
'அமர்களம்' படத்தில் இணைந்து நடித்த நடிகர் அஜித் குமாரும் ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இவர்கள் காதலிக்கத் துவங்கி 23 ஆண்டுகள் ஆகிறது. இதனையடுத்து நடிகை ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அஜித் தனது மனைவி ஷாலினிக்கு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து செய்வது அதிகரித்துவரும் சூழ்நிலையில் நடிகர் அஜித்தும் ஷாலினியும், இந்த கால தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ''விக்னேஷ் சிவன் - நயன்தாராவை கைது பண்ணுங்க'': பரபரப்பு புகார்
அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் மகன், மகளுடன் அஜித், ஷாலினியின் புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இந்தப் படத்தில் நடிகர் கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நடிகர் அஜித் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
வலிமை வெளியாகும் வரை 2 ஆண்டுகளுக்கு மேலாக அஜித் பட அப்டேட்டுகள் வெளியாகாமல் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். தற்போது அஜித்தின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள், குடும்ப புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.