இயக்குநர் என நினைத்து ரசிகருடன் டிவிட்டரில் உரையாடிய கமல்!

பிக் பாஸ் போட்டி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரசிகருக்கு, இயக்குநர் என நினைத்து நடிகர் கமல்ஹாசன் பதிலளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக் பாஸ் போட்டி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரசிகருக்கு, இயக்குநர் என நினைத்து நடிகர் கமல்ஹாசன் பதிலளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் போட்டியின் வார இறுதி நிகழ்வை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில், சக போட்டியாளர்களை உடல்மொழி கேலி செய்த அஷீம் மற்றும் மணிகண்டனை நடிகர் கமல்ஹாசன் கண்டித்து பேசினார். கமலின் செயலை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்.

இந்நிலையில், மெளலி என்ற பிக் பாஸ் ரசிகர் ஒருவர், “கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் உடல்மொழி கேலி செய்த அசீம் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கமல்ஹாசன் கையாண்ட விதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைந்துள்ளது. அதோடு நிறுத்தாமல், ஏடிகேவை அனைவரையும் போல நடித்து காண்பிக்க கூறியிருந்தார். தொடர்ந்து அந்த இடத்திலேயே ஏடிகே செய்ததற்கும், மணிகண்டன், அஷீம் செய்ததற்கும் இடையேயான வித்தியாசத்தை விளக்கினார்” என்று கமலை டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்த கமல், பம்மல் கே சம்பந்தம் படத்தின் இயக்குநர் மெளலி என நினைத்து, “நன்றி மொளலி. அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவை செய்யத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களைபோல் பெருமைமிகுந்த மனிதர்களின் வரிசையில் நாங்களும்” என பதிலளித்தார்.

கமலின் பதிலுக்கு பார்த்த ரசிகர், “தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் என்னுடைய கருத்துகள் தங்களை வந்தடைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒன்று கூறுகிறேன், திரை உலகத்தில் மாற்றுப் பாலின சமூகத்தினர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, “இயக்குனரும் மூத்த நடிகருமான மௌலி என தவறுதலாக நினைத்துவிட்டேன்.  இருந்தாலும் தங்களுடைய பாராட்டுக்கு நன்றி!” என்று கமல் பதிவிட்டுள்ளார்.

இந்த டிவிட்டர் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com