
பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார்.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசை. ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள். ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. ஆர்ஆர்ஆர் படத்தின் 2-ம் பாகம் பற்றி சிகாகோவில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: என் தந்தை தான் (விஜயேந்திர பிரசாத்) என்னுடைய எல்லாப் படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். நாங்கள் இருவரும் ஆர்ஆர்ஆர் 2 படம் பற்றி ஓரளவு பேசியுள்ளோம். 2-ம் பாகத்தின் கதையை உருவாக்குவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். ஆஸ்கர் விருதுக்கான பொதுப்பிரிவில் ஆர்ஆர்ஆர் படம் போட்டியிடுகிறது.