இது நூறு ரூபாய் பிரியாணி அல்ல: விஜய் அளித்த விருந்து பற்றி இளம் நடிகர்

விருந்தில் அடுத்த ஒரு மாதத்துக்கான உணவை நான் சாப்பிட்டு விட்டேன்.
இது நூறு ரூபாய் பிரியாணி அல்ல: விஜய் அளித்த விருந்து பற்றி இளம் நடிகர்

பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததற்காகப் படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் விஜய்.

விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13 அன்று வெளியானது பீஸ்ட் படம். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - அனிருத்.

படம் வெளியாகி இரு வாரங்கள் ஆன நிலையில் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் விஜய். இதுபற்றி ட்விட்டரில் இயக்குநர் நெல்சன் தகவல் தெரிவித்து புகைப்படமும் வெளியிட்டார்.

விருந்தில் பங்கேற்ற பீஸ்ட் படத்தில் நடித்த இளம் நடிகரும் நடன இயக்குநருமான சதீஷ், ட்விட்டரில் கூறியதாவது:

அருமையான பொழுதை அளித்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. இதை எப்போதும் நினைவில் கொள்வேன். இந்தமுறை நூறு ரூபாய் பிரியாணி கிடையாது. அது நெல்சனுக்கு மட்டும்தான் என நினைக்கிறேன். விருந்தில் அடுத்த ஒரு மாதத்துக்கான உணவை நான் சாப்பிட்டு விட்டேன். (புகைப்படத்தில் உள்ளது போன்ற) இப்படி ஒரு போஸை நான் தவிர்த்திருக்கலாம் என்பதைத் தாமதமாக உணர்ந்தேன். பரவாயில்லை. புகைப்படத்தில் தளபதி அருமையாக உள்ளார். இதை நான் காப்பி அடித்து வேறொரு இடத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன். எனக்கு அருமையான நினைவுகளைத் தந்தவர்களுக்கு நன்றி என்றார்.

பட வெளியீட்டுக்கு முன்பு சன் டிவிக்காக விஜய்யை இயக்குநர் நெல்சன் பேட்டியெடுத்தார். அப்பேட்டியின்போது நெல்சன் கூறியதாவது:

ஒருநாள், மாலையில் வாருங்கள். ஜாலியாகப் பேசிக்கொண்டு இரவு உணவு அருந்தலாம் எனக் கூறினீர்கள். உங்கள் வீட்டில் நன்றாகச் சாப்பிடலாம் எனக் குறைவாகவே சாப்பிட்டு வந்தேன். நிறைய பேசினோம். சாப்பிடும் நேரம் வந்தது. எல்லோரும் சாப்பிடுகிறீர்களா எனக் கேட்டீர்கள். பார்த்தால், ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்த பிரியாணி பாக்கெட்டை எடுத்து வைத்தீர்கள். இந்த நூறு ரூபாய் பிரியாணியைத்தானே எப்போதும் சாப்பிடுகிறோம், இதைச் சாப்பிடுவதற்காகவா அங்கிருந்து இங்கு வந்தேன் என்று நினைக்கத் தோன்றியது. அப்போதுதான் முடிவு செய்தேன், நீங்கள் எப்போது சாப்பிடக் கூப்பிட்டாலும் சாப்பிட்டு விட்டு தான் வரவேண்டும் என என்றார் நெல்சன். அது ருசியாக இருக்கும். அதனால் தான் என்றார் விஜய். அதுசரிதான் சார், விஜய் சார் சாப்பிடக் கூப்பிட்டால் ராஜபோக சாப்பாடு இருக்கப் போகிறது என்றுதான் நினைப்போம். ஆனால் நீங்கள் பிளாஸ்டிக் கவரை எடுக்கும்போதே ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இதுபோல நீங்கள் எளிமையாக வாழ்வது அப்போதுதான் தெரிந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com