்லன்களாக இருப்பார்கள். இதுவரை ஹிட்டடித்த, ஏன், தற்போதும் பெரும் வரவேற்பில் இருக்கும் 'கயல்' போன்ற தொடரிலும் இதுவே சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. 'கனா' அதனை அடித்து நொறுக்கி தாய் மாமன் உறவைத் தூக்கிப் பிடிக்கிறது. 

6. ஒரு தொடரில், நாயகி அல்லது நாயகன் இருவரில் யாரேனும் ஒருவர் வெள்ளித் திரையிலிருந்து ஓய்வு பெற்று சின்னத்திரைக்கு வந்தவர்களாக இருப்பர். அல்லது மிகுந்த அனுபவம் வாய்ந்தவராக இருப்பர். கனா தொடரில் நாயகனும் நாயகியும், ஒத்த வயதுடைய, அதே சமயம் பலராலும் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பது தனி பலம்.

7. தமிழ் சீரியல் வரலாற்றில் ஒரு தொடர் பெரும்பாலும் திருமணத்தில் சென்றுதான் முடியும். எனில் ஆரம்பம், தாய் வீட்டில் துள்ளளுடன் தொடங்கும். ஆனால், கனாவில் இது முற்றிலும் வேறுபட்டது. முதல் எபிஸோடிலேயே நாயகிக்கு திருமணம் நின்றுவிடும். முதல் எபிஸோடை சுபமாகத் தொடங்கி முடிக்க வேண்டும் என்ற மரபு உடைத்து நொறுக்கப்பட்டது.

8. இரண்டாவது எபிஸோட் மரபுகளுக்கு திருஷ்டி பொட்டு வைத்தாற்போல் அமைந்தது. 2வது எபிஸோடில் திருமணக் கூரைப் புடவையுடன் இருக்கும் மகளை (நாயகியை), அம்மா துடைப்பத்தால் நடுரோட்டில் வைத்து அடிக்கும் காட்சிகள் இதுவரை திரைப்படத்திலும் வந்ததில்லை.

9. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளச் சென்றதால், திருமணம் நின்றுவிடும். திருமணம் நின்ற விரக்தியில் நாயகியின் அம்மா உள்பட பலரும் சோகத்தில் இருக்க நாயகி, தன்னுடைய ஓட்டப்பந்தய வீராங்கனையாகும் கனவை நினைத்துக்கொண்டிருப்பார். இரண்டாவது எபிஸோடின் முடிவில் நாயகிக்கு, சூழலைப் புரிந்துகொண்ட புதிய வரன் வீடு தேடி வரும். அம்மா மீண்டும் மகிழ்ச்சியாக, நாயகி மீண்டும் சோகத்தில் மூழ்குவார். 

10. ஓட்டப்பந்தயத்தில் வென்ற நாயகிக்கு வெற்றிக்கோப்பையை வீடு தேடி வந்து கொடுப்பதே நாயகியிடம் நாயகனின் அறிமுகம். பல சீரியல்களில் நாயகனின் அறிமுகம் நன்மதிப்புடன் நிறைவடையும். ஆனால், இதில் அவமானப்படுத்தப்பட்டு கோப்பையுடன் திரும்ப அனுப்பப்படுவார்.

இப்படி இரண்டு எபிஸோடுகளிலேயே கதையில் மட்டுமே கவனம் செலுத்தி காட்சிகளில் பல மாற்றங்களை கனா தொடர் அளித்துள்ளது. இயக்குநர் உள்ளிட்ட படைப்பாளிகள் பாராட்டுக்குரியவர்கள். அடுத்தடுத்த எபிஸோடுகளிலும் இந்த அடர்த்தியை தக்க வைக்கிறதா? அல்லது கனவாகவே போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com