தமிழ் சினிமாவில் துணை நடிகைகளுக்கு தொடரும் பாலியல் ரீதியிலான பிரச்னைகள்: தீர்வு என்ன?

தமிழ் சினிமாவில் துணை நடிகைகளுக்கு நிகழும் பாலியல் ரீதியிலான பிரச்னைகள் குறித்து ஒரு பார்வை. 
தமிழ் சினிமாவில் துணை நடிகைகளுக்கு தொடரும் பாலியல் ரீதியிலான பிரச்னைகள்: தீர்வு என்ன?


கதாநாயகன், நாயகி, வில்லன், காமெடி நடிகர் என இவர்களைத் தாண்டி, இதர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களை துணை நடிகர்கள் என்றே  அழைக்கின்றனர். 

சினிமாவில் துணை நடிகை, நடிகர்களாக இருந்து கதாநாயகர்களாக உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் உதாரணமாக விஜய் சேதுபதி, விதார்த் என நிறைய உதாரணங்களை சொல்லலாம். 

எம்ஜிஆர், ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இன்று கொண்டாடப்படுபவர்கள் கூட துணை நடிகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்கள்தான். 

தமிழ் சினிமாவில் துணை நடிகைகளாக அறிமுகமாகி சாதித்தவர்கள்

நடிகைகளிலும் மனோராமா, சச்சு, கோவை சரளா என துணை நடிகைகளாக சாதித்தவர்கள் பட்டியல் ஏராளம். இன்று தமிழ் மற்றும் தெலுங்கு, 
மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகிகளாக கலக்கிக்கொண்டிருக்கும் த்ரிஷா, சாய் பல்லவி உள்ளிட்டோரும் துணை நடிகையாக தங்கள் திரையுலக பயணத்தை தொடங்கியவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா 'ஜோடி' படத்திலும், சாய் பல்லவி 'தாம் தூம்' படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தனர். 

மேலே குறிப்பிட்டது எல்லாம் சாதித்தவர்கள் பட்டியல். சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பட்டியல் மிக நீளம். என்றைக்காவது ஒருநாள் தங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், படங்களில் தங்களது பெயரே குறிப்பிடதாக அளவுக்கு சிறிய சிறிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

அடையாளத்துக்காக போராடும் துணை நடிகர்கள்

விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் தான் புதுப்பேட்டை படத்தில் நடித்த அனுபவத்தை தெரிவித்தார். புதுப்பேட்டை படத்தில் சிறிய வேடத்தில் விஜய் 
சேதுபதி நடித்திருப்பார். அந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதிக்கு வசனம் இல்லையாம். ஒரு காட்சியில் வேறு நடிகர் வசனம் பேச வேண்டும்.  அவர் தாமதிக்கவே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தான் அந்த வசனத்தை பேசியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

இப்படி சினிமாவில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள துணை நடிகர், நடிகைகள் போராடி வருகின்றனர். சினிமாவில் தடம் பதிக்க நினைக்கும் பெண்களுக்கு பெரிய நடிகை ஆகவேண்டும், தங்களது நடிப்புக்கு விருதுகள் கிடைக்கவேண்டும் என்ற கனவாக இருக்கிறது.

திரையுலகில் துணை நடிகைகளுக்கு என்னென்ன பிரச்னைகள்? 

பெரிய நடிகர்களைப் போல அவர்களுக்கு ஒரு படத்துக்கென ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஒரு நாள் நடித்தால் மட்டுமே அவர்களுக்கு பணம். இப்படிப்பட்ட துறையில் ஆண் பயணிப்பதே கடினம். 

படப்பிடிப்பு தளங்களில் ஒரு ஆண் கிடைத்த இடத்தில் தங்கிக்கொள்ள முடியும். பெண்களால் அப்படி முடியாது. அவர்களுக்கு கழிவறை வசதியுடைய 
சிறிய அறையாவது தேவைப்படும். கொஞ்சம் பெயர் தெரிந்த நடிகைகள் என்றால் அவர்களுக்கு கேரவன் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும். ஆனால் சிறிய நடிகைகளுக்கு அதுவும் கிடைக்காது. 

நகைச்சுவை காட்சிகளில் ஒரு படத்தில் நடித்துவிட்டால் அவரை நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தும் நிலை இங்கு இருக்கிறது. மனோராமா போன்ற ஒரு சிலருக்கே அனைத்து விதமான கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

குறிப்பாக கவர்ச்சிகரமான வேடத்தில் ஒரு துணை நடிகை நடித்துவிட்டால், இரண்டாம் தாரம், ரகசிய காதலி என தொடர்ந்து அந்த மாதிரியான வேடங்களிலேயே அவருக்கு அளிக்கப்படும். இதன் காரணமாக பொதுவெளியில்கூட அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலையும் இருக்கிறது. 

நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பெண்களை இங்கு ஏமாற்ற ஒரு பெரும் கும்பலே காத்திருக்கிறது. அவர்களின் ஆசை வார்த்தைகளை ஏமாந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். சினிமாவில் அதனை காட்சிகளாக பார்த்திருக்கிறோம். அப்பொழுது யதார்த்தம் எப்படி இருக்கும் என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை.  

உதவி இயக்குநர் சொன்ன திடுக்கிடும் தகவல் 

ஒரு உதவி இயக்குநரிடம், தமிழ் சினிமாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேட்டபோது அவர் சொன்னது, ''முன்பெல்லாம் துணை நடிகைகளுக்கு போதுமான வசதிகள் இருக்காது. தனி அறை கூட வழங்கப்படாது. ஆனால் தற்போது நிலைமை எவ்வளவோ மாறியிருக்கிறது. பெரிய நடிகைகளுக்கு அவர்கள் கேட்பதெல்லாம் வழங்கப்படும். துணை நடிகைகளுக்கு அவர்களுக்கு அளிக்கப்படும் இடத்தில் மறுவார்த்தை பேசமால் தங்கிக்கொள்ள வேண்டும். படக்குழு கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டும். ஆனால் குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளாவது அவர்களுக்கு கிடைக்கிறது. 

பாடல்களில் நடனமாடும் பெண்களுக்கு அவர்கள் அடிக்கடி உடை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதால் தனியாக ஒரு கேரவன் அல்லது அறைகள் கொடுக்கப்படுகிறது. பெண் உதவி இயக்குநர்களுக்கு அவர்களுக்கு நடிகர்களின் ஆடைகளை கவனித்துக்கொள்ளும் பணியே பெரும்பாலும் கொடுக்கப்படும். தற்போது அந்த நிலையும் மாறியிருக்கிறது. 

ஆனால் ஒன்று மட்டும் மாறவேயில்லை. துணை நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் மட்டுமே குறையவேயில்லை. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நடனக் காட்சி படமாக்கப்பட்டது. மும்பையிலிருந்து ஒரு நடிகை நடனமாட வந்தார். அவரை அந்தப் படத்தின் மேலாளர், தனது ஆசைக்கு இனங்கும்படி பாலியல் தொல்லை கொடுக்கத் துவங்கினார். அந்த நடிகையால் மறுப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் தனக்கான வாய்ப்பு பறிபோகும் என்று அமைதியாக இருந்தார். பின்னர் நாங்கள் தலையிட்டு மேலாளரை எச்சரித்தோம்'' என்று கூறினார். ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடந்த சம்பவங்களை உதவி இயக்குநர் தெரிவித்திருந்தார்.

துணை நடிகைகளுக்கென வேண்டும் ஒரு அமைப்பு 

மீடூ மூலம் திரையுலகில் பெண்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தொல்லைகளை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவரத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் பிரச்னை குறைந்தபாடில்லை என்பதை உதவி இயக்குநர் சொன்ன சம்பவம் உணர்த்துகிறது.

ஏனெனில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளை வெளியே சொன்னால் அந்த பெண்களையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இங்கு இருக்கிறது. அதற்கு பயந்தே தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை துணை நடிகைகள் வெளியே சொல்வதில்லை.

திரையுலகில் பாலியல் பிரச்னைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது. குறைந்தபட்சம் பெண்கள் தங்களின் பிரச்னைகளை பதிவு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவாவது ஒரு அமைப்பு வேண்டும். அமைப்பாக செயல்பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்த மகளிர் தினத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com