இளையராஜா மீது ஏன் இவ்வளவு வன்மம் ?

இளையராஜாவின் மீது காட்டப்படும் வன்மங்களுக்கான காரணம் குறித்து ஒரு பார்வை. 
இளையராஜா மீது ஏன் இவ்வளவு வன்மம் ?

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பாகுபலி கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமாகிய விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''தலைமுறைகளைக் கடந்து இளையராஜாவின் அற்புத  படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்துவருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. 

அவரது படைப்புகளைப் போலவே,  எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது.  எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளைப் படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக அவர் மீது ஒரு சிலர் வெறுப்பை உமிழ்வதையும் பார்க்க முடிகிறது. பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்துச் சொன்ன பதிவுகளில், 'இதற்குதான் அம்பேத்கரையும் நரேந்திர மோடியையும் இளையராஜா  ஒப்பிட்டு எழுதினார், இளையராஜா குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார், அவருக்கு எம்பி பதவிதான் கிடைத்தது'' என வன்மத்துடன் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இளையராஜா கடவுள் நம்பிக்கை கொண்டவர். அதை அவர் எப்பொழுதும் மறுத்ததில்லை. நம் எல்லோரையும்போல அவருக்கென சில கொள்கைகள் இருக்கும். அதன்படி அவர் நடக்கிறார். நம் எதிர்பார்ப்பது போலவே எல்லாராலும் நடந்துகொள்ள முடியாது; அவராலும் நடந்துகொள்ள முடியாது.  அவரால் மட்டுமல்ல, எந்தப் பிரபலங்களாலும் முடியாது. 

இசையுலகில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இளையராஜா. நம் நாட்டுப்புற இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்தவர். மேற்கத்திய இசையிலும் மேதையாகத் திகழ்கிறார். அவர் இசைத் திறமையை யாராலும் மறுக்கவோ, குறைவாக எடைபோடவோ முடியாது. இசையுலகில் அவர் இருக்கும் உச்சத்தையும், மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் அன்பையும் ஒப்பிடுகையில் அவருக்குத் தற்போது கிடைத்துள்ள மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி அப்படியொன்றும் பெரிதில்லை. 

கமல்ஹாசன் சொன்னதுபோல அவரது திறமைக்கு குடியரசுத் தலைவர்  பதவியே கொடுத்திருக்க வேண்டும். இப்படி இருக்கையில் அவர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துதான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்றார் என்பது மிகவும் மலிவான குற்றச்சாட்டு. 

இப்பொழுது மட்டுமல்ல. தொடர்ச்சியாகத் தனது செயல்களுக்காக  இளையராஜா விமர்சிக்கப்பட்டுவருகிறார். காப்புரிமைப் பிரச்னையின்போது அவர் கடுமையான எதிர்க் கருத்துக்களைச் சந்தித்தார். என்னவோ இளையராஜா மட்டுமே காப்புரிமை கேட்பதுபோல ஒருசிலர் அவருக்கு எதிராக பேசினர்.

அனைத்து இசையமைப்பாளர்களும் தங்களது இசைக்காகக் காப்புரிமை பெறுவது நடைமுறையில் இருப்பதுதான். ஒருவரின் உழைப்பை வைத்து மற்றொருவர் பணம் சம்பாதிக்கும்போது, அதில் சம்பந்தப்பட்டவர் உரிமை கோருவதில் தவறென்ன இருக்கிறது ?

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் அவர் காப்புரிமை கேட்டதுதான் பிரச்னை  என்றால், எஸ்பிபியே அதற்கு எதுவும் தெரிவிக்கவில்லை. மற்றவர்களுக்கு  என்ன வந்தது? எஸ்பிபி சரண் ஒரு நிகழ்ச்சியில், ''இளையராஜா காப்புரிமை கேட்டபோது எனக்குக் கடுமையாக கோபம் வந்தது. ஆனால் அதன் பிறகும் இருவரும் நட்புடன் பழகியதைப் பார்க்கும்போது எனது கோபம் காணாமல் போனது'' என இருவரின் நட்பைப் பற்றி பெருமையாகத் தெரிவித்தார். எஸ்பிபிக்கும் அவரது மகனுக்குமே கோபம் இல்லையெனும்போது நடுவில் மற்றவர்கள் எல்லாம் யார்?

இப்பொழுதுகூட இளையராஜா தலித் என்பதால் அவருக்கு எம்பி பதவி  அளிக்கப்பட்டதாகவும், பாஜக தலித் மக்கள் மேல் அக்கறையுள்ள கட்சி  என்பதற்கு இது உதாரணம் எனவும் அக்கட்சியைச் சேர்ந்தவர்களில் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர். இளையராஜாவின் திறமைக்கு அல்லாமல், அவர் தலித் என்பதால் பதவி கொடுத்ததாக எவரொருவர் கூறினாலும் அவரை  அவமானப்படுத்துவது போன்றதே!

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக  இசையில் அவர்தான் ராஜா. 1992 ஆம் ஆண்டு ரோஜா மூலம் அறிமுகமான  ஏ.ஆர். ரஹ்மான் இந்திய திரையிசையில் மறுமலர்ச்சியே ஏற்படுத்தினார்.  அவருடன் தேவா, வித்யாசாகர், யுவன், ஜி.வி.பிரகாஷ், அனிருத் என ஒவ்வொரு  காலகட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தி  வந்தனர், வருகின்றனர். ரசிகர்களின் இசை ரசனையும் நிறையவே மாறிக் கொண்டேயிருக்கிறது. 

எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்களுடன் சரிசமமாகக் களத்தில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார் ராஜா. இன்றைய முக்கிய  இயக்குநர்களான வெற்றிமாறன், மிஷ்கின், சீனு ராமசாமி, வெங்கட் பிரபு என  பலரும் இப்போதும் அவருடன் பணிபுரிய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு அவரது அசாத்தியமான இசை ஞானமும் திறமையும் சாதனைகளுமே காரணம்.

தமிழகத்தின் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்து இன்று அவர்  அடைந்திருக்கும் உயரம், அவரது உழைப்பால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.

கடுமையான உழைப்பால் அவர் அடைந்த உயரம் காரணமாக  இசைத்  துறையில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். வாழ்த்துகள் இளையராஜா சார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com