கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவம் - விக்ரமுடன் இணையும் படம் குறித்து பா.ரஞ்சித் அதிரடி

விக்ரமுடன் தான் இணையவிருக்கும் படம் கேஜிஎ-ப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என பா.ரஞ்சித் தெரிவித்தார். 
கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவம் - விக்ரமுடன் இணையும் படம் குறித்து பா.ரஞ்சித் அதிரடி

விக்ரமுடன் தான் இணையவிருக்கும் படம் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என பா.ரஞ்சித் தெரிவித்தார். 

நடிகர் விக்ரம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என தகவல் அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு வதந்திகளை பொய்யாக்கினார். 

நடிகர் விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகர் விக்ரமின் 61வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் பூஜை இன்று(ஜூலை 16) நடைபெற்றது. நிகழ்வுக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அட்டகத்தி படம் வெளியாவதற்கு ஞானவேல் ராஜா தான் முக்கிய காரணம். அந்த நட்பு இதுவரை தொடர்கிறது. பிறகு அவர்களுடன் இணைந்து மெட்ராஸ் திரைப்படம் செய்தேன். மெட்ராஸ் படத்துக்கு பிறகு மீண்டும் அடுத்த படமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக செய்வதாக இருந்தது. 

நடிகர் ரஜினிகாந்த்துடன் படம் பண்ண வாய்ப்பு கிடைத்ததால் நீ அவருடன் படம் செய்துவிட்டு வா என ஞானவேல் ராஜா சொன்னார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் நாங்கள் இணைவதில் மகிழ்ச்சி. 

மேலும் தனது நடிப்பால் நடிகர்களைக் கவர்ந்த விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். ரசிகர்களுக்கும் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நினைக்கிறேன். 90 ஆம் நூற்றாண்டில் கேஜிஎஃப்ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. 

அந்த காலக்கட்டத்தில் கேஜிஎஃப்ல் வசித்த மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக இந்தப் படம் பேசும். ஆங்கிலேய அரசு காலகட்டத்தில் நடந்த கதை. இந்தப் படத்தை எடுப்பதற்கே மிகப் பெரிய சவால். இந்தப் படத்தை எடுப்பதற்கு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு தேவை. 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து நான் முதன்முதலாக பணியாற்றவிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அவருடன் இணைந்து பணியாற்றுவது புது அனுபவமாக இருக்கும். மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருகிறது. திரைப்படங்களுக்கு மொழி தடையில்லை என்பதை ஓடிடி தளங்கள் நிரூபித்திருக்கிறது. எந்த மொழியில் எடுக்கிறோம் என்பதில் பிரச்னையில்லை. தமிழ் படங்கள் பிற மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இது நேரடித் தமிழ் படம். இந்தப் படம் உலகம் முழுக்க திரையிடுவதற்கு தகுதியுள்ள படம் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com