'உண்மையை சொல்லிடுறேன் சார்...'' - விக்ரம் வெற்றிவிழாவில் கமல் முன்பு போட்டுடைத்த உதயநிதி.

விக்ரம் பட வெற்றிவிழாவில் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலினின் பேச்சு வைரலாகி வருகிறது.
'உண்மையை சொல்லிடுறேன் சார்...'' - விக்ரம் வெற்றிவிழாவில் கமல் முன்பு போட்டுடைத்த உதயநிதி.


விக்ரம் பட வெற்றிவிழாவில் அந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலினின் பேச்சு வைரலாகி வருகிறது. 

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இப்படியொரு வெற்றியைப் பார்த்ததில்லை என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். 

வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றிவிழா நேற்று (ஜுன் 17) நடைபெற்றது. 

விக்ரம் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் வெற்றி குறித்து பேசியதாவது, ''10 நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் வெற்றிவிழா நடந்தது. அங்கு சில உண்மைகளை சொன்னேன். இப்பவும் சில உண்மைகளை சொல்லிடுறேன் சார். ஏனெனில் படம் வெற்றிபெற்றுவிட்டது. 

விக்ரம் படத்தை கமல் சார் என்னிடம்தான் முதலில் போட்டுக் காண்பித்தார். நான் செண்பகமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் படம் பார்த்தோம். இடைவேளை வந்தது. நாங்கள் மிரண்டுவிட்டோம். இதுவரை அப்படி ஒரு இடைவேளைக் காட்சியை நாங்கள் பார்த்ததில்லை. அப்பவே முடிவு பண்ணிட்டோம் இந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று. 

உடனடியாக கமலிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, படம் வேற லெவல்ல இருக்கு. ஆங்கிலப் படம் மாதிரி இருக்கு. தெறிக்கவிட்டுடீங்க சார். என்று சொன்னேன். ''சார் நாங்க படம் வெற்றிபெறும் என்று நினைத்தோம். ஆனால் இவ்ளோ பெரிய வெற்றிபெறும் என்று நினைக்கவில்லை. 

படம் வெளியானபோது நான் படப்பிடிப்புக்காக சேலத்தில் இருந்தேன். நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருந்தோம். மூர்த்தி சார் மட்டும் வருத்தத்தில் இருநந்தார். படம் பெரிய வெற்றி, ஆனா எம்ஜி வாங்காம விட்டுட்டோமே என வருத்தப்பட்டாரு.

இந்தப் படத்தை 5 வயது முதல் 90 வயது பெரியவர்கள் வரை கொண்டாடுகிறார்கள். படத்தை திரும்ப திரும்ப வந்து பார்க்கிறார்கள். தமிழ்நாடு விநியோகிஸ்தராக என் பங்கு மட்டுமே ரூ.75 கோடி கிடைத்திருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை. இன்னும் 5 அல்லது 6 வாரங்களுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பது கடினமாக இருக்கும். 

உண்மையான கமல் ரசிகராக இந்த வெற்றியைக் கொடுத்த லோகேஷுக்கு நன்றி. கமல் பட வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக ஏதோ ஒரு படத்தை எடுக்காமல், பொறுமையா இந்த மாதிரி வெற்றிப்படத்தைக் கொடுத்ததற்கு இயக்குநர் லோகேஷிற்கு நன்றி. அடுத்தப் படமும் இதே மாதிரி பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும்.'' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com