
பாலா இயக்கத்தில் சூர்யா 'வணங்கான்' என்ற படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்துக்கு நாயகியாக க்ரீத்தி ஷெட்டியும், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷும் அறிவிக்கப்பட்டனர்.
வணங்கான் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படம் பாதியில் நிற்பதாக தகவல் வெளியானது.
இதனை தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் மறுத்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கிடையில் இயக்குநர் சிவாவின் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க | மீண்டும் திரைக்கு வருகிறது ‘அவதார்’
சமீபத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) துவங்கி நடைபெற்றுவருகிறது.
இதனையடுத்து நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, சூர்யா 42 படப்பிடிப்பு துவங்கியது. உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் 42வது படமான இது, 5 மொழிகளில் உருவாகிறதாம். தேவி ஸ்ரீ பிரசாத் - சூர்யா கூட்டணி ஏற்கனவே மாயாவி, ஆறு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. மேலும் சிவாவின் வீரம் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். புஷ்பா படத்தின் பாடல்கள் உலக அளவில் மிக பிரபலமானது. இந்த காரணங்களால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.