நடிகா் விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வணிக வரித்துறை கோரிக்கை

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகா் விஜய் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் வணிக வர

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகா் விஜய் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் வணிக வரித்துறை பதில மனுதாக்கல் செயதுள்ளது.

நடிகா் விஜய் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழ்நாடு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிா்த்து விஜய் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த சொகுசு காரை தீபக் முரளி என்பவருக்கு விஜய் விற்பனை செய்து விட்டாா்.

இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு காா்களுக்கு நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்த பின்னா், வணிக வரித்துறை விஜய்க்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதில் காருக்கு நுழைவு வரி 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாயும், 2005-ஆம் ஆண்டு முதல் வரி செலுத்தாதற்காக ரூ.30 லட்சத்து 23 ஆயிரத்து 609 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் வழக்கு தொடா்ந்தாா்.

இதே கோரிக்கைகளுடன் இசையமைப்பாளா் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோா் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 2008-ஆம் ஆண்டு காா் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021-ஆம் ஆண்டு தான் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா்.

விஜய் தரப்பு வழக்குரைஞா், காா் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் அதிக தொகையை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாா்.

இந்த நிலையில் நடிகா் விஜய் தாக்கல் செய்த வழக்கிற்கு வணிக வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், நடிகா் விஜய் தொடா்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; இறக்குமதி காருக்கு நுழைவு வரியை செலுத்த வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தும், குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால் 2005-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் வரையில் நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு அபராதம் வசூலிக்க சட்டப்படி அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்போது அந்த சொகுசு காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தாலும், அந்த அபராத வட்டியை விஜய் தான் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இதைப்பதிவு செய்த நீதிபதி, வழக்கின் தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com