
கமல்ஹாசன்
விக்ரம் பட வெற்றிக்கு தான் மட்டும் காரணம் இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. விக்ரம் படத்துக்கு மக்களின் ஆதரவு குறையவே இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிக்க | ரஜினிகாந்த் - நெல்சன் படத் தலைப்பு 'ஜெயிலர்' - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் மற்றும் குழுவினர் சுரங்கப் பாதை வழியாக தப்பி செல்லும் காட்சி ஒன்று சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டது. விக்ரம் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிக்க | இளையராஜாவுடன் ஒரே மேடையில் தோன்றும் வடிவேலு
அப்போது அவர், “எனது நலம்விரும்பிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் வலியுறுத்தினர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது விக்ரம் படத்திற்கு விளம்பரத்திற்கு உதவியது. விக்ரம் பட வெற்றிக்காக கார் பரிசளித்தது, வாட்ச் கொடுத்தது, பைக் கொடுத்தது குறித்தெல்லாம் சொல்கின்றனர்.
அதையெல்லாம் விட பெரிய பரிசு உழைக்கும் மக்கள் தங்களது கூலியிலிருந்து ஒரு தொகையைக் கொடுத்ததே உண்மையான பரிசு. உண்மையான வள்ளல்கள் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். எங்கள் படத்தை திருவிழா மாதிரி மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இல்லை என்றால் இது நடந்திருக்காது. கலை உலகத்தில் மொழி வித்தியாசம் கிடையாது” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.