ருசி இல்லாமல் தடுமாறுகிறதா அன்னபூரணி? திரை விமர்சனம்

உயர்சாதி என சொல்லப்படும் குடும்பப் பெண்ணாக வரும் அன்னபூரணிக்கு (நடிகை நயன்தாரா) இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வேண்டும் எனும் லட்சியம் இருக்கிறது.
அன்னபூரணி திரை விமர்சனம்
அன்னபூரணி திரை விமர்சனம்

அசைவ உணவுகளையே விரும்பாத உயர்சாதி என சொல்லப்படும் குடும்பப் பெண்ணாக வரும் அன்னபூரணிக்கு (நடிகை நயன்தாரா) இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வேண்டும் எனும் லட்சியம் இருக்கிறது. தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அவர் தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எப்படி சமாளித்தார் என்பதே அன்னபூரணி திரைப்படத்தின் கதை. 

இந்தப் படத்தை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். நடிகர்கள் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

திருச்சியைச் சேர்ந்த பிராமணக் குடும்பப் பெண்ணாக நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. சிறு வயது முதலே உணவை ருசி அறிவதில் விசேஷ திறமை இருக்கும் அன்னபூரணிக்கு சமைப்பதில் அவ்வளவு ஆர்வம். எனினும் கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் தனது தந்தைக்கு அசைவம் பிடிக்காது என்பதால் அவருக்குத் தெரியாமல் கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார். வழக்கமான, வித்தியாசமில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. இரண்டாம் பாதியில் விபத்துக்குப் பிறகு அவர் தடுமாறும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சத்யராஜிடம் அவர் பேசும் இடங்கள் ராஜா ராணி திரைப்படத்தை ஞாபகப்படுத்துகின்றன. 

பொதுவாக கமர்ஷியல் படங்களில் கதாநாயகியை வெறும் பொம்மை போன்று இயக்குநர்கள் பயன்படுத்துவார்கள் எனும் விமர்சனம் உண்டு. இந்தப் படத்தில் சற்று வித்தியாசமாக நடிகர் ஜெய் அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் இறுதி வரை அவர் எதற்காக குறுக்கநெடுக்க வருகிறார் எனும் அளவிலேயே இருக்கிறது அவரின் கதாபாத்திர வடிவமைப்பு. இறுதிக்காட்சியில் ஏதாவது காதல் வசனங்களையாவது அவருக்குக் கொடுத்திருக்கலாம். இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சஞ்சு என பலர் நடித்துள்ளனர். 

நயன் தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமாரின் நடிப்பு ஓரளவு நம்பும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தனது மகளுக்காக உருகும் இடங்களை கூடுதல் மெனக்கெடலுடன் இயக்குநர் படமாக்கியிருக்கலாம். 

திரைக்கதையை அசைவ விரும்பிகள் - சைவ விரும்பிகள் என கொண்டு செல்லப்பட்டிருந்தாலும்கூட பல முக்கியமாக விஷயங்களைப் பேசியிருக்க முடியும். தொடக்கத்தில் அசைவ உணவுகளை வெறுப்பதாக வரும் காட்சிகளையும், வசனங்களையும் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் இயக்குநர் அமைத்திருக்கலாம். எனினும் நடிகர் ஜெய் மூலமாக உணவு உரிமை குறித்த வசனத்தை வைத்து சாமர்த்தியமாக தப்பித்திருக்கிறார். பல்கலைக் கழகத் தேர்வில் தங்கப்பதக்கம் வென்ற நயன் தாராவின் தந்தை கடவுளுக்கு சேவை செய்வதற்காக கோயிலில் சமையல் செய்வதாக சொல்லும் இடங்களில் பார்வையாளர்களே அவரைத் திட்டும் அளவிற்கு அமைந்திருக்கிறது படத்தின் லாஜிக். கதைக்கு தேவையற்ற அரசியல் வசனங்களால் தடுமாறுகிறாள் அன்னபூரணி. இந்து-இஸ்லாமியரை இணைக்கும் இடங்களாக உணவை முன்னிறுத்தியது பாராட்டுக்குரியது.

தனது மகனை விடுத்து நயன்தாராவிற்காக சத்யராஜ் தனது வேலையை விடுவது, சமையல் போட்டியை நாடே திரும்பிப் பார்க்கும் அளவு முக்கியப் பிரச்னை போல காட்சிப்படுத்தி தடுமாறியது என ஆங்காங்கே தேங்கி நிற்கிறாள் அன்னபூரணி. “பெண்களுக்கு தங்களது தவறுகளை ஏற்றுக் கொள்ளும் உரிமைகூட இருப்பதில்லை”, ”உன் உணவு உன்னோட உரிமை” ஆகிய வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. சென்னை, திருச்சி என வெறும் தூரக் காட்சிகளை மட்டும் வைத்து ஏமாற்றி இருக்கும் இயக்குநர் சாதாரண காட்சிகளுக்கும்கூட கிரீன்மேட்டைப் பயன்படுத்தியிருப்பதையாவது தவிர்த்திருக்கலாம் அல்லது இன்னும் சரியாக செய்திருக்கலாம்.  

பின்னணி இசை பெரிதாக கைகொடுக்கவில்லை. கேமராவும், படத்தொகுப்பும் விறுவிறுப்பைக் கூட்ட இன்னும் கூடுதலாக பணியாற்றியிருக்கலாம். 

ருசியான சமையலை விரும்பிய அன்னபூரணியை இன்னும் ருசியாக இயக்குநர் கொடுத்திருந்தால் ரசிக்கப்பட்டிருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com