பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் நேற்று இரவு சக போட்டியாளரிடம் சண்டை போட்ட ஜி.பி.முத்து உணர்ச்சிவசப்பட்டு அழும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 24 மணிநேரம் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சீசனில், யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்துவும் கலந்து கொண்டுள்ளார். கடந்த சீசன்களை போல் இல்லாமல், போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்தே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
போட்டியாளர்கள் சமையல் கிளப், பாத்திரம் கழுவும் கிளப், வீட்டை சுத்தம் செய்யும் கிளப், பாத்ரூம் கிளப் என நான்கு கிளப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒவ்வொரு கிளப்பிலிருந்தும் 4 பேரை தேர்வு செய்து வெளியில் இருக்கும் வாழைப்பழ வடிவிலான படுக்கைக்கு அனுப்புவது ஒரு டாஸ்க்காக விளையாடப்பட்டு வருகின்றது.
இதில், பாத்திரம் கழுவும் கிளப்பிலிருந்து சின்னத்திரை நடிகை ஆயிஷாவை செய்தி வாசிப்பாளார் ஜனனி வாழைப்பழ படுக்கைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, நேற்று இரவு ஜி.பி.முத்துவை ஆயிஷா வாழைப்பழ படுக்கைக்கு தேர்வு செய்து அறிவித்தார். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது, பாத்திரம் கழுவும் அணியில் இருந்து கொண்டு சமையல் அணிக்காக வேலை பார்த்ததாக குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜி.பி.முத்து, எனது வேலைகளை செய்த பிறகுதான் பிற அணியினருக்கு உதவியதாகவும், இனியும் அப்படிதான் இருப்பேன் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஜி.பி.முத்து மரியாதை தரவில்லை என்றும், அவர் எதுவும் தெரியாதது போல் நடிக்கிறார் என்றும் தனலட்சுமி கூறியுள்ளார். இதைக் கேட்ட ஜி.பி.முத்து, ‘எனது மகள் வயது உனக்கு, நான் நடிக்கிறேனா’ என்று கொந்தளித்தார்.
தொடர்ந்து, வீட்டிற்குள் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து திடீரென மன அழுத்தத்தில் அழுக ஆரம்பித்துவிட்டார். சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.
கடந்த நான்கு நாள்களாக வீட்டில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்து கலகலப்பாக இருந்த ஜி.பி.முத்து அழுவதை கண்ட அவரது ரசிகர்கள், ‘நீங்கள் கவலைப்படாதீங்க நாங்க இருக்கிறோம் தலைவரே’ என்று டிவிட்டரிலும், முகநூலிலும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
இந்தப் பிரச்னை இதோடு நின்றுவிடாமல் அடுத்து வரும் நாள்களில் இன்னும் சூடுப்பிடிக்கும் என்றே தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!