திருமணம்தான் தீர்வா? பெண் சிக்கல்களைப் பேசி கவனம் ஈர்க்கும் கண்ணகி: திரை விமர்சனம்

நான்கு இளம்பெண்களின் திருமணம் மற்றும் அதுதொடர்பான கதையாக வந்திருக்கிறாள் கண்ணகி.
திருமணம்தான் தீர்வா? பெண் சிக்கல்களைப் பேசி கவனம் ஈர்க்கும் கண்ணகி: திரை விமர்சனம்

நான்கு இளம்பெண்களின் திருமணம் மற்றும் அதுதொடர்பான கதையாக வந்திருக்கிறாள் கண்ணகி. பெண்கள் தங்களது வாழ்வில் சந்திக்கும் பெரும் திருப்பமாக இருக்கும் திருமணம் அவர்களது வாழ்வில் என்னவெல்லாம் மாற்றங்களையும், சங்கடங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை பேச முனைந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் யஸ்வந்த். 

இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரம் எனக் குறிப்பிடும்படி அல்லாமல் திரையில் விரியும் 4 கதைகளிலும் நடித்த திரைக்கலைஞர்களுக்கும் சரிசமமான காட்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஷோயா என ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களும் அவர்களது கதையில் சரியான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர். இவர்களுடன் மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மெளனிகா, யஸ்வந்த் கிஷோர் என பலர் நடித்துள்ளனர். 

தமிழில் நீண்ட நாள்களுக்குப் பிறகு இவ்வளவு பெண் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவான திரைப்படம் கண்ணகியாகத்தான் இருக்கும். இந்த முயற்சிக்காகவே படக்குழுவையும், இயக்குநரையும் பாராட்டலாம். 

கருவுற்ற பிறகு கருவைக் கலைக்க அலையும் கீர்த்தி பாண்டியன், தாயின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக தள்ளிப்போகும் அம்மு அபிராமியின் திருமணம், திருமணம் என்பது தேவையற்றது என சுதந்திர உறவில் வாழும் ஷாலின் ஷோயா, திருமணமான பின் விவகாரத்து சிக்கலை எதிர்கொள்ளும் வித்யா பிரதீப் என நால்வரின் கதையின் அடிப்படை திருமணம்தான் என்றாலும் ஒவ்வொருவரின் பிரச்னையை, சிக்கலை அவர்களது பார்வையிலிருந்து கடத்தியிருக்கிறார் இயக்குநர். 

முன்னரே குறிப்பிட்டதைப் போல் அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல நடிப்பைக் கொடுத்திருந்தாலும் அவர்களில் ஷாலின் ஷோயாவின் நடிப்பை தனியே பிரித்துப் பாராட்டும்படி செய்திருக்கிறார். நவநாகரிகப் பெண்ணாக திருமண உறவை வெறுக்கும் அவர் அதற்குண்டான உடல்மொழியுடன் பிறரை அசட்டை செய்யும் இடங்களில் மிரட்டியிருக்கிறார். நீதிமன்றக் காட்சிகளில் உருகும் வித்யா பிரதீப் இதுவரை காணாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். 

4 கதைகள் தனித்தனியே பயணிக்காமல் ஒன்றின் இடையே மற்றொன்று என காட்சிகள் நகர்கின்றன. ஒருவகையில் படத்தின் மீதான அயற்சியை ஏற்படுத்தாமல் இருக்க இது உதவியிருக்கிறது. மயில்சாமி அம்மு அபிராமியிடம் பேசும் இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்து வரும் மியூட்களால் காட்சியின் வீரியமும், வசனத்தின் ஆழமும் குறைகின்றன. சில இடங்களில் கருப்புத் திரையில் வெறும் வசனங்களை மட்டும் பயன்படுத்தியும், மற்றொரு இடத்தில் வசனமற்று வெறும் காட்சிகளை மட்டும் பயன்படுத்தியும் காட்சிகள் நகர்வது வித்தியாசமாக இருக்கிறது. 

“ஒரு 4,5 பேரா வந்து பாத்துட்டு போக சொல்லுங்க அப்பா”, “சட்டம் பெண்களுக்கு சாதகமானது”, “ஒருத்தனுக்கு ஒருத்தியா இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தரா...”, “கல்யாணம்தான் நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு” என வரும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

மாதவிடாய் நேரத்தில் அம்மு அபிராமி கோவிலுக்குள் சென்று திருமணம் செய்துகொள்ளும் காட்சி ஒன்று வருகிறது. சென்சாரில் தப்பித்து வந்த அருமையான காட்சி அது. 

ராம்ஜியின் கேமராவும், ஷான் ரஹ்மானின் இசையும், சரத்குமாரின் படத்தொகுப்பும் திரைப்படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கின்றன. “சாமி கண்ணக் குத்தும்” பாடல் முணுமுணுப்பு ரகம். 

திரைக்கதையைப் பொருத்தவரை மெதுவாக நகர்வதால் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கலாம். இறுதிக் காட்சி யூகிக்க முடியாமல் இருந்தாலும் திருமணம் குறித்த பிரச்னைக்கு தீர்வாக இயக்குநர் சொல்ல வருவது என்ன என்பதை இன்னும் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். பெண் பார்க்கும் படலம் குறித்தே விமர்சனங்கள் எழுந்துவரும் சூழலில் கிளைமேக்ஸ் பேசும் தீர்வு எந்தளவு பொருத்தமாக அமையும் என்பது உரையாடலுக்கான வெளி. 

பெண்களின் கதையைத் தடுமாறாமல் பேசி கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் யஸ்வந்த். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com