கறுப்பு வெள்ளை கலர்: ரஜினி காதல் வளர்த்த கதை! தம்பதியாக வெளியிட்ட தகவல்

லதாவுடன் காதலை எப்படி வளர்த்தார் ரஜினிகாந்த்? ரஜினி அழைக்கும் லதாவின் செல்லப் பெயர் என்ன? 
கறுப்பு வெள்ளை கலர்: ரஜினி காதல் வளர்த்த கதை! தம்பதியாக வெளியிட்ட தகவல்

வாட்ஸ் ஆப் இல்லை, இன்ஸ்டா இல்லை, முகநூல் இல்லை, மெசேஞ்சர் இல்லை... அதானே, செல்போனே இல்லையே.  அந்தக் காலத்தில் - கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் - 1981-ல் தன் காதலை எப்படி வளர்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

திருமணத்துக்கு மறு நாள் ரஜினிகாந்தின் இல்லத்தில் - ரஜினியும் லதாவும் அளித்த பேட்டியில் இருவரின் காதலைப் பற்றியும் திருமணம் பற்றியும் ஏராளமான, ஆர்வத்தைத் தூண்டும் தகவல்கள்.

திருமணம் எவ்வாறு நடந்தது என்ற கேள்விக்கு லதா சொன்ன பதில் - "எங்க வெட்டிங்கை சிம்பிளாக நடந்த வேண்டும் என்று இவர் (ரஜினிகாந்த்) விரும்பினார்.  அதேபோல எளிமையாக நடத்திவிட்டோம். ஒரு புரோகிதர்கூட இல்லை. மாலை மாத்திக் கொண்டோம். சில நிமிஷங்களில் முடிந்துவிட்டது."

இடையில் குறுக்கிட்ட ரஜினிகாந்த், "ஒரு டிஃபெரண்டாக - வித்தியாசமாக வெட்டிங் நடக்கணும்னு விரும்பி சிம்பிளா முடிச்சுட்டோம். சடங்குகள் எதுவும் தேவையில்லைனு தீர்மானம் பண்ணி வெங்கடேசுவர பெருமாள் அனுக்ரஹத்தோடு எளிமையா முடிஞ்சுது. வாழ்க்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள் என் திருமண நாள்.

"அந்த மகிழ்ச்சியான நேரம் முழுமையாக எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த மகிழ்ச்சியில் நானும் நான் விரும்பியவளும் திளைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதிக அளவில் - அநாவசியமாக வேறு யாரும் அங்கு தேவையில்லை என்பது எனது முடிவு" என்றார்.

முதன்முதலில் ரஜினிகாந்தை எப்படி, எப்போது சந்தித்தீர்கள்? என்ற கேள்விக்கு லதா கூறுகிறார்:

"சென்ற ஜூன் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று எங்கள் கல்லூரி மாகஸினுக்காக (சென்னை, எத்திராஜ் கல்லூரி மூன்றாம் ஆண்டு இலக்கிய மாணவி லதா) ரஜினிகாந்தைப் பேட்டி காண விரும்பினேன்.  அவரிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால், அவரை நேருக்கு நேர் சந்தித்தபோது, சில நிமிஷங்கள் பேச நா எழவில்லை.

"என்னை அவர் கவர்ந்துவிட்டார். அவரிடம் பேசியபோது, பழகியபோது ஒன்றை உணர்ந்தேன். நான் பேசியதும் பழகியதும் ரஜினிகாந்த் என்ற ஸ்டாருடன் அல்ல. ரஜினிகாந்த் என்ற அன்பான மனிதருடன்தான் என்பதை உணர்ந்தேன். இன்டர்வியூவுக்காக அவரைச் சந்திக்கப் போனேன். வேறொன்றின் ஆரம்பமாகவும் அந்தச் சந்திப்பு அமைந்துவிட்டது! வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிகரமான திருப்பத்தையும் அந்தச் சந்திப்பு தோற்றுவித்தது."

ரஜினி கூறுகிறார்: "லதாவை நான் சந்தித்த அந்த முதல் சந்திப்பு மறக்க முடியாத சந்திப்பு.  அவளைப் பார்த்தவுடனே இவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்."

லதா: "அடுத்த வாரமே அவர் என் பெற்றோரைச் சந்தித்தார். ஆனால், என்னிடம் நேரடியாக அவர் எப்போதும் எதுவும் சொல்லவில்லை.

"தொடர்ந்து ரஜினி டெலிபோனில் என்னுடன் பேசுவார். காதல் மலர்ந்தது. 'காளி' படம் இருவரும் பார்த்தோம். திருமணத்தைப் பற்றி என் பெற்றோரிடம், சீக்கிரமாகவோ சில மாதங்களுக்குப் பிறகோ அவர் பேச வருவார் என்று தெரியும்.  ஆனால், எனக்கு ஒரு தர்மசங்கடம். மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு எனக்குத் திருமணமே வேண்டாம்  என்று சில நாள்களுக்கு முன் என் பெற்றோரிடம் சொல்லியிருந்தேன்."

ரஜினி: "அப்புறம் சில நாள்களுக்குப் பின் லதாவின் பிறந்த நாளன்று வாழ்த்துக் கூறப் போயிருந்தேன். காலை பூஜை நேரம்.  அப்புறம் ஹேம்நாக் பிக்சர்ஸ் பட ஷூட்டிங், இந்த இடைநேரத்தில் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் படித்து ரசித்தோம்."

லதா:  "எங்களுக்குத் திருமணம் என்று செய்திகள் வெளியானதைப் படித்துவிட்டு, பல தோழிகள், என்ன லதா, இது உண்மைதானா? என்று கேட்பது போல என்னை உற்றுஉற்றுப் பார்த்துப் புன்னகைத்தது, எனக்கு என்னவோ போல இருந்தது. ரஜினியைப் பற்றியும் எங்கள் கல்யாணத்தைப் பற்றியும் கேள்வி மேல் கேள்வி போட்டு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார்கள் அவர்கள்."

சரி, வருங்காலத் திட்டம் பற்றிக் கேட்டபோது அப்போது லதா என்ன சொன்னார்?

"முதலில்  படிப்பை - பைனலை முடித்துவிட வேண்டும். ஏப்ரல் மாதம் பரிட்சை. அப்புறம்தான் மற்றவை எல்லாம்.  வீட்டை அலங்காரமாக ஜோடிப்பது, மனைவி என்கிற முறையில் கணவருக்குப் பணிபுரிவது, இசையில் தொடர்ந்து ஈடுபடுவது போன்றவையே முக்கிய பணிகளாக இருக்கும்."

இந்த பேட்டியின்போது, லதாவைச் செல்லமாக ரஜினிகாந்த் அழைத்த பெயர் ஜில்லு!

1981, பிப்ரவரி 26-ல் திருப்பதியில் ரஜினிகாந்த் - லதா திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து வந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்தான் தாங்கள் காதல் வளர்த்த கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். இன்று 41 ஆண்டுகள் கடந்துவிட்டன, காலத்தை வென்ற சூப்பர் ஸ்டார் காதல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com