’பருத்திவீரனில் குறத்தி என சொன்னதற்கு..’: தணிக்கை வாரியத்தை விளாசிய அமீர்

திரைப்பட தணிக்கை வாரியத்தின் செயல்பாடு குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் அமீர்.
’பருத்திவீரனில் குறத்தி என சொன்னதற்கு..’: தணிக்கை வாரியத்தை விளாசிய அமீர்

இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், மோகன் ராஜா, நித்திலன், அருண் குமார் ஆகியோர் இணைந்து நேர்காணல் அளித்துள்ளனர். அதில், இந்தாண்டில் சினிமாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் கதைக்களங்கள் என பல விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய இயக்குநர் அமீர், “தமிழ் சினிமாவில் தணிக்கைப் பிரச்னை வித்தியாசமாக இருக்கிறது. மலையாளத்தில் அரசியல் கட்சியின் பெயரைத் தைரியமாகக் காட்சிப்படுத்துவதுடன் தணிக்கை வாரியமும் அதைப் புரிந்து கொள்கிறது. சமீபத்தில் அனிமல் படம் பார்த்தேன். நான் பார்த்த இந்திய சினிமாக்களிலேயே இதுவே வன்முறை அதிகம் நிறைந்த படம். இது தமிழில் உருவாகியிருந்தால் பல காட்சிகள் நீக்கப்பட்டிருக்கும். நான் இயக்கிய பருத்திவீரன் படத்தில் குறத்தி என ஒரு கதாபாத்திரத்திற்குப் பெயர் வைத்திருந்தேன். தணிக்கை வாரியம் ‘குறத்தி’ எனப் பயன்படுத்தக்கூடாது என்றது. ஏன்? எனக் கேட்டதற்கு அந்த சாதியைத் திட்டுவதுபோல் இருக்கிறது என்றனர். திட்டுவதுபோல் இருப்பதாக நீங்களாகவே முடிவு செய்துகொள்வதா? அந்தப் புரிதலும் அறிவும் இல்லாமல்தான் தணிக்கைத் துறையில் இருந்தனர்.

மௌனம் பேசியதே படத்தில் ‘போடா வெண்ண’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன். படம் சென்சாருக்கு சென்றபோது அந்த வார்த்தையை நீக்கச் சொன்னார்கள். காரணம் கேட்டதற்கு, ‘அது தென் மாவட்டங்களில் கெட்ட வார்த்தை’ என்றார் அதிகாரி. நானே மதுரைக்காரன்தான். வெண்ணை என்பது கெட்ட வார்த்தையா எனக் கேட்டேன். பின், வலுகட்டாயமாக அதை நீக்கச் சொன்னதால், ‘போடா வெங்காயம்’ என மாற்றினேன். அதற்கு சரி என்றனர். இரண்டும் உணவுப்பொருள்தானே? இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட இங்கு தணிக்கை வாரியம் பெரிய பிரச்னையாக இருக்கிறது.

கேரள சென்சார் துறை நம்மைவிட மேம்பட்ட வாரியமாக இருக்கிறது. பாலிவுட்டிலும் எதையும் நீக்கச் சொல்வதில்லை. ஆனால், தமிழில் தணிக்கை வாரியம் இத்தனை பிரச்னைகளுடன் இருக்கிறது. ஒரே தலைமையின் கீழ் (மத்திய தணிக்கை வாரியம்) உள்ள தணிக்கை வாரியங்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி நடந்து கொள்வதின் குழப்பங்களுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை” எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com