
இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவில்போது இயக்குநர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒத்த செருப்பு திரைப்படத்துக்குப் பிறகு, பார்த்திபன் இயக்கி வரும் திரைப்படம் இரவின் நிழல். இதில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்றது.
இதையும் படிக்க- ஆர். பார்த்திபனின் இரவின் நிழல் பட டீசர் வெளியானது
விழாவில் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி ஷோபனா சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, படத்தின் முதல் பாடலை வெளியிட்டார். விழாவில் இயக்குநர் பார்த்திபன் பேசுகையில் அவருடைய மைக் திடீரென வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மேடையில் இருந்து மைக்கை வீசி எறிந்தார். பார்த்திபனின் இந்த செயலால் விழா மேடையில் இருந்த ஏ.ஆர். ரஹ்மான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய பார்த்திபன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரினார். இந்நிகழ்வால் விழா மேடையில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...