
விக்ரம் படத்தின் பின்னணி இசை தயாராகவிருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வருகிற 8 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திலிருந்து போர்கொண்ட சிங்கம் மற்றும் பத்தல பத்தல விடியோ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது விக்ரம் பட பின்னணி இசை அனைத்தும் தயாராகவுள்ளதாகவும், சில நாட்களில் அவை வெளியாகும் எனவும் அனிருத் அறிவித்துள்ளார். இந்த தகவல் கமல் ரசிகர்களிடைய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் விக்ரம் - பா.ரஞ்சித் படம்
குறிப்பாக ரோலெக்ஸாக வரும் சூர்யா காட்சிகளின் பின்னணி இசைக்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். விக்ரம் பட பின்னணி இசை வெளியான பிறகு பலரது மொபைல் போன் ரிங்டோனாக விக்ரம் பட இசை தான் இருக்கும் என்பதை இப்பொழுதே உறுதியாக கூறலாம்.
விக்ரம் படத்துக்கு அனிருத்தின் இசையும், கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்தன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சந்தான பாரதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட படம் வெளியாகி 5 வாரங்களைக் கடந்து நிறைய திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாகவிருப்பதாக கமல் தெரிவித்திருந்தார்.
#VikramBGM #VikramOST readyyy
— Anirudh Ravichander (@anirudhofficial) July 2, 2022
Jukebox within a few days @ikamalhaasan @Dir_Lokesh @RKFI @turmericmediaTM @SonyMusicSouth