
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஆஹா ஓடிடி தளத்தில் அன்ஸ்டாப்பபிள் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபு கலந்துகொண்டார்.
அப்போது சுவாரசியமான தகவல் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, ''நான் சென்னையில் விளம்பரப் பட படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றேன். அங்கு ஒரு நட்சத்திர உணவு விடுதியில் என் குடும்பத்தினருடன் உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டனர்.
இதையும் படிக்க | ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு 'ஜெய் பீம்' செல்வது உறுதி: பிரபல அமெரிக்க விமர்சகர் நம்பிக்கை
அதற்கு அவர்களிடம், இது நான் என்னுடைய குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் என்று கூறி மறுத்துவிட்டேன். அப்போது என் விளம்பரப் பட இயக்குநர் என்னிடம், அவர்கள் இயக்குநர் ஷங்கரின் மகள்கள் என்று சொன்னார்.
அதிர்ச்சியான நான், இயக்குநர் ஷங்கரிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டேன். என்னை அவர் புரிந்துகொண்டு, நடிகர்கள் பற்றி என் மகள்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று என்னிடம் கூறினார்.
இயக்குநர் ஷங்கர் 3 இடியட்ஸ் பட ரீமேக்கில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இயக்குநர் ஷங்கருடன் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பத்தை மகேஷ் பாபு பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.