''உண்மை வெல்லும், ஜெய்பீம்'' - என்ஜாயி எஞ்சாமி சர்ச்சைக்கு அறிவு விளக்கம் - பதில் சொல்வாரா சந்தோஷ் நாராயணன்?

பாடகர் அறிவு எழுதி, பாடிய என்ஜாயி எஞ்சாமி பாடல் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் அறிவுடன் இந்தப் பாடலை பாடியிருந்தார். 
''உண்மை வெல்லும், ஜெய்பீம்'' - என்ஜாயி எஞ்சாமி சர்ச்சைக்கு அறிவு விளக்கம் - பதில் சொல்வாரா சந்தோஷ் நாராயணன்?

பாடகர் அறிவு எழுதி, பாடிய என்ஜாயி எஞ்சாமி பாடல் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் அறிவுடன் இந்தப் பாடலை பாடியிருந்தார். 

இந்த நிலையில் மேடைகளில் பாடும்போது  தீ மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவதாகவும், அறிவு சந்தோஷ் நாராயணனால் புறக்கப்பணிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. 

இதனால் சந்தோஷ் நாரயணன் மேல் இயக்குநர் பா.ரஞ்சித் கடுப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கேற்ப இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மா தான் இசையமைப்பாளர். மேலும் விக்ரமை வைத்து பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாடகி தீ
பாடகி தீ

இதற்கெல்லாம் உச்சமாக சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் என்ஜாயி எஞ்சாமி பாடலை அறிவு இல்லாமல் தீ மட்டும் பாடினார். இதனையடுத்து அறிவு அமெரிக்காவில் இசை சுற்றுப்பயணத்தில் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

அதில், ''நானே என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு இசையமைத்து எழுதி பாடினேன். எனக்கு யாரும் இசை மட்டுமல்ல, ஒரு வார்த்தை கூட தரவில்லை. நான் 6 மாதங்களாக தூக்கமில்லாமல், மன அழுத்தத்துடன் உருவாக்கிய பாடல். சிறந்த குழுவால் இந்தப் பாடல் உருவானது என்பதில் ஐயமில்லை. 

இதன்காரணமாக இது வல்லியம்மாள் அல்லது தேயிலைத் தோட்டத்தில் அடிமைகளாக இருந்த மூதாதையர்களின் வரலாறு இல்லை என்று ஆகிவிடாது. எனது எல்லா பாடலும் ஒடுக்கப்பட்டவர்களின் தழும்புகளைக் கொண்டிருக்கும். 

இந்த மண்ணில் கிட்டத்தட்ட 10000 நாட்டுப்புற பாடல்கள் இருக்கும். அவை முன்னோர்களின் வாழ்க்கை, வலி, இருப்பு ஆகியவற்றை சொல்வதாக உள்ளது. ஒரு அழகான பாடல்களின் வழியே அவற்றை நமக்கு சொல்கிறது. நம் தலைமுறையே இரத்தமும் வேர்வையும் கொண்ட வரலாற்றை கலையின் வடிவில் அறிந்துகொள்கிறோம். பாடல்களின் வழியே நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துசெல்கிறோம். 

நீங்கள் தூங்கும்போது உங்களது செல்வத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் முழித்திருக்கும்போது யாராலும் அபகரிக்கமுடியாது. இறுதியில் உண்மை வெல்லும். ஜெய் பீம் என்று குறிப்பிட்டுள்ளார். 

பாடகர் அறவின் குற்றச்சாட்டுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் பாடகி தீயும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com