'காதல் என்பது பொதுவுடைமை..’ இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

லென்ஸ், தலைக்கூத்தல் படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் நேர்காணல்.
'காதல் என்பது பொதுவுடைமை..’ இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில், பணியைத் துறந்தவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் இயங்கி வருகிறார். உருமி, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில படங்களில் நடிகராக நடித்தவர் லென்ஸ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தன் முதல் படத்திலேயே இந்திய அளவில் கவனம் பெற்றவர், மஸ்கிட்டோ பிலாசஃபி என்கிற பரிசோதனைப் படமொன்றையும் இயக்கி வெளியிட்டார். இந்தாண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்றான ‘தலைக்கூத்தல்’ படத்தினையும் எழுதி இயக்கியவர். இவரின் அடுத்தத் திரைப்படமான ‘காதல் என்பது பொதுவுடைமை’ சர்வதேச திரைவிழாக்களில் பங்குபெற்று வருகிறது.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் உடனான நேர்காணல்...

- அமெரிக்காவில் ஐடி ஊழியராக இருந்து நடிக்கும் ஆசையில் சினிமாவுக்குள் வந்தீர்கள், பின் இயக்குநர் அவதாரம். பல நல்ல இயக்குநர்கள் நடிக்கத் துவங்கியதும் படங்களை இயக்குவதில் இருந்து விலகிக்கொள்கிறார்கள். நீங்களும் ஒரு நடிகர். சமீபத்தில் வஞ்சகர் உலகம், ஹர்காரா படங்களில் கவனிக்கும் படியான நடிப்பை வழங்கியிருந்தீர்கள். இயக்குநரானதால் நடிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என வருந்துகிறீர்களா? 

ஆம். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால், தற்செயலாக இயக்குநராகி விட்டேன். நடிக்க முடியவில்லை என்கிற வருத்தம் அதிகமாகவே இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

- திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிதுதான். இயக்குநராக இந்தாண்டை எப்படி எதிர்கொண்டீர்கள்?

தலைக்கூத்தல் வெளியானதும் காதல் என்பது பொதுவுடைமை கோவா திரைப்பட விழாவில் திரையானதும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், இந்தாண்டு ஒரு புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தேன். அது முடியவில்லை. எந்தக் கதைகளையும் எழுதும் மனநிலையும் வாய்க்கவில்லை. அதனால், இந்த ஆண்டு மகிழ்வும், வருத்தமும் கலந்த ஆண்டுதான்.

- லென்ஸ் படத்துக்குப் பின் நீங்கள் கவனிக்கப்பட்டிருப்பீர்கள். அடுத்ததாக பெரிய படத்தை இயக்காமல் மஸ்கிட்டோ பிலாசஃபி என்கிற பரிசோதனை படத்தை எடுத்தீர்கள். தொடர்ந்து, தலைக்கூத்தல், காதல் என்பது பொதுவுடைமை போன்ற பெரிய படங்கள். வருங்காலங்களில் சிறிய பரிசோதனைப் படங்கள் எடுக்க திட்டமிருக்கிறதா?

ஒரு படமாவது திரையரங்கில் நன்றாக வருவதைப் போல் எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓராண்டாகவே எதையும் எழுதவில்லை. கலைத்துறையில் சின்னது பெரியது என எதுவுமில்லை. அதற்கான தயாரிப்பாளர்கள் வந்தால் கண்டிப்பாக சிறிய படங்களையும் இயக்குவேன்.

- தலைக்கூத்தலில் வசுந்தராவின் கதாபாத்திரம் நேர்மையாக எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக, கணவனின் செயலால் வெறுப்பில் இருப்பவளுக்கு ஆலை நிர்வாகி அவளைக் கவர அழகுசாதனப்பொருளைத் தருகிறான். அதைக் குப்பையில் போட சென்றவள், தயங்கி அதை வைத்துக்கொள்கிறாள். ஆனால், அந்த நிர்வாகி தவறான நோக்கத்துடன் நடந்துகொள்வதால் ஒரு புள்ளியில் ஆத்திரமடைகிறாள். இந்த மாதிரி விசயங்கள் படத்தில் நிறைய இருக்கிறது. படத்தின் மையத்தைத் தாண்டி நம் விமர்சகர்களிடமிருந்து இந்த நுட்மான பார்வைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார்களா?

இந்த மாதிரி நுட்பமான விமர்சனங்கள், பார்வைகள் குறைவாகவே வந்தன. ஆனால், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது. படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்பதைத் தாண்டி துல்லியமான விமர்சனங்கள் குறைவாகவே வந்தது. அதேநேரம், தலைக்கூத்தல் நிறைய பார்வையாளர்களைச் சென்றடையவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

- ஒரு இயக்குநராக ஒரு படத்தை உருவாக்குவதில் சிரமமான காரியமாக எதைப் பார்க்கிறீர்கள்?

ஒரு இயக்குநர் எழுத்தாளராக இருப்பதுதான் இருப்பதிலேயே மிகவும் கஷ்டமானது. அப்படி இருப்பதும் நல்லதுதான். ஆனால், கதை, திரைக்கதை எழுதுவதுதான் ஒரு இயக்குநருக்குக் கடினமான மிகப்பெரிய சவால்.

- மலையாள சினிமாவில் இயக்குநருக்கு நிகராக திரைக்கதை எழுத்தாளர்கள் கருதப்படுகிறார்கள், தமிழில் ஏன் அது நிகழவில்லை?

ஆணவம்தான் பிரச்னை என நினைக்கிறேன். இங்கு இயக்குநர்கள் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றிலும் தங்கள் பெயரே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். முந்தைய தலைமுறை இயக்குநர்கள் இதைச் செய்தார்கள், ‘நாளைய இயக்குநர்களும்’ இதையே தொடர்ந்து வருகிறார்கள். உண்மையில், நான் நன்றாக எழுதக்கூடியவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு எழுத்தாளர்கள் வேண்டும் என நினைக்கிறேன். மலையாளத்திலும் தமிழும் பல கதைகளைக் கேட்டு வருகிறேன். எனக்கு பிடித்தமான கதையாக இருந்தால் எழுத்தாளருக்கான அங்கீகாரத்தைக் கொடுத்து சினிமா எடுக்கத் தயாராக இருக்கிறேன்.

- லென்ஸ் திரைப்படத்தில் அந்தரங்கமான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதைப் பற்றி பேசியிருந்தீர்கள், இந்த பத்து ஆண்டுகளில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேமராக்கள் இல்லாமலே இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். இதனால், உங்கள் படைப்பு காலாவதி ஆகிவிட்டது என்பதாக யோசித்தீர்களா? ஒரு கலைஞராக படைப்பு காலம் தாண்டி நிற்க வேண்டும் என்கிற கருத்தோடு உடன்பாடு உண்டா?

எல்லாமே மாறும். ஆனால், உலகில் மாறாதது மனித உணர்வுகள்தான். ஒரு கதை அந்த உணர்வுகளைச் சார்ந்து இருந்தால் மனிதர்கள் இருக்கும் வரை அது இருக்கும்.

- உங்கள் படங்களில் சமூகத்தில் நிகழும் சம்பவங்கள் அல்லது பிரச்னைகள் ஒரு கதைப்பின்புலத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.  நுட்பமான உணர்வுகளை எழுதும் நீங்கள் வன்முறையை முதன்மையாக முன்வைக்கும் படங்களின் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வன்முறையை முன்வைக்கும் கமர்சியல் படங்கள் மிகப்பெரிய வசூல் வெற்றியைக் குவிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான ரசிகர்களும் அந்த மாதிரியான படங்களைத்தான் சினிமா என நினைத்துக் கொள்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள், வணிகம் என எல்லாமே இந்த வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஒரு படத்தை பொறுமையாக அமர்ந்து, சினிமா அனுபவத்தை ரசிக்கும் மனநிலையை மக்கள் இழந்து வருகிறார்களோ எனத் தோன்றுகிறது. இந்தப் படங்களின் வெற்றி, நல்ல கதைகளைக் கொண்டு உருவாகும் படங்களையும் பாதிக்கின்றன. அபூர்வமாகவே குட் நைட், டாடா போன்ற சிறிய படங்கள் தப்பிக்கின்றன.

- ஓடிடி வருகைக்குப் பின் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளியாவதிலிருந்த சிக்கல்கள் குறைந்திருக்கிறதா? அல்லது வேறு பிரச்னைகள் ஏதேனும் இருப்பதாக உணர்கிறீர்களா?

லென்ஸ் வெளிவந்த காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை வாங்க ஓடிடி தளங்கள் முன்வந்தன. ஆனால், கரோனாவுக்குப் பின் ரசிகர்கள் ஓடிடியை அதிகம் பார்ப்பதால் இப்போது பல நல்ல படங்களும் ஓடிடிகளால் வாங்கப்பட்டு வெளியாக வரிசையில் காத்திருக்கின்றன. காரணம், பெரிய பட்ஜெட் படங்களையே ஓடிடிகள் போட்டிபோட்டு வாங்கி முதலில் வெளியிடுகின்றன. அங்கும், வியாபாரமே முதன்மையாகப் பார்க்கப்படுகிறது. 

- இன்று பான் இந்தியப் படங்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களே பல மொழிகளில் வெளியாகிறது. ஆனால், நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்கள் அந்ததந்த மொழிகளிலேயே வெளியாகி பெருவாரியான ரசிகர்களின் பார்வைக்குச் செல்வதில்லை. ஓடிடி அந்தக் குறையை நீக்கியிருந்தாலும் பான் இந்திய வெளியீடாகவே சிறிய படங்களும் வெளியாவதில் என்ன சிக்கல்?

பணம்தான் பிரச்னை. சிறிய படங்களை நம்பி தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்ற மொழிகளில் புரோமோஷன் மற்றும் வெளியீடுகளுக்குச் செய்யும் தொகை திரும்பி வராது என்கிற பயத்தில் இந்த முயற்சியை எடுப்பதில்லை. யாராவது அதிக பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தைரியமாக சிறிய படங்களை பான் இந்திய வெளியீடாகக் கொண்டுவந்தால் நல்லதுதான்.

- சமகாலத்தில் உங்களைப் பாதித்த இயக்குநர்கள் யார்? பிடித்த படம் எது? 

நிறைய நல்ல படங்கள் பாதித்திருக்கின்றன. குறிப்பாக, தார்கோவ்ஸ்கி படங்கள். சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம் என்றால் மம்மூட்டியின் காதல் தி கோர், ட்ரைவ் மை கார் ஆகிய படங்கள்.

- காதல் தி கோர் போன்ற படத்தில் மம்மூட்டி போன்ற உச்ச நட்சத்திரம் நடித்ததைப் பார்த்ததும் என்ன தோன்றியது?

நடிகர் மம்மூட்டி புத்திசாலி. நீண்ட காலமாக சினிமாவை கவனித்து வருபவர். அவரைப் போன்ற மிகப்பெரிய நடிகர் காதல் தி கோர் படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்தது பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தைப் பார்த்தபின் மம்மூட்டி மீது காதல் வந்துவிட்டது. அவருடன் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

- தி கிரேட் இந்தியன் கிட்சன், காதல் தி கோர் படத்தின் மூலம் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, உங்களின் காதல் என்பது பொதுவுடைமை படத்தை வெளியீடு செய்கிறாரே?

நான் இயக்கி, நடித்த மஸ்கிட்டோ ஃபிலாசஃபி படத்தை முபி தளத்தில் வெளியிட்டோம். அதைப் பார்த்துவிட்டு ஜியோ பேபி என்னை அழைத்துப் பேசினார். நல்ல கதை இருந்தால் தயாரிக்க விரும்புவதாகவும் கூறினார். அப்படித்தான் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.

-  திரைவிழாக்களில் காதல் என்பது பொதுவுடைமை படத்துக்கு வரவேற்பு கிடைத்ததா?

படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். தலைக்கூத்தல் போல் இல்லாமல் இப்படம் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கிறேன். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சிறப்பான படமாக இருக்கும்.

-   2024-க்காக என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? 

இயக்கத் திட்டமிட்டிருந்த படத்தை இயக்க வேண்டும். அது மட்டும்தான் திட்டம்!

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘காதல் என்பது பொதுவுடைமை’ புணே சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது. இப்படம் விரைவில், திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com