
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அவரின் தாயார் ரசிகர்களுக்காக உருக்கமான விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி, முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் சித்ராவின் தாயார் வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற, சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை மிஞ்சினார் ஜனனி!
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு, பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
சித்ரா தாயார் உருக்கம்:
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி விஜே சித்ராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி முதியோர் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து விஜே சித்ராவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ரசிகர்களுக்கு அவரின் தாயார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். விடியோவில் அவர் பேசியதாவது,
சித்ரா மறைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு இன்னனும் பதில் கிடைக்கவில்லை. நான் உங்களுடன் பேசவேண்டும் என வெகு நாட்களாக காத்திருந்தேன். ஆனால், துக்கம் என்னை பேச விடாமல் செய்தது. விளையாட்டாக இருந்த பிள்ளை விளையாட்டாகவே சென்று விட்டது.
ஆனால் சித்ராவுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க நீங்கள் எல்லோரும் பிராத்தனை செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு விஜே சித்ராவின் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.