பொங்கலுக்கு வெளியான கமல்ஹாசன் படங்கள்: கொண்டாடும் ரசிகர்கள் - அப்படி என்ன சிறப்பு ?

பொங்கலுக்கு வெளியான கமல்ஹாசன் படங்கள்: கொண்டாடும் ரசிகர்கள் - அப்படி என்ன சிறப்பு ?

பொங்கலை முன்னிட்டு வெளியான கமல்ஹாசனின் மகாநதி, விருமாண்டி, பம்மல் கே.சம்மந்தம், அன்பே சிவம் படங்கள் குறித்து ஒரு பார்வை 

வெளியான போது படுதோல்வி அடைந்த ஒரு படம்  பின்னர் ஒவ்வொரு வருடமும் வெளியான தேதியில் கொண்டாடப்படுவதனையும் கடந்த சில வருடங்களில் அதிகம் பார்க்கிறோம். குறிப்பாக செல்வராகவனின் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் மறு வெளியீடாக திரையிடப்பட்டபோது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றன.

ஆனால் இதற்கெல்லாம் விதை போட்டது நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் தொடர்ந்து தனது படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கிறார். அவை எப்பொதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் வெளியான போது தோல்வி படமாக இருக்கும்.

மக்களால் அங்கீகரிக்கப்படாத போதும் தொடர்ந்து புதிய முயற்சிகளை செய்து வந்திருக்கிறார் என்பது முக்கியம். ஆனால் அவர் தொடர்ந்து சினிமாத்துறையில் இயங்க வேண்டுமே. அதற்கு அவ்வப்போது வெற்றிப்படங்கள் கொடுத்தாக வேண்டும். அதற்காக அவர் கையிலெடுத்தது நகைச்சுவை படங்கள். அது அவருக்கு போதிய வெற்றியைக் கொடுத்து சினிமாவில் தொடர்ந்து இயங்க உதவி வருகின்றன. 

நடிகர் கமலும் அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படங்களை செய்து வந்திருக்கிறார். உதாரணமாக அபூர்வ சகோதரர்கள் படத்தின் உண்மை திரைக்கதை வேறு விதமாக இருந்தது. முழுமை பெறாமல் இருந்த திரைக்கதையை தமிழ் சினிமாவின் திரைக்கதை வல்லுனரான பஞ்சு அருணாச்சலத்திடம் கொண்டு சென்றிருக்கிறார் கமல்.

பஞ்சு அருணாச்சலம் சொன்ன யோசனையின் அடிப்படையில் கமல் திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்தப் படம் பெரும் வெற்றிபெற்று, அப்போதைய வசூல் சாதனைகளை முறியடித்தது. அப்பாவை கொன்றவரை பழிவாங்கும் இரட்டை சகோதரர்கள் என  கிட்டத்தட்ட மூன்று முகம் உள்ளிட்ட பல படங்களின் சாயல் அந்தப் படம் அமைந்திருக்கும்.

சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கும் கமலுக்கு கமர்ஷியல் படங்களின் மேல் நாட்டம் குறைகிறது. கமர்ஷியல் படங்களை செய்வதற்கு பல பேர் இருக்கிறார்கள். ஆனால் புதிய முயற்சிகளை செய்ய அவரை விட்டால் யாரும் இல்லை. 90களில் அவர் தனது பாணியை முற்றிலும் மாற்றிக்கொண்டார். 

90களுக்கு பிறகு ஒரு படத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு நகைச்சுவை படத்தில் நடிப்பார். குணா படத்தில் நடித்தால் தொடர்ச்சியாக சிங்காரவேலனில் நடிப்பார். நம்மவர், மகாநதி போன்ற படங்களில் நடித்தால், தொடர்ச்சியாக சதிலீலாவதியில் நடிப்பார். ஹேராம் படத்தில் நடித்தால், தெனாலியில் நடிப்பார். இப்படியிருக்க பொங்கலுக்கு வெளியான சில படங்களை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த படங்கள் குறித்து ஒரு பார்வை

மகாநதி

எப்படி புத்தாண்டு என்றதும் இளையராஜா - கமல்ஹாசன் கூட்டணியின் இளமை இதோ இதோ பாடல் நினைவுக்கு வருகிறதோ, அதே போல பொங்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது தை பொங்கலும் வந்தது என்ற பாடல். மகாநதியில் தான் அந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். 

எழுத்தாளர் ரங்கராஜனுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதியிருந்தார். சந்தானபாரதி இந்தப் படத்தை இயக்கியிருப்பார். கும்பகோணம் அருகே தனது மனைவியை இழந்த கிருஷ்ணா, தனது மாமியார், மகள், மகனுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சீட்டு நிறுவனம் நடத்தும் தனுஷ் என்பவரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து சிறை செல்கிறார். குடும்பத்தை இழக்கிறார். கிட்டத்தட்ட வினோத்தின் சதுரங்க வேட்டை படத்தின் கதை. ஆனால் ஏமாறுபவரின் கண்ணோட்டத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆவிடில் படத்தொகுப்பு செய்யப்பட்ட இந்தியாவிலேயே முதல் திரைப்படம் மகாநதி. 

மகாநதி என்ற தலைப்புக்கு ஏற்ப கதாப்பாத்திரங்கன் பெயர்கள் கிருஷ்ணா, காவேரி, யமுனா, நர்மதா என நதிகளின் பெயர்களாக இருக்கும். மற்ற படங்கள் போல் அல்லாமல், ஒரு சராசரி குடும்பத்தலைவராக கிருஷ்ணாவாகவே வாழ்ந்திருப்பார் கமல்.   மகளை தேடியலையும் காட்சிகள் பார்வையாளர்களை கண்கலங்கச் செய்தன. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசை படத்துக்கு ஒரு கதை சொல்லியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். 

பம்மல் கே சம்மந்தம். 

கடந்த 2002 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் இன்றுடன் 20 வருடங்களை நிறைவு செய்கிறது. மௌலி இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம்.

கல்யாணமே வேண்டாம் என கொள்கையுடன் வாழும் பம்மல் கே சம்மந்தம் திடீரென காதல் வந்தால் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவை கலந்துசொல்லியிருக்கும் படம். கிரேஸி மோகனின் வசனங்களுக்கு திரையரங்குகள் சிரிப்பலைகளால் அதிர்ந்தன. இன்றளவும் பலரால் நினைவுகூரத்தக்க நகைச்சுவை படங்களில் பம்மல் கே சம்மந்தம் நிச்சயம் இடம் பிடிக்கும். 


அன்பே சிவம் 

கடந்த 2003 பொங்கலுக்கு வெளியான அன்பே சிவம் இந்த வருடத்துடன் 19 வருடங்களை நிறறைவு செய்கிறது. எதிர்பாராத விதமாக ஒரு பயணத்தில் சந்திக்கும் நல்ல சிவம் மற்றும் அன்பரசு ஆகிய இருவரின் வாழ்க்கையும் எவ்வாறு ஒரு புள்ளியில் சந்திக்கிறது என்பதே அன்பே சிவம் படத்தின் கதை. நல்ல சிவம் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட், அன்பரசு முதலாளித்துவத்தை ஆதரிக்கக் கூடியவர். மாற்றுக் கருத்துடைய இருவரின் உரையாடல்கள் வழி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 

நல்ல சிவம், அன்பரசு மட்டுமல்ல, இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் தனித்துவமானவை. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் சம்பவங்களுக்கு எப்படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று நல்ல சிவத்தின் கண்ணோட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். உரையாடல்கள் தான் கூடுதல் சிறப்பு. காதல் என்பது ஒரு ஃபீலிங் என அன்பரசு சொல்ல, கம்யூனிசமும் ஒரு ஃபீலிங் தான் என நல்ல சிவம் சொல்வார். 

குறிப்பாக இறுதியில் அன்பரசுவுக்கு நல்ல சிவம் எழுதும் கடிததத்தில் ''பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாயலங்கள் ஏதுமில்லை. நானும் ஓர் பறவை தான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகரியமாக கருதும் பறவை. அடுத்த நொடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம். அடுத்த நொடியின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்'' என அவர் முடிக்கும் படத்தை கிளாசிக் படங்களின் வரிசையில் இடம் பிடிக்க செய்திருக்கின்றன. 

விருமாண்டி 

ஒவ்வொரு கதைக்குமே பல்வேறு கோணங்கள் இருக்கும். திரைப்படங்களில் இந்த முறையில் கதை சொல்லப்படும் படங்களுக்கு இதனை ரஷோமோன் விளைவு என்பர். இந்த முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் படம் விருமாண்டி.

குற்ற வழக்குகள் தொடர்பாக சிறையில் இருக்கும் விருமாண்டி, கொத்தால தேவர் ஆகிய இருவரை பேட்டி காண வருவார் சமூக சேவகி ஏஞ்சலா காத்தமுத்து. மரண தண்டனைக்கு எதிராக போராடி வருபவர் என்பதால்,  விருமாண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தடுக்க விருமாண்டி மற்றும் கொத்தால தேவரை தனித்தனியாக பேட்டி காண்பார்.  

பிரதான கதாப்பாத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் பசுபதியின் நடிப்பு படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றது. மதுரை பின்னணியில் தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்கள் வந்திருந்தாலும், வித்தியாசமான திரைக்கதையால் தனித்து நிற்கிறது விருமாண்டி. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்துக்கும், லோகேஷ் கனகராஜிற்கு கைதி படத்துக்கும் விருமாண்டி தான் முன்னோடியாக இருந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்கள் என பட்டியலிட்டால் விருமாண்டி நிச்சயம் இடம் பிடிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com