
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ச்சியாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில், திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இதன் காரணமாக படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வருகிற 23 ஆம் தேதி இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' படம் இந்த மாத இறுதியில் திரைக்குவரவிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளதால் 'நானே வருவேன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிற விமர்சனமா இது?: கெளதம் மேனன்
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் வாத்தி படம் இந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே கேப்டன் மில்லர் படத்துக்காகவும் தனுஷ் தற்போது தயாராகிவருகிறார். இதுகுறித்து புதிய தோற்றத்தில் தனுஷ் இருக்கும் படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து தனுஷ் பட அப்டேட்டுகள் வெளியாகி வருவதால் இது தனுஷ் ஆண்டு என அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.