இளையராஜாவின் இசையைப் பாராட்டிய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ பட இயக்குநர்

இப்படத்தின் இசையை மிகவும் ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை.
இளையராஜாவின் இசையைப் பாராட்டிய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ பட இயக்குநர்

1997-ல் வெளிவந்த ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனை இயக்கியவர், மஜித் மஜிதி. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. உலக சினிமா ஆர்வலர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்தப் படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

இளையராஜா இசையில் சாமி இயக்கத்தில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனின் தமிழ் ரீமேக், அக்கா குருவி என்கிற பெயரில் உருவாகியுள்ளது. மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ளன. மாஹின் என்கிற சிறுவனும் டாவியா என்கிற சிறுமியும் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜா எழுதியுள்ளார். 

அக்கா குருவி படத்தைப் பார்த்த இயக்குநர் மஜித் மஜிதி, ஒரு பாராட்டுக் கடிதம் ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

என்னுடைய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகியுள்ள அக்கா குருவி படத்தைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. மூலப்படத்தில் உள்ள உணர்வுகளை, கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது. கிளைக்கதையாக வரும் காதல் கதை, உங்கள் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளதாக நம்புகிறேன். இப்படத்தின் இசையை மிகவும் ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை.

முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.  இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று மஜித் மஜிதி தெரிவித்துள்ளதாகப் படக்குழு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

அக்கா குருவி படம் மே 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com