Enable Javscript for better performance
Kadhalum Kadanthu Pogum Vijay Sethupathi Madonna Sebastian- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  ‘காதலும் கடந்து போகும்’ வெளிவந்து 6 ஆண்டுகள்: அடியாளும் ஐ.டி. பெண்ணும் கொண்ட அழகிய காதல்!

  By ச.ந. கண்ணன்  |   Published On : 11th March 2022 12:31 PM  |   Last Updated : 11th March 2022 12:31 PM  |  அ+அ அ-  |  

  kadhalum_kadanthu_pogum12_ss

   

  விஜய் சேதுபதியும் மடோனாவும் சிறிய அபார்ட்மெண்டின் மேல் தளத்தில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக வசிப்பவர்கள்.

  பக்கத்தில் உள்ள மெஸ்ஸில் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டபடி உரையாடுவார்கள். அதுவரை பெரிய அறிமுகம் கிடையாது. மடோனா சாப்பிட்டதற்கும் விஜய் சேதுபதியே முதலில் காசு கொடுத்துவிடுவார். ஆனால் வெளியே வந்து, மடோனாவிடம் தனியாகப் பணம் வாங்கிடுவார்.

  அப்போது அவரிடம் கேட்பார் மடோனா.

  சார், நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?

  (டுஷ்யூம் டுஷ்யூம் என அவர் முகத்தின் அருகே காற்றில் குத்துவிடுவதுபோலச் செய்தபடி சொல்வார் விஜய் சேதுபதி.)

  அடியாள்.

  அடுத்த நாளே, ஒரு கடைக்குச் சென்று, பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே வாங்கிவைத்துக்கொள்வார் மடோனா.

  சூது கவ்வும் படத்துக்கு அடுத்ததாக மை டியர் டெஸ்பரேடோ என்கிற கொரியன் படத்தை முறையாக அனுமதி வாங்கி நலன் குமரசாமி இயக்கிய படம் - காதலும் கடந்து போகும் (காகபோ).

  கொரியப் படத்தில் உள்ள 95% காட்சிகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டார் நலன். (டைட்டில் கார்டில் மூலக்கதை & திரைக்கதை - கிங் குவாங் சிக் என்று வரும்.)

  கரடுமுரடாகத் தெரிகிற ஒருவனுக்கும் ஓர் நவநாகரிக இளம் பெண்ணுக்கும் ஏற்படுகிற நட்பும் காதலும் தான் காதலும் கடந்து போகும். கொரியப் படம் முதலில் விவேக் ஓப்ராய், நேஹா சர்மா நடிப்பில் Jayantabhai Ki Luv Story என்கிற பெயரில் ஹிந்திப் படமாக 2013-ல் ரீமேக் ஆனது. (இதன் டிரெய்லரை பார்த்தாலே ஹிந்தி ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தோன்றும்). ஹிந்தி ரீமேக் வெற்றியடையாவிட்டாலும் துணிச்சலுடன் நலனும் விஜய் சேதுபதியும் தமிழ் ரசிகர்களை நம்பி இப்படத்தை ஆரம்பித்தார்கள். 

  முதலில் கொரியப் படத்தைப் பார்க்காமல், ஸ்கிரிப்டைப் படித்துள்ளார் விஜய் சேதுபதி. பார்த்த பிறகு, கொரியப் படத்தின் மையக்கருத்தை நலன் தொட்டுவிட்டதாக உணர்ந்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நலனிடம் பேசினார். இதுதான் படம் பார்த்தபோது நானும் உணர்ந்தேன் என்றார் நலன். இரு ரசனைகளும் ஒரு புள்ளியில் இணைந்த தருணம். 

  ஏன் விஜய் சேதுபதி? அவர் தான் கிடைத்தார் என்கிறார் நலன்.

  வேறு ஒரு நடிகரை நடிக்கவைக்கத்தான் முதலில் முயற்சி செய்திருக்கிறார் நலன். அதாவது இந்தக் கதாபாத்திரத்துக்கு எப்படி இவர் என்று ரசிகர்கள் யோசிக்கவேண்டும் என எண்ணினார். ஆனால் இவர் தேடிய நடிகர்களால் உடனே தேதிகளை வழங்கமுடியாததால் விஜய் சேதுபதியிடமே மீண்டும் வந்துள்ளார் நலன்.

  இதுவரை எந்தவொரு தமிழ்ப்படத்திலாவது கதாநாயகி, வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார? காகபோ-வின் யாழினி கதாபாத்திரம் அப்படிப்பட்டது. 

  சென்னையில் ஒரு பூங்காவில் அமர்ந்தபடி, நல்ல குடும்பத்தில் பிறந்த தறுதலை என்று வாய்ஸ்ஓவரில் நொந்துகொள்வார் மடோனா. காட்சிகள் சில நாள்களுக்கு முன்பு நடந்தவற்றை விவரிக்கப் பின்னோக்கிச் செல்லும்.

  சென்னைக்குச் சென்று பிழைப்பதற்காக விடியோ ஒன்றில் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பியிருப்பார் மடோனா.

  அப்பா, அம்மா நான் அஃபிஷியலா வீட்டை விட்டு ஓடிப்போறேன். எவனையும் இழுத்துட்டு ஓடலை. (லேப்டாப் கேமரா வழியே விடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போது அவர் அம்மா அந்த அறையில் நுழைந்து மடோனாவிடம் ஏதோ கேட்பார். கேமரா ஓடிக்கொண்டிருக்க, தன் செயலை மறைத்தபடி அம்மாவுக்குப் பதில் அளிப்பார் மடோனா. இந்தக் காட்சியை விடியோவில் பார்க்கும் அம்மாவுக்குத் தூக்கிவாரிப் போடும்.) சென்னைக்குப் போய் வேலை செய்யப்போறேன். விவேகானந்தர் என்ன சொல்லியிருக்காரு, வேலை கிடைச்சா போய் பாருனு சொல்லியிருக்காரு! நாலைஞ்சு மாசம் சம்பளம் வாங்கிட்டு உங்க கோபம் எல்லாம் கரைஞ்ச பிறகு வீட்டுக்கு வரேன் என்று விடியோவில் ஓடிப்போனதற்கான காரணத்தைக் கூறியிருப்பார் மடோனா.

  மடோனாவின் அப்பா ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர். தன் சக ஊழியர்களிடம் பேசி, மகளைப் பாதி ரயிலில் இருந்து இறக்கிவிட்டு விடுவார்.

  ஸ்டேஷனில் கோபத்துடன் அமர்ந்திருந்த மகளிடம் குடும்பமே (அப்பா, அம்மா, தங்கை) சமாதானம் பேசும்.

  விழுப்புரத்திலேயே கவர்ண்மெண்ட் போஸ்டிங் வாங்கி, விழுப்புரத்திலேயே என்னைக் கட்டி வைச்சு, விழுப்புரத்திலேயே நான் கிழவி ஆகறது எல்லாம் நடக்காத காரியம் அம்மா என்று பிடிவாதம் பிடிப்பார் மடோனா. அடுத்த நாள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் அவர் சேரவேண்டும். அதற்கு முன்இரவில் மொத்தக் குடும்பமும் ரயில் நிலையத்தில் பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கும். 

  உனக்கு என்ன வேணும்னு நீ அடம்பிடிச்சா தானே எங்களுக்கு அதோட முக்கியத்துவம் தெரியும் என்பார் அப்பா.

  மூணு மணி நேரம் தான். எப்ப கூப்டாலும் வந்துருவேன். நீங்களும் வரலாம் என்பார் மடோனா. மகள் தான் சொன்னபடியே அடம்பிடிப்பதால் சம்மதம் சொல்வார் அப்பா. மடோனா சந்தோஷப்பட, அவர் பின்னால், வேலை கிடைச்சா போய் பாரு என்று சொன்ன விவேகானந்தரின் படம் இருக்கும்!

  ரயிலில் மடோனா பயணிக்கும்போது, காதலும் கடந்து போகும் என்று டைட்டில் கார்டு வரும்.

  ஐ.டி. நிறுவனத்தில் வேலையுடன் கூடவே காதலனும் கிடைப்பார் மடோனாவுக்கு. (எத்தனை தமிழ்ப் படங்களில் கதாநாயகனைத் தாண்டி இன்னொருவரை கதாநாயகி காதலித்திருக்கிறார்?)

  ஆனால் மடோனாவின் நிறுவனம் திடீரென திவாலாகிவிடும். காதலனும் கை கழுவி விடுவான். சோகத்தில் மெரினா கடற்கரையில் அலுவலக ஐடி கார்டை மணலில் புதைப்பார் மடோனா.

  எனக்கும் ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தான். அதைப் பத்திப் பேசி பிரயோஜனம் இல்லை என்று வாய்ஸ் ஓவரில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீட்டு புரோக்கர் மடோனாவுக்கு போன் செய்வார். 

  ஒரு அபார்ட்மெண்டில் முதல் தளத்தில் இரு வீடுகள். விஜய் சேதுபதி ஒரு வீட்டில் தங்கியிருப்பார். அவர் வீட்டின் எதிரே மடோனா, தனியாளாகக் குடி வருவார்.

  படம் ஆரம்பித்து 11 நிமிடம் வரை மடோனாவின் கதைதான் ஓடும். புது வீட்டுக்குச் சாமான்களைத் தூக்கி வரும் மடோனா, சரியாக விஜய் சேதுபதியின் வீட்டின் முன்பு சாமான்களைக் கீழே போட்டுவிட்டு, தானும் தடுமாறி விழுந்து விடுவார். அந்த நேரம் பார்த்துக் கதவைத் திறக்கும் விஜய் சேதுபதி, மடோனாவைக் கண்டும் காணாததும் போல இருந்து படிக்கட்டு வழியே கீழே இறங்கிவிடுவார். இத்தனைக்கும் மரியாதை நிமித்தமாக அவருக்கு ஹலோ, வணக்கம் எல்லாம் வைப்பார் மடோனா. 

  கீழே, சாமான்கள் கிடக்கும் இடத்தில் மடோனாவும் விஜய் சேதுபதியும் முட்டிக்கொள்வார்கள். முதல் மோதல்.

  சரி, இந்தப் படத்துக்கு ஏன் கொரியப் படத்தை ரீமேக் செய்யவேண்டும்?

  இதை நீயே யோசிக்க முடியாதா, ஏன் ரிமேக் செய்கிறாய் என நலனிடம் பலரும் கேட்டுள்ளார்கள். என்னால் இவ்வளவு அழகாக யோசிக்க முடியாது. அதனால் தான் அழகாக யோசித்து எடுக்கப்பட்ட கொரியப் படத்தை ரீமேக் செய்கிறேன் என்று பதில் கூறியுள்ளார்.

  கொரியப் படத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் கிட்டத்தட்ட அப்படியே தமிழில் பயன்படுத்திக்கொண்டார். வழக்கமாக மலையாளம், தெலுங்குப் படங்களைத் தமிழில் ரீமேக் செய்தாலே அந்நிய வாடை அடிக்கும். ஆனால் நாம் ஒரு கொரியப் படத்தின் ரீமேக்கைக் காண்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் நலன். 

  ‘மை டியர் டெஸ்பரேடோ’ என்கிற கொரியன் படத்தைப் பார்த்ததும் நாம இதைப் பண்ணலாமேன்னு தோணுச்சு. அதோட உரிமையை முதல்ல வாங்கினேன். கதை இதுதான்னு முடிவு ஆனதும் அதை எழுதத் தொடங்கினேன். பிரேமம் படத்துல மடோனா செபாஸ்டியன் நடிப்பு நல்லா இருந்தது. காகபோ படத்துல விஜய் சேதுபதியும் மடோனாவும் தான் முக்கியக் கதாபாத்திரங்கள். ரெண்டே கதாபாத்திரங்கள் என்பதால் ரசிகர்களுக்குப் போரடிச்சிடக் கூடாது. சவால் அதிகம் தான். அதை உணர்ந்து போட்டி போட்டு இருவரும் நடிச்சாங்க என்கிறார் நலன்.

  *

  வழக்கமான தமிழ் சினிமா ரெளடிகள், தாதாக்கள் போல இப்படத்தில் வீராதிவீரனாக இருக்கமாட்டார் விஜய் சேதுபதி. பார் லைசென்ஸ் வைத்துத் தரும்படி தனக்கு பாஸாக இருக்கும் அரசியல்வாதியிடம் மன்றாடுவார். இன்னொரு சக ரெளடிக்காக 5 வருடம் சிறை சென்று திரும்பியிருப்பார். பாரில் நடந்த சண்டையில் அடி வாங்கிவருவார். எல்லோரும் அவரைக் கிண்டல் செய்வார்கள். அவரே தன்னை அடியாள் என்று சொன்னதால்தான் நாமும் அவரை அப்படி எண்ணுவோம். 

  நட்பு மலராத காலங்கள் அவை. 

  மடோனாவின் குடையைச் சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துச் சென்றுவிடுவார் விஜய் சேதுபதி. வெளியே மழை பொளந்து கட்டும். ஐ.டி. நேர்காணலுக்குச் செல்லவேண்டிய அவசரத்தில் இருப்பார் மடோனா. தன் குடையை எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதி திரும்பி வருவதைப் பார்ப்பார். கொட்டும் மழையில் சூடான உரையாடல் நடக்கும். 

  இது என் குடை தானே. இன்னைக்கு எனக்கு இண்டர்வியூ. இப்படியேவா போவேன்? என்று விஜய் சேதுபதியிடம் மழையில் நனைந்தபடிச் சீறுவார் மடோனா.

  நாளைக்குப் போ. அதுக்கு என்ன இப்போ என்று அசால்டாகக் கூறுவார் விஜய் சேதுபதி.

  அவரிடமிருந்து குடையைப் பிடுங்கிக்கொண்டுச் செல்வார் மடோனா. இதைச் சற்றும் எதிர்பாராத விஜய் சேதுபதி, மடோனாவைத் திட்டியபடி மழையில் நனைந்தபடி ஓடுவார்.

  அப்போது, மடோனாவின் அலுவலக நேர்காணலை அலட்சியமாகக் கருதிய விஜய் சேதுபதிதான் கடைசிக் காட்சிகளில், மடோனா எப்படியாவது நேர்காணலில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெடுவார், நாலு பேரிடம் அசிங்கப்படுவார். 

  *

  வீட்டுக்குச் சோகமாகத் திரும்பி வருவார் மடோனா. மாடிப்படிக்கட்டில் இந்த உரையாடல்.

  பக்கத்து வீட்டுப் பொண்ணே... (கடைசிவரை யாழினி என்றே மடோனாவை அழைக்கமாட்டார் விஜய் சேதுபதி.), இண்டர்வியூ என்ன ஆச்சு?

  நாசமா போச்சு. சந்தோஷமா?

  ஏன், நான் என்ன பண்ணேன்?

  இப்படி நனைச்சுட்டு போனா யார் வேலை கொடுப்பான்? நான் என்ன மார்க்கெட்டுக்கா வேலைக்குப் போறேன்? இது ஐ.டி. ஃபர்ஸ்ட் இம்ப்ரஸன் எவ்வளவு முக்கியம் தெரியுமா என்று அவரிடம் எரிந்து விழுவார் மடோனா.

  எதிர்வீட்டில் ரெளடி இருப்பதால் வீட்டை விட்டுக் காலி செய்ய முடிவெடுப்பார் மடோனா. அவர் வசிக்கும் வீட்டை இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவதற்காக அங்கு வருவார் புரோக்கர். அந்தச் சமயத்தில், மடோனா தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக எண்ணும் சூழல் உருவாகும். 

  உடனே, மடோனாவை இரு கைகளாலும் கஷ்டப்பட்டுச் சுமந்து மருத்துவமனைக்குச் செல்வார் விஜய் சேதுபதி. அவரால் மடோனாவைத் தூக்கவே முடியாது என்றாலும் விட்றாதடா என்று கத்திக்கொண்டு, எப்படியோ மடோனாவை மருத்துவமனையில் சேர்த்துவிடுவார். நல்லா வாழவேண்டிய பொண்ணுங்க... அப்படித்தான் நினைக்கிறேன் என்று எல்லோர் முன்னிலையிலும் கிட்டத்தட்ட அழுவார்.

  இந்த உதவும் குணம் மடோனாவை ஈர்த்துவிடும். வீட்டைக் காலி செய்ய இருந்தவர், மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும்போது விஜய் சேதுபதியுடன் சகஜமாக உரையாடிக்கொண்டு வருவார். சாலையில் நடந்தபடி அவரவர் குறிக்கோள்களைப் பற்றி பேசிக்கொண்டு வருவார்கள்.

  சார், உண்மையிலேயே நீங்க ரெளடியா?

  ஏன்?

  இல்லை. எப்பவும் உங்க முகத்துல தான் காயமா இருக்கு. அதான் சும்மா சொன்னீங்களோன்னு...

  அடியாள்னா அடிச்சுட்டே இருப்பாங்களா என்ன, அப்பப்ப அடியும் வாங்கணும் என்பார் விஜய் சேதுபதி. அப்போதும் விடமாட்டார் மடோனா.

  நீங்க கொஞ்சம் நிறைய வாங்குவீங்களோ?

  அடிங்.. என்று மடோனா மீது மோதுவது போல அருகில் வருவார் விஜய் சேதுபதி. கம்மென்று நகர்ந்துவிடுவார் மடோனா.

  அடுத்த மழையில் இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். மடோனா மற்றொரு நேர்காணலுக்குச் செல்லும் முன்பு இடியுடன் கூடிய மழை பெய்யும். மடோனாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மழையில் நனைந்தபடி ஓடிச்சென்று, அழகிய குடை ஒன்றை வாங்கி வருவார் விஜய் சேதுபதி.

  ஆனால், நேர்காணலில் தோல்வியடைந்து திரும்பி வருவார் மடோனா. போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதியிடம், சாப்பிடப் போலாமா, பசிக்குது என்பார். ஆனால், மெஸ்ஸில் எதுவும் இருக்காது. 

  நான் வேணா சமைக்கட்டா, நல்லா சமைப்பேன் என்பார் மடோனா.

  யூடியூப் எல்லாம் பார்த்து எக் நூடுல்ஸ் செய்வார் மடோனா. எதிர் வீட்டிலிருக்கும் விஜய் சேதுபதி, மட்டன் பிரியாணி செய்வார்.

  முதலில் எக் நூடுல்ஸைச் செய்து ஒரு பீங்கான் தட்டில் வைத்து இருவர் வீடுகளின் வாசலின் முன்வைத்து விஜய் சேதுபதியிடம் வழங்குவார் மடோனா. உணவை வணங்கியபடி வாங்கி அதே இடத்தில் நின்றபடி ருசி பார்ப்பார் விஜய் சேதுபதி. மிகுந்த ஆர்வத்துடன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்பார் மடோனா. நல்லாத்தான் இருக்கு என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு உள்ளே செல்வார் விஜய் சேதுபதி.

  பதிலுக்கு, கொத்தமல்லி எல்லாம் மேலே தூவி, மூடி போட்ட ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்து, தான் சமைத்த மட்டன் பிரியாணியை மடோனாவுக்குத் தருவார் விஜய் சேதுபதி. மூடியைத் திறக்கும்போது ஆவி பறக்கும். ஸ்பூனில் சாப்பிட்டுப் பார்ப்பார் மடோனா. அதன் ருசி மடோனாவைக் கதி கலங்க வைக்கும். இவனிடமிருந்து இப்படி ஒரு ருசியான சமையலா என்று அதிர்ச்சியுடன் வியப்பார். மொத்தத்தையும் காலி செய்து, காலி பாத்திரத்தை அதே வாசலில் வைத்துக் கொடுத்துவிட்டு,

  உண்மையிலேயே நீங்க சமைச்சதா என்பார் மடோனா.

  ஆமா.

  எங்க கத்துக்கிட்டீங்க?

  ஜெயில்ல.

  அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் பாத்திரத்துடன் உள்ளே சென்றுவிடுவார் விஜய் சேதுபதி. அந்தப் பதிலால் அதிர்ச்சியுடன் சிலை போல அதே இடத்தில் நிற்பார் மடோனா.

  விஜய் சேதுபதி கொடுத்த யோசனையின்படி வேலைக்காகப் பல நிறுவனங்களுக்கு வித்தியாசமான முறையில் முயற்சி மேற்கொள்வார் மடோனா. அதில் கவரப்பட்டு ஒருவர் நேர்காணலுக்கு அழைப்பார். ஆனால் மடோனாவிடம் அந்த நபர் மோசமாக நடக்க முயற்சி செய்வார். பெப்பர் ஸ்ப்ரேவை வைத்துத் தப்பிப்பார் மடோனா. வீட்டுக்குத் தாமதமாக வரும் மடோனாவிடம் தெரியாமல் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்டுவிட அவரிடம் வெடிப்பார் மடோனா. 

  மடோனாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நபரை அடுத்த நாள் நேரில் சென்று நையப்புடைப்பார் விஜய் சேதுபதி. பிரச்னை காவல் நிலையம் வரைக்கும் சென்றுவிடும். தனக்காக விஜய் சேதுபதி படும் கஷ்டங்கள் மடோனாவை மிகவும் பாதிக்கும்.

  உனக்கு எதாவது பிரச்னைனா, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லவேண்டியதுதானே. காலிப்பையன் மாதிரி இவன் (விஜய் சேதுபதி) இருக்கான். இவன்கிட்ட போய் சொல்லியிருக்க என்று மடோனாவுக்கு அறிவுரை வழங்குவார் இன்ஸ்பெக்டர்.

  இருவரும் காவல் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஒன்றாக வீட்டுக்கு வருவார்கள். வழியில் நடந்ததையெல்லாம் நினைத்துக் கண்கலங்குவார் மடோனா. பிறகு, விஜய் சேதுபதியை அர்த்தத்துடன் பார்ப்பார். எதிரே அமர்ந்து இருந்த அவரை அருகில் அழைத்து, தன் போனில் அழகாக ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்வார் மடோனா. இடைவேளை.

  தமிழ் சினிமாவில் இதைவிடவும் கவித்துவமான ஓர் இடைவேளைக் காட்சியை நீங்கள் பார்த்ததுண்டா?

   

  பிரேமம் படம் வெளியாகும் முன்பே காகபோ படத்துக்குத் தேர்வாகியுள்ளார் மடோனா. பிரேமம் படத்தின் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றிய விஷ்ணு கோவிந்த், நலனிடம் மடோனா பற்றி பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஆடிஷனுக்கு அவர் அழைக்கப்பட்டார். படத்தில் கதாநாயகிக்கு அழுத்தமான பல காட்சிகள் உள்ளதால் அந்தக் காட்சிகளுக்கு மடோனா எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்க்க விரும்பினார் நலன். ஆடிஷனுக்கு வந்த பலரிலும் மடோனா தான் சிறப்பாக நடித்துக் காண்பித்தார். யாழினி கதாபாத்திரத்துக்குத் தேர்வானார். (மடோனாவுக்கு முன்பு சமந்தாவிடம் கதை சொல்லியிருக்கிறார் நலன். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.)

  யாழினி கதாபாத்திரத்தை மடோனா மிகச் சரியாக வெளிப்படுத்தியதால், இதன்பிறகு யாழினி என்னவெல்லாம் யோசிப்பார் என்று அவரிடம் விவரிக்க ஆரம்பித்துள்ளார் நலன். இதனால் தான் "என்னய்யா இந்தப் பொண்ணு இப்படி நடிக்கிறா" என்று விஜய் சேதுபதியிடம் மடோனாவால் பாராட்டு வாங்க முடிந்தது. 

  எனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஆரம்பத்தில் நல்ல நட்பு இல்லை. சரியாகப் பேசிக்கொள்ள மாட்டோம். அது படத்துக்கும் உதவியது. இரு கதாபாத்திரங்களும் ஆரம்பத்தில் அப்படித்தானே இருக்கும் என்கிறார் மடோனா. படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மடோனாவுக்கு யாழினி கதாபாத்திரம் போல இன்னொன்று அமையவில்லை.

  *

  படத்துக்கு ‘எஸ்கிமோ காதல்’ என்று தான் முதலில் தலைப்பு வைத்தார் நலன். ஆனால் அந்தத் தலைப்பு நெருடலாக இருப்பதாக உணர்ந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காதலும் கடந்து போகும் என்று தலைப்பு வைத்துள்ளார். நானும் ரெளடிதான், சேதுபதி என இரண்டு ஹிட் படங்களுக்குப் பிறகு வெளிவந்த விஜய் சேதுபதியின் படம் என்பதால் ஹாட்ரிக் வெற்றியை அவர் தொடுவாரா என்கிற ஆவல் உருவாகியிருந்தது. 327 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளித்தது.

  விஜய் சேதுபதியும் மடோனாவும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்த படத்தில் இன்னொருவரும் பெயர் வாங்கினார். இரண்டாம் பாதியில் ஜூனியர் அடியாளாக வரும் மணிகண்டன். இன்று தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை தரும் நடிகர்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். 

  *

  இருவருக்கும் காதல் வரும்போது படம் முடிவடைந்துவிடும்.

  இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார் நலன். 

  நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே. தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உடனே நட்பு மட்டுமல்ல காதலும் உருவாகி விடுவது போலத்தான் காட்சிகளை அமைப்பார்கள். ஆனால், இப்படத்தில் நட்பு வளரும் காலகட்டத்தை படிப்படியாக காண்பித்துள்ளார் நலன். ஓர் அடியாளுக்கும் ஐ.டி. பெண்ணுக்கும் நட்பும் காதலும் மலர்வது சாத்தியமே என்பதைப் படம் பார்ப்பவர்கள் நம்புவது போல காட்சிகள் இருந்தன.

  இடைவேளைக்குப் பிறகு நட்பு அடுத்தடுத்தக் கட்டங்களுக்குத் தாவும். யார் எப்போது மனம் மாறினார்கள் என்று நமக்குத் தெரியாது. ஏன் அவர்கள் இருவருக்குமே கூட அது தெரியாது. எந்தக் கட்டத்தில் நட்பு, பக்குவமடைந்து ஓர் அழகிய உறவாக மாறியது? குறிப்பால் உணர்த்தும் நிதானமான காட்சிகளின் வழியே பார்வையாளர்களுக்கு இந்த விஷயம் கடத்தப்பட்டிருக்கும். 

  இடைவேளைக்கு அடுத்தக் காட்சியில், இரவு வேளையில் விஜய் சேதுபதியின் வீட்டில் இருவரும் தண்ணியடிப்பார்கள். அறையில், தமிழக அரசு வழங்கிய டிவியில் காதலிக்க நேரமில்லை படம் ஓடிக்கொண்டிருக்கும்.

  தண்ணியடித்த மடோனா அழகாக உளறுவார். பேசும் விதமே மாறிப்போகும் (டப்பிங் கலைஞர் ரவீணாவுக்குப் பாராட்டு. யாழினி கதாபாத்திரத்துக்கு மடோனாவுக்கு ஈடாகப் பங்களித்துள்ளார்). எனக்கு ஒரு பாய் பிரெண்ட் இருந்தான். அவன்கூட எனக்கு இதெல்லாம் பண்ணியிருக்க மாட்டான் என்பார் மடோனா (தன்னிடம் மோசமாக நடக்க முயற்சி செய்த நபரை விஜய் சேதுபதி அடித்ததை மனத்தில் வைத்து).

  ஒருகட்டத்தில் அந்த மப்பிலும் ஒரு தெளிவு பிறந்து அழுவார். 

  என் நிலைமை இப்படி ஆயிடுச்சு பார்த்தியா! குடிக்கிறதே அசிங்கம். அதுவும் உன்னை மாதிரி ஒரு ரெளடியோட, ரெளடி வீட்ல உட்கார்ந்து குடிக்கிறது இன்னும் அசிங்கம். நீ நல்லவன் தான். ஆனா இதுக்கா நான் சென்னைக்கு வந்தேன் என்று நினைத்து நினைத்து அழுவார். பிறகு உரிமையுடன் விஜய் சேதுபதியை வாய்யா என அருகில் வரச்சொல்வது போல அழைப்பார். பக்கத்துல வாய்யா... என்று சொல்லி, அவர் தோளில் சாய்ந்துகொள்வார். முதல்ல இதை ஷேவ் பண்ணு என்று தாடியைக் குறிப்பிட்டுச் சொல்வார். லேசாக வெட்கம் வரும் விஜய் சேதுபதிக்கு. நம்பமுடியாத ஆனந்தத்தை அடக்கியபடி, அவரும் மடோனாவின் தலையுடன் தன் தலையைச் சாய்த்துக்கொள்வார்.

  காலையில் விஜய் சேதுபதி வீட்டில், அவரை ஒரு கையால் அணைத்தபடி படுத்துக்கிடப்பார் மடோனா. விஜய் சேதுபதியின் இடது கால் மடோனாவின் மீது இருக்கும். திடுக்கிட்டு எழும் மடோனா, சத்தமில்லாமல் அடித்துப்பிடித்துத் தன் வீட்டுக்குச் சென்றுவிடுவார்.

  ஒரு நெருக்கடியில், வேலையின்றி தான் தவிப்பது வீட்டுக்குத் தெரிய வந்ததால் தப்பிப்பதற்காக ஒரு பொய்யைச் சொல்லிவிடுவார் மடோனா. ஐ.டி நிறுவன மேலாளரைத் தான் காதலிப்பதாக மடோனா சொல்ல, அடுத்த நாளே அவரைக் கூட்டிக்கொண்டு ஊருக்கு வா என்று சொல்லிவிடுவார் மடோனாவின் அப்பா. அதனால் விஜய் சேதுபதியைத் தன்னுடைய காதலனாக நடிக்கச் சொல்வார். 

  இதனால் அடியாளுக்கு ஐ.டி. மேனேஜர் வேஷம் போடப்படும். விஜய் சேதுபதிக்கு கோட் சூட் மாட்டிவிடுவார் மடோனா. ஆனால் இந்தத் தோரணையை விஜய் சேதுபதி ரசிக்க மாட்டார்.

  கொஞ்சம் ஓவரா இல்லை?

  மூஞ்சி லோக்கலா இருக்கில்லை. இப்படித்தான் மேட்ச் பண்ண முடியும் என்பார் மடோனா. கடுப்பில் அவரைப் பார்ப்பார் விஜய் சேதுபதி.

  தன் தந்தையிடம் விஜய் சேதுபதியைக் காதலனாக அறிமுகப்படுத்துவார். நெருக்கடியில் உளறிக் கொட்டுவார் விஜய் சேதுபதி.

  யாரும் இல்லாத நேரத்தில், கோயில் தெப்பக்குளத்தில் இருவரும் அமர்ந்திருக்கும்போது, தன் காதலை கிட்டத்தட்ட நேரடியாகவே சொல்வார் மடோனா. ஆனால் அதைக் கேட்டுப் புரிந்தும் புரியாததும் போல் இருந்துவிடுவார் விஜய் சேதுபதி. கடைசியில் விஜய் சேதுபதியைக் கட்டிக்கொள்வார் மடோனா. நியாயமாக இந்தக் காட்சியுடன் படம் முடிந்திருக்கவேண்டும். விஜய் சேதுபதி மடோனாவை ஜாம் ஜாம் என திருமணம் செய்திருக்கவேண்டும். வாழ்க்கை அவ்வளவு இனிமையாகவா எல்லோருக்கும் இருந்துவிடுகிறது? சோதனை யார் ரூபத்திலும் வரலாம் தானே. 

  அடுத்து நடக்கும் ஒரு தெருச்சண்டையில் மடோனா, அவர் அப்பா என எல்லோரும் தலைகுனியும்படிச் செய்துவிடுவார் விஜய் சேதுபதி. கடுப்பில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவர் மட்டும் சென்னைக்கு வந்துவிடுவார்.

  ஆரம்பக் காட்சிகளில் மடோனாவின் அலுவலக நேர்காணலை அலட்சியமாக எண்ணும் விஜய் சேதுபதி, மடோனாவின் இன்னொரு நேர்காணலுக்காக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு காரியம் செய்வார். விழுப்புரத்திலிருந்து தாமதமாக வரும் மடோனாவைக் காப்பாற்ற, நேரத்தைக் கடத்தும் வேலைகளில் ஈடுபவார். தானும் நேர்காணலுக்கு வந்தவன் தான் என்றொரு பிம்பத்தை உருவாக்கி, நேர்காணல் செய்பவர்களிடம் நீண்ட நேரம் ஏதேதோ பேசுவார். கடைசியில் இவரைப் பிடித்து தர்ம அடி அடிப்பார்கள். பலர் முன்னிலையில் அவமானப்படுவார். ஏன்ப்பா இப்படிச் செய்தே என்று நேர்காணலை நடத்துபவர் பரிதாபப்பட்டுக் கேட்பார்.

  ஒருசில வாய்ப்புகள் லைஃப்பில் ஒரு தடவைதான் சார் வரும். அதை மிஸ் பண்ணிவிட்டால், அந்த மிஸ் பண்ண ஒரு வாய்ப்பை நினைத்து லைஃப் வீணாகிவிடும் சார் என்பார். 

  பாதுகாவலர்கள் விஜய் சேதுபதியை இழுத்துக்கொண்டு வரும்போது எதிரே வேகவேகமாக அலுவலகத்துக்குள் நுழைவார் மடோனா. அவர் அங்குக் கண்ட காட்சி நம்பமுடியாததாக இருக்கும். பாதுகாவலர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மடோனாவைப் பார்க்காமல் ஓரமாகச் சென்று விடுவார் விஜய் சேதுபதி. தனக்காக அவமானப்படும் அவரைக் கண்டு செய்வதறியாமல் தவிப்பார் மடோனா. 

  விஜய் சேதுபதியின் அந்தத் தியாகத்தால் மடோனா அந்த நேர்காணலில் கலந்துகொண்டு இறுதியில் தேர்வாகியும் விடுவார்.

  ஆசை ஆசையாக விஜய் சேதுபதியிடம் இந்தத் தகவலைத் (கூடவே காதலையும்) தெரிவிக்க வீட்டுக்கு வந்து காத்துக்கிடப்பார் மடோனா. ஆனால் அதன்பிறகு அவரால் விஜய் சேதுபதியை மீண்டும் பார்க்க முடியாமல் போய்விடும். அடியாளாக இருப்பதால் உண்டாகும் பகைமையில் காவல்துறையில் பணியாற்றும் சமுத்திரக்கனிக்கு எதிராக வன்முறைச் செயலில் ஈடுபடுவார் விஜய் சேதுபதி. இதனால் மடோனாவைப் பார்க்க வரமாட்டார். முழுவதுமாகத் தவிர்த்துவிடுவார்.

  வருடங்கள் ஓடும். அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று அமோகமாக வாழ்ந்துகொண்டிருப்பார் மடோனா. ஆனாலும் அவர் மனது விஜய் சேதுபதியைப் பார்க்கத் துடிக்கும். கடைசியில் கனவில் தான் அது நடக்கும். அந்தக் கனவில் மடோனாவின் வளர்ச்சியைக் கண்டு வியப்பார் விஜய் சேதுபதி.

  நான் ஆசைப்படறது ஒண்ணே ஒண்ணுதான். நான் எப்படி இருக்கேன், எப்படி வாழ்ந்தேன்னு காட்டணும். இந்த உலகத்துலயே நீ தான் அதைப் பார்த்து சந்தோஷப்படுவேன்னு நினைக்கிறேன் என்பார் மடோனா. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்க, கனவு முடிந்துவிடும்.

  வாழ்க்கையின் அழகே, கனவுகள் நிறைவேறுவதுதானே! அந்தத் தருணம், கடைசிக்கட்டம். 

  ரசிகர்களைத் தவிக்க வைத்து விஜய் சேதுபதியும் மடோனாவும் ஒரு பெட்ரோல் பங்கில் சந்தித்து மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்வார்கள். அப்போது, காதல் அவர்களைக் கடந்து போகும்.

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp