
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 60 சதவீதம், தமிழ்ப் படங்களைத் திரையிட வேண்டும் என்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கூறியுள்ளார்.
2018-ல் வெளியான மலையாளப் படம் - ஜோசப். இப்படத்தின் தமிழ் ரீமேக், விசித்திரன் என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். ஜோசப்பை இயக்கிய பத்மகுமாரே விசித்திரனையும் இயக்கியுள்ளார். கதாநாயகனாகப் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ். விசித்திரன் படம் மே 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்.கே. சுரேஷ். அதில் அவர் கூறியதாவது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.கே. சுரேஷ் பேசுகிறேன். விசித்திரன் படத்துக்காக நான் இதைப் பேசவில்லை. பொதுவாக எங்களிடம் உள்ள குமுறல் தான். தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 60% தமிழ்ப் படங்கள் தான் திரையிடப்பட வேண்டும். 40% இதர மொழி, பிற மாநிலப் படங்கள் வெளியாகலாம் என தயாரிப்பாளர் சங்கத்தில் விரைவில் முடிவு செய்யப்போகிறோம். ஏனெனில் பெரிய தமிழ்ப் படங்களுக்குத் திரையரங்குகள் சுலபமாகக் கிடைத்து விடும். இது பல நாள்களாக நடக்கின்ற போராட்டம்.
All tamilnadu theater associations @CMOTamilnadu @annamalai_k pic.twitter.com/QmIDzYlKQI
— RK SURESH (@studio9_suresh) May 3, 2022
சிறு படங்களுக்கு இன்று குரல் கொடுக்க முடியாவிட்டால் என்றைக்கும் குரல் கொடுக்க முடியாது. இதுபோன்ற சூழலில் குரல் கொடுக்கும்போதுதான் கவனம் கிடைக்கும். எனவே 60% திரையரங்குகள் மாநில மொழிப் படங்களுக்குக் கிடைக்கவேண்டும். இதை கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் செய்ய முடியாது. எனில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்கள் இளிச்சவாயர்களா? எல்லாத் திரையரங்குகளுக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் திரையரங்கு உரிமையாளர்கள் நன்றாக இருக்க முடியும். இல்லாவிட்டால் எல்லாத் தயாரிப்பாளர்களும் ஓடிடியில் படத்தை விற்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே தமிழ்ப் படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.